இந்த திட்டத்தில், முதன்முறையாக பணியமர்த்தப்படுபவர்களுக்கு, ரூ. 15 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதேசமயம், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக உரிமையாளர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மத்திய பட்ஜெட்டில் இதற்காக ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால், 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள், இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்படும். 2025 ஆக., 1 முதல், 2027 ஜூலை 31 வரை உருவாக்கப்படும் வேலைகளுக்கு இத்திட்டம் பொருந்தும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் முதன்முறையாக பதிவு செய்த ஊழியர்களை இலக்காகக் கொண்டு, இரு தவணைகளில் ரூ. 15,000 வரை வழங்கப்படும். ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளர்கள் இதற்குத் தகுதியுடையவர்கள்.
அனைத்துத் துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்க அளிக்கப்படுகிறது. உற்பத்தித் துறையில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். ரூ. 1 லட்சம் வரை ஊதியம் பெறும் தொழிலாளர்களை பணியமர்த்தும் முதலாளிகள் ஊக்கத்தொகை பெறுவர். குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு நிலையான வேலைவாய்ப்புடன், கூடுதலாக பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் மாதம் ரூ.3,000 வரை முதலாளிகளுக்கு அரசு வழங்கும். இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். உற்பத்தித் துறையாக இருப்பின், 4வது ஆண்டுக்கும் நீட்டிக்கப்படும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.