கடந்த 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றார். இந்தச் சம்பவம் நிகழ்ந்து 58 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இன்று வரையிலும் தமிழ்நாட்டை திமுக அல்லது அதிமுக என்கிற இரு கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்துள்ளன.
மாநிலத்தில் ஒரு ஆட்சி அமைவதற்குப் பல சாத்தியங்கள் உள்ளன. ஒரு அரசியல் கட்சி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறலாம், கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் கட்சி தனிப் பெரும்பான்மையைப் பெறலாம், ஆட்சி அமைக்கும் கட்சி தனிப் பெரும்பான்மை பெறாமல் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம்.
தமிழ்நாட்டில் இவை அனைத்துமே நடந்துள்ளன. ஆனால் எல்லா சமயங்களிலும் திமுக, அதிமுக என்கிற இரு கட்சிகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளன. கூட்டணிக் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றது இல்லை.
தற்போதைய அரசியல் சூழலில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கூட்டணி ஆட்சி தொடர்பான விவாதங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கை அறிவிப்புக் கூட்டத்தில் ஆட்சியில் பங்கு பற்றிப் பேசியிருந்தார். மேலும் அவர், திமுக, பாஜக என இருதரப்பிலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், தவெக தலைமையிலான கூட்டணி உருவாக்கப்படும் எனவும் இன்று கூறியுள்ளார்.
தற்போது பல்வேறு கட்சிகளும் தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைவது பற்றிப் பேசி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் இதுநாள் வரை இருந்த நிலையை மாற்றுமா?
தமிழ்நாட்டில் 1952, 1957 மற்றும் 1962 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி செய்தது. 1967 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வென்றது. 138 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்ற திமுக ஆட்சி அமைத்தது.
கடந்த 1967இல் தொடங்கி 2021 வரை தமிழ்நாட்டில் 13 முறை சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் ஒரு முறை மட்டுமே ஆளும் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை இல்லாமல் இருந்துள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதில் திமுக 96 இடங்களில் வென்றிருந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் பாமக முறையே 34 மற்றும் 18 இடங்களில் வென்றிருந்தன. திமுக ஆட்சி அமைத்தது.
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி வெற்றி பெற்றது, அதிமுக 150 இடங்களைப் பிடித்திருந்தது. அப்போது கூட்டணி அரசாங்கம் பற்றித் தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகப் பேசியிருந்த அதிமுக தலைவர் தம்பிதுரை, "தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்பதால் கூட்டணி அரசு அமைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை" என்றார்.
அப்போது கூட்டணி ஆட்சி தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்திருந்த அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி, "ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களில் வெல்வோம். அது எங்களுடைய அரசாகவும் இருக்கலாம் அல்லது கூட்டணி அரசாகவும் இருக்கலாம்" எனக் கூறியிருந்தார்.
சமீபத்தில் அதிமுக கூட்டணி பற்றிப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையின் கீழ் பாஜக இருப்பதால் அதிமுகவை சேர்ந்தவர் முதலமைச்சராக இருப்பார்" எனத் தெரிவித்திருந்தார்.
அமித் ஷாவின் கருத்து விவாதப் பொருளான நிலையில், அதுகுறித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான்" என்றும், தங்கள் கூட்டணியை எந்தக் காலத்திலும் பிளவுபடுத்த முடியாது எனவும் குறிப்பிட்டார். மேலும், "கூட்டணியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து அமித் ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பேசி முடிவெடுப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி ஆட்சியை வரவேற்பதாகக் கூறியிருந்தார். இது தொடர்பாகப் பேசிய அவர், "கூட்டணி ஆட்சி என்பதை வரவேற்கிறோம். அதிகாரப் பகிர்வு மக்களுக்கு நல்லதையே கொண்டு சேர்க்கும்" என்றார்.
கூட்டணி ஆட்சி தேவை என்பதில் விசிக தெளிவாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
அப்போது, "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது எங்கள் நிலைப்பாடு. ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் என்றில்லாமல் சிறிய சிறிய கட்சிகளும் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைய வேண்டும் என்கிற நோக்கம் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.
"கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்களின் வாக்குகள் இல்லாமல் திமுக எம்.எல்.ஏக்களின் வாக்குகளை வைத்தே முதலமைச்சரைத் தேர்வு செய்யும் அளவுக்கு திமுக கூட்டணி வெற்றி பெறும். அதில் திமுக தனிப்பெரும்பான்மை பெறும். கூட்டணி அரசு என்கிற நோக்கம் எங்களுக்கு இல்லை. அது சரியாக வருமா என்று பார்த்தால் பலரும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. ஆட்சியில் பங்கு கொடுத்தால் தி.மு.க-வுக்கு அதன் பெருமை வந்து சேரும். கூட்டணி ஆட்சி என பா.ஜ.க கூறுகிறது. அவர்களே கூறும்போது, தமிழ்நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி சொல்லக்கூடாதா?" எனக் கூறியிருந்தார்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்கிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினரான சல்மா.
அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "இந்தக் கூட்டணியில் அதிக வாக்கு வங்கி உள்ள கட்சி திமுகதான். பெரும்பான்மை பலம் உள்ள கட்சி என்கிற அடிப்படையில்தான் திமுக ஆட்சி அமைக்கிறது. தமிழ்நாட்டின் சீரான வளர்ச்சிக்கு நிலையான ஆட்சிதான் காரணமாக இருந்துள்ளது. எனவே ஆட்சியில் பங்கு என்பதற்கான தேவை எழுந்ததில்லை. அதற்கான கோரிக்கை வருகிறபோது தலைவர்கள் அதைப் பேசி முடிவெடுப்பார்கள்," என்றார்.
ஆட்சியில் பங்கு என்கிற கோரிக்கை நியாயமானது மட்டுமல்ல, மிகவும் காலதாமதமானது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எழில் கரோலின்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்தி விடுவது என்பது வெறும் கொள்கை முழக்கமாக இருந்துவிடக்கூடாது. அனைத்து தரப்பினரையும் மைய நீரோட்டத்திற்குக் கொண்டு வருவதற்கு ஆட்சியில் பங்கு கொடுப்பதே சரியாக இருக்கும். அதைத்தான் விசிக கூறி வருகிறது. இரண்டு கட்சிகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்கிற நிலை மாற வேண்டும்" என்றார்.
ஒரு கூட்டணியின் வெற்றியில் அனைத்துக் கட்சிகளுக்கும் பங்குள்ளது என்னும்போது அதை அங்கீகரிக்க வேண்டும் என்கிறார் எழில் கரோலின். "தனித்துப் போட்டியிட்டு ஒரு கட்சி வெற்றி பெறக்கூடிய சூழல் தமிழ்நாட்டில் இப்போது இல்லை. இந்தச் சூழலைப் புரிந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழகம், கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் அதை அடைய முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.
கூட்டணி அரசு அமைந்தால் நிர்வாகம் தடைபடும் என்பது தேவையற்ற அச்சம் என்று கூறிய எழில் கரோலின், "மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லையா? அதனால் நிர்வாகம் தடைபட்டுவிட்டதா? தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமைந்தது இல்லை. அந்த அனுபவமே இல்லாமல் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நிர்வாகம் தடைபடும் என்பது தேவையற்ற கவலை. இட ஒதுக்கீடு, மாநில உரிமை என எதை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலான திட்டங்கள், கொள்கைகளில் அனைத்துக் கட்சிகளிடமும் ஒருமித்த கருத்துதான் உள்ளது என்னும்போது அச்சம் அவசியமற்றது" என்றார்.
இதை ஒத்த கருத்தையே கூறும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, கூட்டணி ஆட்சிக்கான கட்டாயம் உருவாகிவிட்டதாகக் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தற்போது உள்ள சூழ்நிலையில் எந்தக் கட்சியாலும் தனித்து நின்று வெற்றி பெற முடியாது. அதுதான் எதார்த்தம். கூட்டணியின் வெற்றியில் அனைவருக்கும் பங்கு உள்ளது. தமிழ்நாட்டில் பல முறை நெருக்கமான போட்டியைக் கண்டுள்ளோம்."
"சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் பல தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. ஒரு கட்சிக்கு 2% தான் வாக்கு வங்கி இருக்கிறது எனக் கூறி புறந்தள்ளிவிட முடியாது. கூட்டணியின் வெற்றிக்கு அவர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கலாம். புள்ளி விவரங்களையும் கடந்து கூட்டணி ஆட்சி அமைவதுதான் சமநிலையை உருவாக்கும்" என்று கூறினார்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை பொறுத்தவரை எத்தனைக் கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் அதிமுகவின் ஆட்சிதான் அமையும் என்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சசிரேகா.
"பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்தக் கேள்விகளுக்கு தெளிவாகப் பதில் அளித்துவிட்டார். அதிமுகதான் ஆட்சி அமைக்கும் எனக் கூறிவிட்டார். 31 வருட அதிமுக ஆட்சியில் அப்படித்தான் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும்."
கூட்டணிக் கட்சிகளுக்கு ஆசை இருக்கலாம் என்றாலும், பெரிய கட்சி எது என்பதே முக்கியம் என்கிறார் சசிரேகா. மேலும், "கூட்டணிக்கு யார் தலைமை ஏற்கிறார்கள், எந்தச் சின்னத்திற்கு வாக்கு அளிக்கிறார்கள், யார் முதல்வர் முகமாக உள்ளார் என்பதும் முக்கியம்.
அதன் அடிப்படையில் பார்த்தால் அதிமுகதான் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிமுக தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை அதே நிலைப்பாடுதான், இனியும் அது தொடரும்," என்றார்.
தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பதை மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ்நாட்டில் இதுநாள் வரை தொங்கு சட்டசபை அமைந்தது இல்லை. எந்தக் கட்சிக்கும், கூட்டணிக்கும் எப்போதுமே பெரும்பான்மை இடம் கிடைத்துள்ளது. மக்களின் தேர்வும் அதுவாகவே இருந்து வருகிறது" என்றார்.
கடந்து 1979 நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் 38 இடங்களில் வென்றது. அடுத்து உடனே 1980இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சரிபாதி இடங்களில் திமுக, காங்கிரஸ் போட்டியிட்டன. ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை, அப்போது திமுக தோல்வியுற்றது என்று கடந்த கால முடிவுகளைக் குறிப்பிட்டுப் பேசினார் ரவிந்திரன்.
அதோடு, 2006 தேர்தல் பற்றி விவரித்த அவர், "அப்போது திமுக சிறுபான்மை அரசாக இருந்தது என்கிற கருத்து உள்ளது. ஆனால் திமுக கூட்டணி அப்போது 169 இடங்களில் வென்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களைக் கொடுத்ததால்தான் திமுக பெரும்பான்மை இடங்களைப் பெற முடியவில்லை" என்றார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு