தலாய் லாமா தனது 90வது பிறந்தநாளை ஜூலை 6ஆம் தேதி கொண்டாடுகிறார்.
திபெத்திய பௌத்தத்தின் ஆன்மீகத் தலைவராக மட்டுமல்லாமல், சீன ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பின் முகமாகவும் பலர் அவரைப் பார்க்கிறார்கள்.
ஆனால் ஒவ்வொரு ஆண்டு கடந்து செல்லும்போதும், அடுத்த தலாய் லாமாவாக யார் வருவார்கள் என்ற சர்ச்சைக்குரிய கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.
அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுப்பது, மறுபிறவியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீக செயல்முறை என்று அவரைப் பின்பற்றும் மக்கள் நம்புகிறார்கள்.
தலாய் லாமா என்றால் யார் ?திபெத்தின் ஆன்மீகத் தலைவராகவும், திபெத்திய பௌத்தத்தின் மிகச் சிறந்த முகமாகவும், தலாய் லாமா அவரைப் பின்தொடர்பவர்களால் பார்க்கப்படுகிறார்.
அவரை, திபெத்தின் பாதுகாவலராகக் கருதப்படும் தெய்வமான அவலோகிதேஸ்வரா (அல்லது சென்ரெசிக்) என்பவரின் மனித உருவாகவே அவர்கள் பார்க்கிறார்கள்.
தலாய் லாமாவின் பாத்திரம், பல நூற்றாண்டுகளாக மறுபிறவி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நிரப்பப்பட்ட ஒன்று.
காரணம்,யாராவது இறந்தால், அவர்கள் மீண்டும் பிறப்பார்கள் என்பது பௌத்த நம்பிக்கையாக உள்ளது.
தற்போதைய தலாய் லாமா 1935 ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி, வடகிழக்கு திபெத்தில் உள்ள ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
அவருக்கு இரண்டு வயது இருக்கும் போது, அவர் 13வது தலாய் லாமாவின் மறுபிறவியாக அங்கீகரிக்கப்பட்டார்
"தலாய் லாமாவின் அதே ஆன்மா மீண்டும் மீண்டும் பிறக்கிறது என்று திபெத்தியர்கள் நம்புகிறார்கள்" என்கிறார் முனைவர் துப்டன் ஜின்பா.
முனைவர் துப்டன் ஜின்பா ஒரு முன்னாள் துறவி. அவர் திபெத்திய பௌத்தத்தில் மிக உயர்ந்த இறையியல் தகுதியை அடைந்துள்ளார்.
மேலும் அவர் 1985 முதல் தலாய் லாமாவின் அதிகாரப்பூர்வ ஆங்கில மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
எல்லா தலாய் லாமாக்களும் ஒரே ஆன்மாவின் தொடர்ச்சியாக இருக்கிறார்கள் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக இருந்தாலும் , தற்போதைய தலாய் லாமா, இந்த நம்பிக்கையை அப்படியே உண்மையாக எடுத்துக்கொள்வது போலத் தெரியவில்லை என்று முனைவர் துப்டன் கூறுகிறார்.
"14 பேரும் ஒரே நபரின் மறுபிறவி என்று தலாய் லாமா நம்புகிறார் என்று சொல்ல முடியாது, சில சந்தர்ப்பங்களில், அவரே இதை நேரடியாக நம்பவில்லை என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன்," என்று பிபிசியிடம் கூறிய ஜின்பா, "ஆனால் அந்த பரம்பரையில் உள்ள ஒவ்வொருவருக்கும், தலாய் லாமா மரபுடன் ஒரு தனித்துவமான ஆன்மீக தொடர்பு இருக்கிறது என்று அனைவரும் நம்புகிறார்கள்," என்றும் கூறினார்.
பௌத்தம் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பழமையான மதமாக இருக்கிறது. ஆனால் தலாய் லாமா என்ற பதவியும், அதனைச் சுற்றியுள்ள அமைப்பும் சமீபத்தில் உருவானதுதான்.
