மக்கள் பீதி..! கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் ..!
Newstm Tamil July 05, 2025 12:48 PM

கேரளாவில் 18 வயது இளம்பெண்ணுக்கும், 38 வயது பெண்ணுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். 

பின்னர் கோழிக்கோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி ஜூலை 1 அன்று உயிரிழந்தார். இதையடுத்து, கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது உடலுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இளம்பெண்ணுக்கு நிபா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பிரேதப் பரிசோதனை செய்தவர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், கேரளாவின் பாலக்காடு மாவட்டம் தச்சநாட்டுக்காராவைச் சேர்ந்த 38 வயது பெண்மணி, தீவிர காய்ச்சல் காரணமாக கரிங்கல்லத்தாணி மருத்துவமனையிலும், பின்னர் மன்னார்க்காட் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்றார். 

பின்னர், பெரிந்தல்மன்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிபா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் இதனை உறுதி செய்தது. அவரது உடல்நிலை மோசடைந்துள்ளதை அடுத்து, பெரிந்தல்மன்னா மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட மருத்துவ அதிகாரி  ஆர். ரேணுகா தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களில் சுகாதார அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறியவும், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கவுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.