டெல்லியில் ஜூலை 1, 2025 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் விற்பனை தடை செய்யப்படும் என்று அரசாங்கம் ஒரு புதிய விதிமுறையை வெளியிட்டது. இந்த புதிய மாற்றம் டெல்லியில் அதிகரித்து வரும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய விதிமுறையின் முதல் நாளில் போக்குவரத்து காவல்துறையினர் கிட்டத்தட்ட 80 வாகனங்களை பறிமுதல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உத்தரவால் சுமார் 62 லட்சம் வாகனங்கள் ஒரே இரவில் மாயமாகும் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியிருந்தது. இந்தத் தடையை விதிக்க ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் எவ்வளவு பணம் வாங்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க மறுக்கும் சர்ச்சைக்குரிய உத்தரவை டெல்லி அரசு கைவிட்டுள்ளது. பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு, இந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப சவால்கள் காரணமாக இந்த வாகனங்களுக்கு உடனடியாகத் தடைவிதிக்க முடியாது என டெல்லி அரசு காற்று தர மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.