"முதல் தலாய் லாமாவாக 1391-ல் பிறந்த கெதுன் ட்ருப் என்ற நபர் என்று அங்கீகரிக்கப்பட்டார். ஆனால், ஒரு பௌத்த ஆசிரியர் மறுபிறவி எடுத்து, தங்கள் முன்னோடியின் சொத்துகளையும், அவரைப் பின்பற்றுவபர்களையும் மரபுரிமையாகப் பெறுவார் என்ற சிந்தனை அதைவிட பழமையானது," என்கிறார் அபெர்டீன் பல்கலைக்கழகத்தின் இமயமலை ஆராய்ச்சிக்கான ஸ்காட்டிஷ் மையத்தின் இயக்குனர் பேராசிரியர் மார்ட்டின் ஏ மில்ஸ்.
"அந்த நம்பிக்கை குறைந்தபட்சம் 300 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது" என்று பேராசிரியர் மார்ட்டின் ஏ. மில்ஸ் கூறுகிறார்.
"தலாய் லாமாவைத் தேர்வு செயல்முறை மிகவும் கடுமையானது, சிக்கலானது மற்றும் விரிவானது" என்று ஜின்பா விளக்குகிறார்.
ஒரு தலாய் லாமாவை அடையாளம் காணும் செயல்முறைக்கு பல ஆண்டுகள் ஆகலாம். உதாரணமாக, 14வது தலாய் லாமாவை அடையாளம் காண நான்கு ஆண்டுகள் எடுத்தது.
முந்தைய தலாய் லாமா இறந்த பிறகு, அந்த நேரத்தில் பிறந்திருக்கக்கூடிய ஒரு சிறுவனைத் தேடுவதற்காக உயர்மட்ட துறவிகள் தங்களது தேடலைத் தொடங்குகிறார்கள்.
இந்த தேடல் பல துப்புகள் மற்றும் ஆன்மீக அறிகுறிகளால் வழிநடத்தப்படுகிறது.
துறவிகளில் ஒருவருக்கு வரும் கனவில் தலாய் லாமாவின் மறுபிறவியாக இருக்கக்கூடிய சிறுவனைப் பற்றிய தகவல்களைப் பெறலாம்.
முந்தைய தலாய் லாமாவின் இறுதிச் சடங்கில் எழும் புகையின் திசையும், மறுபிறவி எங்கு இருக்கக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு அறிகுறியாகக் கருதப்படுகிறது.
சிறுவனின் இருப்பிடம் கண்டறியப்பட்டவுடன், அவனிடம் பல பொருட்கள் காட்டப்படுகின்றன.
அவற்றில் சில, முந்தைய தலாய் லாமாவுக்குச் சொந்தமானவையாக இருக்கும். அந்த சிறுவன் அவற்றை சரியாக அடையாளம் காண்பதால், துறவிகள் அதை மறுபிறவியின் உறுதியான அறிகுறியாகக் கருதுகிறார்கள்.
உயர்மட்ட துறவிகள் திருப்தி அடைந்தவுடன், சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல ஆண்டுகளாக மதப் பயிற்சி மற்றும் இறையியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவான்.
ஒருவர் மங்கோலியாவிலும் மற்றொருவர் வடகிழக்கு இந்தியாவிலும் என இரண்டு தலாய் லாமாக்கள் மட்டுமே திபெத்துக்கு வெளியே பிறந்துள்ளனர்.
தற்போதைய தலாய் லாமா, தனக்கு 90 வயது ஆகும் இந்த மாதத்தில், தனது வாரிசு குறித்து மேலும் தெளிவுபடுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
1950-ஆம் ஆண்டு, திபெத்தின் மீது உரிமை கோர சீனா ஆயிரக்கணக்கான படைகளை அனுப்பியது. 1959-ஆம் ஆண்டு, சீனாவுக்கு எதிரான எழுச்சி தோல்வியடைந்த பிறகு, தலாய் லாமா திபெத்திலிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்தார். அங்கு அவர் திபெத்தியர்களுக்காக ஒரு நாடு கடந்த அரசாங்கத்தை அமைத்தார்.
தலாய் லாமா திபெத்திய அரசாங்கத்தின் தலைமை பதவியில் இருந்து விலகியிருந்தாலும், அவர் இன்னும் சீன ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பின் முகமாகவே பார்க்கப்படுகிறார்.
திபெத்தில் அல்லாமல் வேறு நாட்டில் மறுபிறவி எடுப்பேன் என்ற தலாய் லாமாவின் கூற்று, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைக்கு எதிரான ஒரு நடைமுறை தீர்வாகவே பார்க்கப்படுகிறது.
மதத்தின் போர்வையில் சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் எனக் கூறி, திபெத்திலிருந்து வெளியேறிய அரசியல் தலைவர் என்று தலாய் லாமாவை சீன அரசு நிராகரிக்கிறது.
2007 ஆம் ஆண்டில், சீன அரசு 'திபெத்திய பௌத்தத்தில் வாழும் புத்தர்களின் மறுபிறவி மேலாண்மை நடவடிக்கைகள்' என்ற பெயரில் ஒரு ஆணையை வெளியிட்டது. இந்த ஆணை, அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது எனக் கருதப்பட்டது.
திபெத்தின் மீதான அழுத்தம்சாதாரண திபெத்தியர்கள், வெளிநாட்டு பத்திரிகையாளர்களுடன் பேசினாலோ அல்லது தலாய் லாமாவின் புகைப்படத்தை காட்டினாலோ, சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஒரு திபெத்திய பிரச்சாரகரின் உதவியுடன், திபெத்தில் வசிக்கும் இரண்டு துறவிகளையும், புத்த மதத்தை பின்பற்றும் ஒருவரையும் பிபிசியால் தொடர்புகொண்டு பேச முடிந்தது.
தலாய் லாமாவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
"என் கிராமத்தில் இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்தக் கூட்டங்களில் தலாய் லாமாவை அவமதித்தார்கள், மேலும் அங்கு இருந்த அனைவரையும் கடுமையாக எச்சரித்து, மோசமான விளைவுகள் ஏற்படும் என அச்சுறுத்தினார்கள்," என திபெத்தின் அம்டோ பகுதியில் வசிக்கும் நடுத்தர வயதுடைய ஒருவர் கூறுகிறார். அவர் தனது பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
அடுத்து வரவுள்ள முக்கிய தினத்தை முன்னிட்டு, சீன போலீசாரும் ராணுவத்தினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் நம்புகிறார்.
"மடத்திலும் அதைச் சுற்றியும் அதிகமான வீரர்கள் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்," என்று அவர் கூறுகிறார்.
சீன அரசு கட்டுப்பாடுகளை விதிப்பதால், சிலரால் தலாய் லாமாவுடன் நெருக்கமாக உணர முடியவில்லை என்றும் அவர் நம்புகிறார்.
"பல இளைஞர்கள் தலாய் லாமாவை ஒருபோதும் நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அதற்கு முரணாக, அவரைப் பற்றிய தகவலை அவர்கள் [சீன] அரசின் பிரச்சார ஆவணங்களிலிருந்து மட்டுமே கேட்கிறார்கள்," என்கிறார் அந்த நபர்.
தொடர்ந்து பேசியபோது, "வயதானவர்களுடன் ஒப்பிடும்போது இளைஞர்களின் நம்பிக்கை பலவீனமானது"என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல திபெத்திய மடங்கள் தொடர்ந்து சீன அரசின் கண்காணிப்பில் உள்ளன. ஆனால், சிலர் இன்னும் அந்த மதத்துக்கான ஆடைகளை வெளிப்படையாகப் புலப்படும் வகையில் அணிந்து, மத வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்."
"நான் என் பெற்றோரின் விருப்பப்படி சிறுவயதிலேயே துறவியாக ஆனேன்," என்கிறார் செரிங் (அவரது உண்மைப் பெயர் மாற்றப்பட்டுள்ளது).
46 வயதான இவர் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் ஏழு வயதிலேயே துறவியானார்.
