பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாடு இனி மேலும் கடுமையாக இருக்கும் என்று மத்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அவர் இந்த தகவலை கூறியுள்ளார்.
பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் ஒரு பொருளாதார போர் நடவடிக்கை எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். காஷ்மீரின் முக்கிய வருமான ஆதாரமாக இருந்த சுற்றுலாத்துறையை வீழ்த்தும் நோக்கத்துடன் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதல் மத வன்முறையைத் தூண்டும் வகையிலும் அமைந்தது என்றும், பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு முன் தங்கள் அடையாளங்களை உறுதிப்படுத்தக் கூறப்பட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பயங்கரவாதிகள் தண்டனையின்றி செயல்பட முடியாது என்பதை இந்தியா தெளிவாக கூறியுள்ளது. அவர்கள் எல்லையின் அடுத்த பக்கத்தில் இருந்தாலும்கூட, இந்தியா அதை பொருட்படுத்தாது. பயங்கரவாத அமைப்புகளை இனி விட்டு வைக்க மாட்டோம். தேவையானால் மீண்டும் தாக்குவதற்கும் தயங்கமாட்டோம்,” என ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
மேலும், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரும் வரை பாகிஸ்தானுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். “பயங்கரவாதிகளை இனிமேல் அரசியல் பிரதிநிதிகளாக கையாள மாட்டோம். அவர்களுக்கு நிதி உதவி, பயிற்சி, மற்றும் ஆதரவு வழங்கும் அரசுகளை கூட விட்டுவைக்க மாட்டோம்,” என அவர் குரல் கொடுத்துள்ளார்.
இந்தியாவின் இந்நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் உறுதியாக அறிவித்த எச்சரிக்கையாக உள்ளது என அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.