மகாராஷ்டிராவில் சர்ச்சைக்குரிய மும்மொழிக் கொள்கை தொடர்பான அரசாங்க ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மும்மொழிக் கொள்கையை எந்த வகுப்பிலிருந்து அமல்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய மாநில அரசின் சார்பாக நரேந்திர ஜாதவ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்று கூறிய ஃபட்னாவிஸ், இந்தக் குழுவின் அறிக்கைக்குப் பிறகு, மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
மேலும், "எங்களுக்கு மராத்தி முக்கியம். எங்கள் கொள்கை மராத்தியை மையமாகக் கொண்டது, அதில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை" என்று ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.
நரேந்திர ஜாதவ் தலைமையிலான குழு"இந்தப் பிரச்னையில் தவறான அரசியல் நடக்கிறது. எனவே, இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதித்தோம். எந்த வகுப்பிலிருந்து இந்த கொள்கையை செயல்படுத்த வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எந்த மொழியைப் பயன்படுத்த வேண்டும், மும்மொழிக் கொள்கை தொடர்பாக குழந்தைகளுக்கு என்னென்ன வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய நரேந்திர ஜாதவ் தலைமையில் மாநில அரசு சார்பாக ஒரு குழு அமைக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது" என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் குறிப்பிட்டார்.
"இந்தக் குழுவின் அறிக்கை வந்த பிறகே மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படும். அதனால், 2025ம் ஆண்டு ஏப்ரல் 16 மற்றும் ஜூன் 17 ஆகிய தேதிகளில் வெளியான இரு அரசு உத்தரவுகளையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். புதிய குழு, மும்மொழிக் கொள்கையைச் சுற்றியுள்ள அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்யும்" என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்தார்.
"இந்தக் குழு மும்மொழிக் கொள்கை குறித்து மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட மக்களின் கருத்துகளையும் கேட்கும். அதன் பிறகு, எங்கள் மாணவர்களின் நலனுக்காக ஒரு முடிவை எடுக்கும். மாநில அரசு அந்த முடிவை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப மேலும் நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
மராத்தி (மொழி) மற்றும் மராத்தி மாணவர்கள் மட்டுமே எங்களுக்கு முக்கியம். எங்கள் கொள்கை மராத்தியை மையமாகக் கொண்டது, மராத்தி மாணவர்களை மையமாகக் கொண்டது. இதில் நாங்கள் எந்த அரசியல் செய்ய விரும்பவில்லை" என்று ஃபட்னாவிஸ் குறிப்பிட்டார்.
"மராத்தி மக்களின் அதிகாரத்தின் முன் அரசாங்கம் தோற்றுவிட்டது. சம்யுக்த மகாராஷ்டிரா காலத்திலும் இதேபோன்ற இயக்கம் நடந்தது, அந்த நேரத்திலும் கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்று சேர்ந்தனர். அப்போது, இந்த சதியை நாங்கள் முறியடித்தோம், அதேபோல், இந்த முறையும் இந்த சதியை முறியடித்தோம்" என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
மராத்தி மக்களைப் பிரித்து அமராதி வாக்குகளை ஈர்க்க அரசாங்கம் ஒரு மறைக்கப்பட்ட செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. ஆனால், நாங்கள் மொழியை எதிர்க்கவில்லை, அதனை திணிப்பதைத் தான் எதிர்க்கிறோம் என்ற நியாயமான நிலைப்பாட்டை மராத்தி மொழி பேசும் மக்கள் எடுத்தனர்.
எனவே, மராத்திக்கும் அமராதிக்கும் இடையில் எந்தப் பிரிவும் இல்லை.
இந்தப் பிரிவு தங்களுக்கு நன்மை தரும் என்று அரசாங்கம் நினைத்தது. ஆனால் இன்றைய போராட்டத்துக்குப் பிறகு, ஜூலை 5ஆம் தேதி நடைபெறவிருந்த பேரணி தடுக்கப்படவும், மராத்தி மக்கள் ஒன்று கூடாமல் இருக்கவும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாஜக பொய்கள் மற்றும் வதந்திகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாறிவிட்டது. பொய்யான வழிகளில் வெற்றி பெறுவது பாஜகவின் தொழிலாகிவிட்டது. மராத்தி மக்கள் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.
நெருக்கடி வந்த பிறகுதான் ஒன்றாகச் சேர வேண்டுமா? என்கிற கேள்வியுடன் நான் மராத்தி மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஜூலை 5ஆம் தேதி, மொழித் திணிப்புக்கு எதிராக ஒரு பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் இப்போது, அதை வெற்றிப் பேரணியாக மாற்றி, அதன் வடிவத்தை முடிவு செய்யப் போகிறோம். இந்த இயக்கத்தின் போது ஒன்றாகக் கூடிய அனைத்து கட்சிகளும், ஜூலை 5ஆம் தேதி என்ன செய்ய வேண்டும் என்பதை சேர்ந்து முடிவு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
"அந்தக் குழுவுக்கு எந்த அர்த்தமும் இல்லை. யார் குழுவை நியமித்தாலும், அவர்கள் எங்களை கட்டாயப்படுத்த முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. யார் நியமித்தாலும், அவர்கள் எங்களை வற்புறுத்த அனுமதிக்க முடியாது. ஜூலை 5ஆம் தேதி ஒரு கூட்டம் அல்லது பேரணி இருக்கும். மராத்தி மக்களே, இப்போது உறங்க வேண்டாம். நாம் ஒன்றாக இணைத்துள்ளோம் . ஒன்றாகவே முன்னேறுவோம்" என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
"மஷேல்கர் குழு அறிக்கையைப் பற்றி பேசும் பாஜகவுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன் 'ரூமர் பேக்டரி' என்ற திரைப்படத்தை தயாரித்து, அதன் போஸ்டரில் தேவேந்திர ஃபட்னாவிஸின் புகைப்படத்தை வையுங்கள்" என்று மஷேல்கர் கமிட்டி அறிக்கை குறிப்பிட்டதாக உத்தவ் தாக்கரே கூறினார்.
"முதலமைச்சருக்கு மராத்தி மொழி புரியுமா? இந்தக் குழு முதலில் உயர் கல்விக்காகவே நியமிக்கப்பட்டது. அப்போது உதய் சமந்த் உயர்கல்வி அமைச்சராக இருந்தார். அந்தக் குழுவில் தொடக்கக் கல்வி தொடர்பான யாரும் இல்லை. இந்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதை செயல்படுத்த வேண்டுமா, இல்லையா என்பதை முடிவு செய்ய எனது தலைமையில் ஒரு ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் எங்கள் அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டதால், அந்த அறிக்கையின் பக்கத்தைக் கூட என்னால் திருப்ப முடியவில்லை. முதலமைச்சர் மராத்தியை கற்றுக்கொண்டு, அதைப் படித்த பிறகுதான் விமர்சிக்க வேண்டும். ஏனெனில் நான் அந்த அறிக்கையை இன்னும் படிக்கவே இல்லை" என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
மேலும், "தேசிய கல்விக் கொள்கையை ஆய்வு செய்வதற்காக அந்தக் குழு நியமிக்கப்பட்டது. அந்த அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு உருவாக்கப்பட்ட ஆய்வுக் குழு ஒரு கூட்டத்தைக் கூட நடத்தவில்லை. அந்த அறிக்கையில் என்ன இருந்தாலும், இந்தியை கட்டாயமாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அந்த நேரத்தில் அவர்கள் துரோகம் செய்து எங்கள் அரசாங்கத்தை கவிழ்த்தனர்" என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
"ஒரு நெருக்கடிக்குப் பிறகு ஒன்று சேர்வதற்குப் பதிலாக, அது நடப்பதற்கு முன்பு நாம் ஒன்று சேர்ந்தால், எந்த நெருக்கடியும் இருக்காது. தாக்கரே சகோதரர்கள் ஒன்றிணைவார்கள் என அரசாங்கம் பயந்ததால் தான் இந்த உத்தரவை ரத்து செய்தது" என்று தாக்கரே கூறினார்.
இந்தி பற்றிப் பேசிய உத்தவ் தாக்கரே, "நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தி பேசும் மாநிலங்களில் இந்திக்கும், குஜராத்தில் குஜராத்திக்கும், மகாராஷ்டிராவில் மராத்திக்கும் நீதி கிடைக்க வேண்டும். மக்களுக்கு ஆதரவானவர்கள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் இவர்கள் தங்களை சாணக்கியர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்" என்றார்.