சீனா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளின் காரணமாக, மக்கள் துறவியாக மாற 18 வயது வரை காத்திருக்க வேண்டும். இதன் விளைவாக, மடங்களில் துறவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
"மடத்தில் புதிய துறவிகள் குறைந்து வருகிறார்கள்," என்று கூறும் அவர்,
"இந்த ஆண்டு, என் மடத்தில் மூன்று புதிய துறவிகள் மட்டுமே வந்துள்ளனர். முந்தைய ஆண்டுகளைப் போலவே, மற்ற கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து படிக்கவும் வழிபடவும் வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது" என்றும் குறிப்பிட்டார்.
திபெத்திய கலாச்சார அழிவின் பொருட்டு கிடைத்தது தான் சீன ஆட்சியின் பொருளாதாரப் பலன்கள் என்று செரிங் கூறுகிறார்.
"சிறுவயதில் எனக்கு உணவுக்கே சிரமமாக இருந்தது. மடத்தில் சில நேரங்களில் மோசமான உணவையே உண்ண வேண்டியிருந்தது," என்ற அவர், "பின்னர் வாழ்க்கை எளிதாகியது. போக்குவரத்து வசதிகள் பெரிதும் மேம்பட்டன. கல்வி வளர்ச்சியும் ஏற்பட்டது." எனவும் தெரிவித்தார்.
ஆனால், "திபெத்திய மொழியின் பயன்பாடு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது போலத் தெரிகிறது" என்றும் அவர் கூறுகிறார்.
அம்டோ நகாபா மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு துறவி ஒருவரை நாங்கள் 'கோன்போ கியாப்' என்று அழைக்கிறோம். "நான் நிறைய மாற்றங்களை காண்கிறேன். ஆனால் அதை வளர்ச்சி என்று அழைப்பது கடினம்" என்கிறார் கோன்போ கியாப்.
தொடர்ந்து பேசிய அவர், "எனது புரிதலின் படி, திபெத்திய மொழியும் எழுத்தும் பௌத்த மரபுகள் மற்றும் பழக்கவழக்கத்தால் மட்டுமே நிலைத்திருக்கின்றன என்கிறார்.
தலாய் லாமா பதவியின் 600 ஆண்டுகள் பழமையான ஆன்மீக மரபு தொடர வேண்டும் என்று 14வது தலாய் லாமா உறுதியாகக் கூறுகிறார்.
தனது வாரிசுகளைத் தேர்ந்தெடுப்பதில் சீனா தலையிடுவதைத் தடுக்க, எதிர்காலத்தில் சீன அரசு நியமிக்கும் ஒருவரை நிராகரிக்குமாறு தன்னைப் பின்பற்றுபவர்களிடம் தலாய் லாமா ஏற்கனவே கூறியுள்ளார்.
"மக்கள் அமைதியாக நடந்து கொள்வார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் உயிரை இழக்க விரும்பவில்லை. ஆனால், சீன அரசு நியமிக்கும் தலாய் லாமாவை அவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்," என்று முனைவர் ஜின்பா கூறுகிறார்.
"சீனாவால் மக்களை உடல் ரீதியாக கட்டுப்படுத்த முடியும், ஆனால் திபெத்தியர்களின் இதயங்களையும் மனதையும் வெல்ல முடியாது," என்றும் அவர் தெரிவித்தார்.
திபெத்தில் "செர்ஃப்கள் மற்றும் அடிமைகள்" ஒரு பிற்போக்கான இறையாட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்ற கண்ணோட்டத்தை சீனா தொடர்ந்து ஊக்குவிக்க முயற்சிக்கிறது.
அதே நேரத்தில், திபெத்தை நவீனமயமாக்கும் பாதையில் கொண்டு சென்றதாகவும், மக்களின் வாழ்க்கையை பெரிதும் மேம்படுத்தியதாகவும் கூறுகிறது.
ஆனால் தலாய் லாமாவின் ஆதரவாளர்கள், திபெத்திய பௌத்தத்தின் தலைமை சீன அரசின் கட்டுப்பாட்டில் செல்லாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து செயல்படுவார்கள்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு