மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த வருடம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் தற்போது கொல்கத்தாவில் ஒரு சட்ட கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவியை 3 மாணவர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் தற்போது அவர்கள் மூவரையுமே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி மனோஜ் மிஸ்ரா (30), பிரமித் முகர்ஜி (20), ஜைப் அகமது (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மனோஜித் மிஸ்ரா முன்னாள் மாணவராக இருக்கும் நிலையில் மற்ற இருவரும் தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆவார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தற்போது கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாணவியை காவலாளியின் அறையில் வைத்து அவர்கள் பலாத்காரம் செய்த நிலையில் காவலாளியையும் கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான மனோஜ் மிஸ்ரா மீது ஏராளமான பாலியல் புகார்கள் குவிந்து வருகிறது. இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவரணி செயலாளராவார். இந்த மாணவியை மருத்துவர்கள் சோதனை செய்தபோது உடம்பில் பல இடங்களில் கடித்து வைத்தது மற்றும் நகக்கீறல்கள் இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே அவரை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்வதற்கு மனோஜ் மிஸ்ரா சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. அவர்கள் மூவரும் பல நாட்களாக மாணவியை பலாத்காரம் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் அன்றைய தினம் நேரம் பார்த்து அவரை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்தனர்.
இவர்கள் மூவரும் ஏற்கனவே அந்த கல்லூரியில் படிக்கும் வேறு சில மாணவிகளிடமும் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் 9 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். மேலும் மாணவிகளை வீடியோ எடுத்து மிரட்டுவதையும் இவர்கள் வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படும் நிலையில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளிலும் சோதனைகள் நடைபெறுகிறது.