எது ஆன்மீகம் எது அரசியல் என்பது ஆண்டவனுக்கு தெரியும்… போலியான மாநாட்டுக்கு இறைவன் துணை இருக்க மாட்டார்… அமைச்சர் சேகர்பாபு..!!!
SeithiSolai Tamil June 23, 2025 04:48 PM

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவிலில் குளத்தை சீரமைக்கும் பணியை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதற்காக பொதுநலநிதி மற்றும் திருக்கோயில் நிதி மூலம் ரூபாய் 97 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “தமிழ் கடவுளான முருகனுக்கு இந்த ஆட்சிதான் பெருமை சேர்க்கக்கூடிய ஆட்சி. இதுவரை எந்த ஆட்சியிலும் அனைத்து உலக முத்தமிழ் முருகர் மாநாடு நடத்தப்படவில்லை.

மேலும் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதி ரூபாய் 400 கோடி மதிப்பில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் திமுக ஆட்சி வந்த பின்னர் தான் பழனி தண்டாயுதபாணி, சுவாமி கோவில் உள்பட 117 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து 2000 மூத்த குடிமக்கள் அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டும் அழைத்து செல்லப்பட உள்ளனர். அறுபடை வீடுகள் அல்லாது 143 முருகன் கோவில்களுக்கு ரூபாய் 1085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலமாகவே முருகப்பெருமான் எங்கள் முதலமைச்சர் பக்கத்தில் இருக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும் எது ஆன்மீகம், எது அரசியல் என்பதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். நாங்கள் அறம் சார்ந்த பணிகளான பக்தர்களுக்கு தேவையான வசதிகள், ஆன்மீகப் பணி ஆகியவற்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் அவர்கள் நடத்துகின்ற மாநாடு முழுக்க முழுக்க அரசியல் மாநாடாகும். எனவே இறைவனுக்கு இரண்டையும் வேறுபடுத்தி பார்க்கின்ற ஆற்றல் உண்டு நிச்சயமாக அவர்களுக்கு இறைவன் என்னாலும் துணை இருக்க மாட்டார். மேலும் அனைத்து பக்தர்களுமே மகிழ்ச்சியோடு இருக்கின்ற ஆட்சி திமுக ஆட்சி தான் “என கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.