“50 வருஷத்துக்கு முன் காதல் திருமணம்”… வேறு ஜாதி நபரை மணந்ததால் ஆயுசு முழுவதும் புறக்கணிப்பு… இறப்பில் கூட நிம்மதி இல்லை… 80 வயது மூதாட்டியின் வேதனை வாழ்க்கை..!!!!
SeithiSolai Tamil July 03, 2025 06:48 PM

ஒடிசா மாநிலம் தேவ்கர் மாவட்டத்தில் உள்ள ஜரைகேலா கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பசந்தி மஹாகுட் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இவர், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, தனது சாதியைவிட்டு வேறு சாதியைச் சேர்ந்த லோக்நாத் மஹாகுட் என்பவரை காதலித்து திருமணம் செய்ததையடுத்து, சமூகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டவர். இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை என்றும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்த பின்னர் பசந்தி தனிமையில் வாழ்ந்து வந்தார். அவரது உடல் வீட்டு தரையில் பல மணி நேரம் யாரும் கவனிக்காமல் கிடந்தது.

பசந்தியின் உடல்நிலை கடந்த சில மாதங்களாக சரியில்லாத நிலையில் இருந்ததால், அக்கம்பக்கத்தினர் அவ்வப்போது உதவி செய்துவந்தனர். செவ்வாய்க்கிழமை, உணவு வழங்க வந்த அக்கம்பக்கத்தினர் அவரை உயிரிழந்த நிலையில் கண்டனர். உடனடியாக கிராம மக்கள் மற்றும் அவரது சமூக உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் இறுதிச் சடங்கில் பங்கேற்க முன்வரவில்லை. சமூக புறக்கணிப்பு, மரணத்திலும் தொடர்ந்ததோடு, அவரது உடல் உரிமை கோரப்படாமல் இருந்தது மிகவும் வருத்தமளிக்கிறது.

இதை தொடர்ந்து, முன்னாள் பஞ்சாயத்து குழு உறுப்பினர் பல்ராம் கட்நாயக் தலையிட்டு தன்னார்வலர் அக்ஷய் சாஹுவை அழைத்து இறுதிச் சடங்குகளை நடத்த ஏற்பாடு செய்தார். பிபிரசரண் ஜெய்பூரியா, பிரசன்னா தால், பினோத் பருவா, டுனா பெஹெரா உள்ளிட்ட தன்னார்வலர்கள் மற்றும் பீம் ஆர்மியின் தேவ்கர் பிரிவு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து, பலத்த மழையிலும் பொருட்படுத்தாமல் அந்த மூதாட்டிக்கு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தினர்.

இந்த நிகழ்வு சமூகத்தில் சாதி ஆதிக்கம் இன்னும் வேரூன்றியிருப்பதை வெளிக்கொணர்கிறது. “ஒரு பெண் தனது விருப்பப்படி திருமணம் செய்ததற்காக வாழ்நாள் முழுக்க துன்பம் அனுபவித்ததும், இறப்பிற்குப் பிறகும் மரியாதை கிடைக்காததும் மிகுந்த துரதிருஷ்டவசம்” என முன்னாள் உறுப்பினர் பல்ராம் கட்நாயக் கூறினார். பசந்தி போன்றோர் மீதான புறக்கணிப்பை நிறுத்தி, மனிதாபிமான அடிப்படையில் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என்பது இந்நிகழ்வின் முக்கிய செய்தியாக இருக்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.