திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில், 25 வயது பிரியான்ஷு என்பவரை அவரது புதுமண மனைவி குஞ்சா தேவி சதி செய்து கொலை செய்திருக்கும் சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி, தன் சொந்த மாமா ஜீவன் சிங்கை திருமணம் செய்ய விரும்பிய குஞ்சா, தனது கணவரை உடனடியாக விலக்க துப்பாக்கி சூடு நடத்தி கொலையை நிகழ்த்தியுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் விசாரணையில், 20 வயதான குஞ்சா தேவியும், 55 வயதான ஜீவன் சிங்கும், பல வருடங்களாக காதலித்துவந்துள்ளனர். ஆனால் குடும்பத்தினர் அதனை ஏற்க மறுத்ததால், தேவிக்கு இரண்டு மாதங்களுக்கு முன், பர்வான் கிராமத்தைச் சேர்ந்த பிரியான்ஷுவுடன் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜூன் 25-ஆம் தேதி, தனது சகோதரியை பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பிரியான்ஷு, நவிநகர் ரயில்நிலையம் அருகே இரண்டு பேர் தாக்கியதில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் விரைவாக விசாரணையைஆரம்பித்தனர். அந்த விசாரணையில்தேவி மற்றும் இரு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஜீவன் சிங்கை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தேவியின் அழைப்புப் பதிவு மற்றும் மாமாவின் தொடர்புகள், அவர்களது திட்டமிட்ட சதியை உறுதிப்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலைக்காக பணம் கொடுத்து கூலி ஆட்களை அமர்த்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது. பிரியான்ஷுவின் குடும்பத்தினர் மரணத்தில் அநியாயம் நடந்துள்ளதாக கூறி போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். மே மாதத்தில் நடந்த மேகாலயா தேனிலவு கொலை வழக்கை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம், “காதல்” என்ற பெயரில் நம்பிக்கையின் அ ழிவாக மாறும் சமூக நிலையை சுட்டிக்காட்டுகிறது. மேலும் மாமாவுடன் திருமண பந்தம் அமைக்க கணவரை திட்டமிட்டு கொலை செய்த இந்த சம்பவம், நாட்டின் பல இடங்களில் பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.