மும்பை அருகே உள்ள நவி மும்பையைச் சேர்ந்த ஜூய்நகர் பகுதியைச் சேர்ந்த 55 வயதான அனுப் குமார் நாயர், கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக தனது பிளாட்டுக்குள் தனியாக அடைந்திருந்தார். ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்வதன் மூலம் மட்டுமே அவர் வெளி உலகத்துடன் தொடர்பில் இருந்துள்ளார். இவரது தனிமையான வாழ்க்கை, மனச்சோர்வு மற்றும் நம்பிக்கையிழப்பு போன்ற சிக்கல்களில் மூழ்கி இருந்தது.
அனுப்பின் பெற்றோர் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்குள் உயிரிழந்துள்ளனர். இதேபோன்று அவரது மூத்த சகோதரர் 20 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்துள்ளார். இந்த குடும்ப துயரங்கள் அவரது மனநிலையை கடுமையாக பாதித்தன. இதன் விளைவாக, அவர் தன்னை பிளாட்டுக்குள் பூட்டிக் கொண்டு தனிமையில் வாழ்ந்துவந்தார்.
அவரது தாயார் இந்திய விமானப்படையில் பணியாற்றியவராகவும் , தந்தை டாடா மருத்துவமனையில் பணியாற்றியவராகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். அனுப் குமார் கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் இருந்த ஒரு நாற்காலியிலேயே தூங்கிக் கொண்டிருந்ததாகவும், அவருடைய வீட்டில் சுத்தம் செய்யப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அவருடைய உடல் நிலையும் கவலைக்கிடமாக இருந்தது. காலில் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. அவரிடம் யாரும் பேச முடியாத வகையில் மனநிலை சீரழிந்திருந்தது. அன்பிற்கான சமூக மற்றும் சுவிசேஷ சங்கம் (SEAL) என்ற அமைப்பின் உறுப்பினர்கள், ஒரு நல் மனிதரிடமிருந்து தகவல் பெற்று அனுப்பின் வீட்டுக்குள் நுழைந்தனர்.
பன்வேலில் உள்ள SEAL அமைப்பின் ஆசிரமத்திற்கு அனுப்பை அழைத்து சென்று, அவருக்கு உடல்நல பரிசோதனை மற்றும் மனநல சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். அவரைப் பார்த்த மருத்துவர்கள், அவரின் வாழ்நிலை குறித்து அதிர்ச்சியடைந்தனர். மீட்பு மையத்தில் TOI பத்திரிகையிடம் பேசிய அனுப், “எனக்கு இனிமேல் யாரும் நண்பர்கள் இல்லை. என் பெற்றோரும் சகோதரரும் இறந்துவிட்டனர். உடல்நிலை சரியில்லாததால் வேலையும் கிடைக்கவில்லை,” என்று கூறினார்.
இந்த மனச்சோர்வு அவரை சமூகத்திலிருந்தும், குடும்பத்திலிருந்தும் முற்றிலும் விலக்கி வைத்திருக்கிறது. மத்தாய் ஹார்மனி அறக்கட்டளையின் நிறுவனர் ஆபிரகாம் மத்தாய் கூறுகையில், “நெரிசலான நகரங்களில் கூட, சிலர் கடுமையான தனிமையில் வாழ்கிறார்கள். உதவி கேட்க முடியாமலேயே உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அனுப் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டார். ஆனால், ஒவ்வொரு மூடிய கதவுக்குள்ளும் இன்னொரு அனுப் இருக்கக் கூடும்,” என எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.