இந்தியாவில் நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பைக் டாக்சி சேவைகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. குறைந்த கட்டணத்தில், வேகமாக இலக்கை அடைய முடியும் என்பதால் இளைஞர்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இது பல மாநிலங்களில் சட்டபூர்வ அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன. இதனை வலியுறுத்தும் வகையில், மகாராஷ்டிரா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சாரணாயக் எடுத்த நடவடிக்கை பெரும் கவனம் பெற்றுள்ளது.
அதாவது மும்பை மந்த்ராலயா பகுதியில் இருந்த அமைச்சர், தனது பெயரை மறைத்து ஒரு பைக் டாக்ஸியை ஆப் மூலம் புக் செய்தார். சில நிமிடங்களில் பைக் ஓட்டுநர் வந்தார். அவரைத் தன் பெயரிலும், பதவியிலும் அறிமுகப்படுத்திய அமைச்சர், பைக் டாக்சி சேவை மகாராஷ்டிராவில் சட்டவிரோதமானது என்பதை நினைவுபடுத்தினார். இருந்தாலும், ஓட்டுநருக்கு எவ்வித சிரமமும் ஏற்படக்கூடாது என்பதால் ரூ.500 பரிசாக வழங்க முன்வந்தார். ஆனால், அந்த ஓட்டுநர் பணத்தை ஏற்க மறுத்துள்ளார்.
இந்த சம்பவத்தின் மூலம், அமைச்சரின் நோக்கம் தவறான முறையில் சேவையை இயக்குபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவே என்பதைத் தெளிவாக காட்டுகிறது. “பாவப்பட்ட ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுத்து பயன் இல்லை. இதற்குப் பின்னாலுள்ள பெரும் நிறுவனங்களையே அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்,” என அமைச்சர் வலியுறுத்தினார். இதேவேளை, மகாராஷ்டிராவில் தற்போது எந்த பைக் டாக்சி நிறுவனத்திற்கும் சட்டபூர்வ அனுமதி வழங்கப்படவில்லை என்றும், புதிய எலெக்ட்ரிக் பைக் கொள்கை அமலுக்கு வருவதற்குள் இவ்வாறான சேவைகள் சட்டவிரோதமாகவே செயல்படுகின்றன என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரிப் பைக் டாக்சி விதிமுறைகளை உருவாக்கி, அவற்றை அமல்படுத்த வேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். ஏனெனில் நகரங்களின் வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும், தனி பயணத்திற்கான விரைவான வழியை வழங்கவும் பைக் டாக்சி சேவை ஒரு நவீன மாற்றாக விளங்குகிறது. ஆனால், சரியான சட்டப் பட்டியலில்லாமல் அதன் செயல்பாடு தொடரும் பட்சத்தில் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கும்.