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவும் இந்த விவகாரம் தொடர்பான சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
"ஒன்றாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகளைக் கற்பித்தல் என்ற பெயரில் இந்தி மொழியைத் திணிக்கும் முடிவு நிரந்தரமாகத் திரும்பப் பெறப்பட்டது. இது தொடர்பாக, அரசாங்கம் இரண்டு அரசாணைகளை ரத்து செய்துள்ளது. இதைத் தாமதமாக பெறப்பட்ட ஞானம் என்று சொல்ல முடியாது, ஏனெனில் மராத்தி மக்களின் எதிர்ப்பினால் மட்டுமே இது திரும்பப் பெறப்பட்டது" என்று ராஜ் தாக்கரே பதிவிட்டுள்ளார்.
அரசாங்கம் இந்தி மொழியை இவ்வளவு பிடிவாதமாக திணிக்க முயன்றதற்கும், அதற்கான அழுத்தம் எங்கிருந்து வந்தது என்பதும் இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது.
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா சார்பில் ஒரு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்ட போது, பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் அதில் பங்கேற்கத் தயாராக இருந்தன. அந்தப் பேரணி நடந்திருந்தால், அது மிகப் பெரிதாக இருந்திருக்கும். அது சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்தின் நாட்களை நமக்கு நினைவூட்டியிருக்கும். ஒருவேளை இந்த ஒற்றுமையால் அரசாங்கம் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் பரவாயில்லை. அப்படி ஒரு பயம் இருக்கவேண்டும்" என்று ராஜ் தாக்கரே கூறினார்.
ராஜ் தாக்கரே தொடர்ந்து பேசுகையில், "இன்னொரு விஷயம், அரசாங்கம் மீண்டும் ஒரு புதிய குழுவை நியமித்துள்ளது. அந்தக் குழு அறிக்கை வெளிவருகிறதோ, இல்லையோ, ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் சகித்துக்கொள்ளப்படாது. அரசாங்கம் இதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். இந்த முடிவு நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம், மகாராஷ்டிர மக்களும் அவ்வாறே எண்ணுகின்றனர். " என்றும் அவர் கூறினார்.
தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவால் மும்பையில் நேற்று (ஜூன் 30) ஒரு அடையாள ஹோலி போராட்டம் நடத்தப்பட்டது.
வரும் வாரத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா மற்றும் சிவசேனா (தாக்கரே) ஆகியவை ஒன்றிணையும், இதன் விளைவாக, ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரும் 'இந்தி சக்தி'யை எதிர்க்க ஒன்றிணைவார்கள்.
ஏற்கெனவே, தாக்கரே சகோதரர்களின் கூட்டு இயக்கம் உட்பட இந்தி மொழி திணிப்பு தொடர்பான பிரச்னை மகாராஷ்டிரா அரசியலைக் கிளறி வருகிறது.
தேசிய கல்விக் கொள்கையின்படி, மகாராஷ்டிராவில் முதலாம் வகுப்பிலிருந்தே மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவும், இந்தி மொழியை மூன்றாம் மொழியாக 'கட்டாயமாக்க'வும் மாநில அரசு ஏப்ரல் மாதம் முடிவு செய்தது.
இருப்பினும், மாநிலம் முழுவதிலுமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, அரசாங்கம் அதே மாதத்தில், ஜூன் மாதத்தில் 'கட்டாய' என்ற வார்த்தையை திரும்பப் பெற்று, 'பொது' என்ற வார்த்தையைச் சேர்த்து திருத்தப்பட்ட அரசாங்க முடிவை வெளியிட்டது.
இருப்பினும், மூன்றாவது மொழியைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
இந்த நிபந்தனைகள், 'மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்காமல் வேறு இந்திய மொழியைக் கற்க விருப்பம் இருந்தால், ஒப்புதல் வழங்கப்படும். இருப்பினும், இந்த மொழியைக் கற்க விரும்புவோரின் எண்ணிக்கை குறைந்தது 20 ஆக இருக்க வேண்டும், அப்போதுதான் ஒரு ஆசிரியர் கிடைக்கப் பெறுவார், இல்லையெனில் அது ஆன்லைனில் கற்பிக்கப்படும்.'
இந்த 'திருத்தப்பட்ட' அரசாங்க முடிவுக்கு கல்வித் துறை வல்லுநர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு