குஜராத் மாநிலம் வதோதராவில், ஜூலை 3ஆம் தேதி வியாழக்கிழமை அன்று, சுமார் 250 வங்கதேசத்தினர் சிறப்பு விமானம் மூலம் தங்கள் தாய்நாடு டாக்காவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது. வதோதரா விமானப்படை தளத்திலிருந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், கைகள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் விமானத்தில் ஏற்றப்பட்டதோடு, அதன் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள குஜராத் சமாச்சார் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, இந்த சட்டவிரோத குடியேறிகள், இந்தியாவில் போலி ஆதார், பான் அட்டைகளை பயன்படுத்தி பல ஆண்டுகளாக அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட் போன்ற பகுதிகளில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1,200-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் நடவடிக்கையாக, மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வெளியிட்ட அறிக்கையில், கடந்த மாதம் 200 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், புனே நகர காவல்துறையின் புலனாய்வுப் பிரிவும் கோந்த்வா காவல் நிலையமும் இணைந்து, கடந்த ஜூன் 13ஆம் தேதி, தொழிலாளர் முகாம்களில் தங்கி இருந்த வங்கதேசத்தினரை திடீர் ரெய்ட்களில் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவங்கள், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் குடியுரிமை அடையாள ஆவணங்களின் தவறான பயன்பாடு குறித்து கேள்விகளை எழுப்பி, சட்டம் ஒழுங்கு பிரிவுகளை அதிரடியாக செயல்பட வைக்கிறது. மேலும், எதிர்காலத்தில் இத்தகைய சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உள்துறைவிலிருந்து புதிய வழிமுறைகள் அமல்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது. மேலும் சமீபத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இந்தியர்களை கைகளில் விலங்கு மாட்டி விமானத்தில் ஏற்றி நாடு கடத்தியது சர்ச்சையாக மாறியது குறிப்பிடத்தக்கதாகும்.