மீரட் மாவட்டத்தின் மவானா நகராட்சி அலுவலகத்தில் ஜூலை 2-ம் தேதி புதன்கிழமை ஒரு எருமை மாடு பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியது. அலுவலக வாயில் பொதுமக்கள் செல்ல திறந்தபோது அந்த எருமை அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தது. தொடர்ந்து தோட்டங்களில் இருந்த செடிகளை அழித்தது.
அலுவலகத்திலுள்ள மேசை, நாற்காலிகள், கோப்புகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை சேதப்படுத்தியது. ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அலுவலக ஊழியர்கள் அதை விரட்ட முயன்றபோது, எருமை அவர்கள் மீது பாய்வது போல வந்ததால் ஊழியர்கள் பீதி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
சுமார் அரைமணி நேரம் நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்திருந்த அந்த எருமை, அலுவலகத்திலிருந்த கோப்புகளை காலால் உதைத்து சிதறடித்து, ஊழியர்களின் அறைகளிலும் நுழைந்து அங்கு சேதங்களை ஏற்படுத்தியது.
ஊழியர்கள் குச்சிகளை கொண்டு விரட்டியும், அந்த எருமை அலுவலக வளாகத்திலிருந்து வெளியேறவேயில்லை. பின்னர், அவர்கள் ஒருங்கிணைந்து முடிந்தவரை விலக்கி, சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு மட்டுமே அலுவலகத்திலிருந்து வெளியேற்ற முடிந்தது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. @bstvlive என்ற சமூக வலைதள கணக்கில் வீடியோ பதிவேற்றப்பட்டு, இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.
பொதுமக்கள் செல்லும் முக்கிய அலுவலகங்களில் விலங்குகள் நுழையாத பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பது பொதுமக்கள் வலியுறுத்தும் கோரிக்கையாக உள்ளது.