காருக்குள் வைத்து மது அருந்திய 2 சகோதரர்கள்….. மூச்சுத் திணறி உயிரிழந்த பகீர் சம்பவம்…. வீடியோ வெளியாகி பரபரப்பு….!!
SeithiSolai Tamil July 01, 2025 11:48 PM

ஆந்திர மாநிலம் கோவிந்தப்பா கண்டிகை பகுதியில் திலீப் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். அப்பகுதியில் கேஸ் சிலிண்டரை டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய சகோதரர் வினய் (20).இவர் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் திருச்சானூர் அருகே உள்ள கலுவ கட்டா பகுதிக்கு சென்றனர்.

அங்கு தாங்கள் சென்ற காரை பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு காருக்குள்ளே குடிக்க ஆரம்பித்தனர். ஏசியை ஆன் செய்துவிட்டு மது அருந்த ஆரம்பித்த அவர்கள் அதிக அளவில் குடித்ததால் மதுபோதையில் இருந்தனர். அப்போது காரின் உள்ளே ஓடிக்கொண்டிருந்த ஏசி பெட்ரோல் தீர்ந்து போனதால் நின்றுவிட்டது. எனவே காரின் உள்ளே காற்றோட்டம் இல்லாத நிலையில் சகோதரர்கள் இருவரும் வெளியே வர முடியாமல் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர்.

காரின் மேலே பிளாஸ்டிக் கவர் மூடப்பட்டிருந்ததால் அவர்கள் உள்ளே இருந்தது வெளியே தெரியவில்லை. இதை தொடர்ந்து திலீப்பின் தந்தை மறுநாள் காலை காரின் மீது இருந்த கவரை அகற்றியபோது மகன்கள் இருவரும் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சகோதரர்கள் 2 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் மது போதையில் காரின் உள்ளே இருந்து கொண்டு ஏசியை ஆன் செய்துவிட்டு தூங்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே குடிமகன்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் கூறினர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.