மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் மொங்ஜாங் என்ற கிராமம் உள்ளது. நேற்று இந்த கிராமத்தின் அருகே மதியம் 2 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரை சில மர்ம நபர்கள் வெகு நேரமாக பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் காரின் அருகே வந்தபோது திடீரென காரில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.
அதில் காரில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது 60 வயது பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. பின்னர் அந்த இடத்தில் 12 க்கும் மேற்பட்ட காலி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டது. அதோடு மர்மநபர்கள் தானியங்கி ஆயுதங்கள் மூலம் காரில் இருந்தவர்களை கொலை செய்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் குகி பயங்கரவாத குழுவின் துணைத் தலைவர் என்றும், 2 பேர் குகி தேசிய ராணுவத்தின் உறுப்பினர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த குழுவானது குகி தேசிய அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் 17 குழுக்களில் ஒன்று என்று கூறப்படுகிறது.
இவர்களை ஐக்கிய குகி தேசிய விடுதலை ராணுவ குழுவானது பழிவாங்கும் நோக்கத்தில் சுட்டுக் கொன்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான செய்தி வாட்ஸ்அப் குழுக்களில் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் சம்பவம் நடந்த பகுதியில் காவல் துறையினர் மற்றும் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.