விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார் என்பது மிகவும் எளிமையான கேள்வியாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அதற்கான பதிலைக் கண்டறிவது அத்தனை எளிதல்ல.
விமானத்தை கண்டுபிடித்தது உண்மையில் யார் என்கிற கேள்வி நூறு ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு பழைய சர்ச்சையின் வேர்.
சைக்கிள் மெக்கானிக்குகளாகவும் சுயமாகக் கற்றுக்கொண்ட பொறியாளர்களாகவும் இருந்த ஆர்வில் மற்றும் வில்பர் ரைட் ஆகியோரை விமானப் பயணத்தின் உண்மையான 'தந்தையர்' எனப் பல அமெரிக்கர்கள் கருதுகின்றனர். 1903 ஆம் ஆண்டில் முதன்முதலில் விமானத்தை இயக்கியவர்கள் ரைட் சகோதரர்கள்.
ஆனால் முதலில் விமானத்தை இயக்கியவர்கள் என்பதற்கான உண்மையான பெருமை, ஆல்பர்டோ சாண்டோஸ் டுமாண்டுக்குச் செல்ல வேண்டும் என்று பல பிரேசிலியர்கள் கூறுகிறார்கள்.
ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சாண்டோஸ், 1906 இல் பாரிஸில் முதல் விமானப் பயணத்தை மேற்கொண்டார். இது சர்வதேச விமானக் கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. அப்படியானால் எது உண்மை?
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பறக்க வேண்டும் என்ற மனிதனின் கனவை நனவாக்கும் வகையில் ஒரு இயந்திரத்தை உருவாக்க பலரும் தீவிரமாக முயற்சி செய்தனர்.
அந்தக் காலகட்டத்தில், விமானங்களை உருவாக்குவதற்கு நம்பிக்கையளிக்கும் நகரமாக பாரிஸ் மாறியது. அங்கு நல்ல பொறியியல் கல்லூரிகள் இருந்தன. உலோகவியல், இயந்திரங்கள், இயற்பியல் மற்றும் வேதியியல் தொடர்பான ஆராய்ச்சிக்குப் பணமும் எளிதாகக் கிடைத்தது.
"அந்த நேரத்தில், அது விரைவில் நடந்தேறக்கூடிய ஒன்றாகத் தான் தெரிந்தது," என்று பிரெஞ்சு வரலாற்றாசிரியரான பேராசிரியர் ஜீன்-பியர் பிளே கூறுகிறார்.
அதேபோல், முதல் விமானமாக எதைக் கருதுவது என்பதை விமான நிபுணர்கள் முடிவு செய்தனர்.
எந்த வெளிப்புற உதவியும் இல்லாமல் (கவண் போன்ற சாதனங்கள் இல்லாமல்) விமானம் பறக்க வேண்டும் என்றும், மக்கள் அதை தங்கள் கண்களால் நேரில் பார்த்து பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் நிபந்தனை விதித்தனர்.
1906 நவம்பர் 12 அன்று, சாண்டோஸ் டுமாண்ட் இவை அனைத்தையும் செய்தார். பாரிஸில் ஒரு கூட்டத்தின் முன்னிலையில் தனது 14-பிஸ் விமானத்தை 220 மீட்டர் தூரம் பறக்கவிட்டார்.
அடுத்த ஆண்டு, அவர் 'டெமோயிசெல்லே' என்ற மற்றொரு புதிய விமானத்தை வடிவமைத்தார். இது தான் உலகின் முதல் இலகுரக மற்றும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்ட விமானம் .
ஆனால் 1908 ஆம் ஆண்டில், அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, முதன்முதலில் தாங்கள் விமானத்தில் பறந்ததாக ரைட் சகோதரர்கள் கூறினர்.
இதைக் கேட்டு பிரான்ஸ் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த நேரத்தில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பறக்கும் கிளப்புகளுக்கு இடையே கடிதங்கள் மூலம் தொடர்ந்து தொடர்பு இருந்து வந்தது.
தரையிலிருந்து நீண்ட தூரம் பறக்கக்கூடிய முதல் விமானத்தை உருவாக்க ஒரு போட்டி நடந்து கொண்டிருந்தது என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். ஆனால் பல ஆண்டுகளாக ஐரோப்பாவில் ரைட் சகோதரர்களைப் பற்றிய எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
அந்த நேரத்தில், தங்களது காப்புரிமை ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகக் காத்திருந்ததாகவும், தங்கள் யோசனையை யாராவது திருடிவிடுவார்கள் என்று பயந்ததாகவும் ரைட் சகோதரர்கள் கூறினர்.
ஆனால் உண்மையில், 1903-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் அவர்களது ஃப்ளையர் பறப்பதை ஐந்து பேர் மட்டுமே பார்த்தார்கள்.
ஒரு தந்தி செய்தி, சில புகைப்படங்கள் மற்றும் ஆர்வில் ரைட்டின் நாட்குறிப்பு போன்ற மிகக் குறைந்த ஆதாரங்கள் மட்டுமே அதனைக் குறிப்பிட்டுள்ளன.
ஆர்வில் தனது நாட்குறிப்பில் அந்த நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் இருந்தது என்று எழுதியுள்ளார்.
அதாவது, அந்த அளவுக்கு காற்று இருந்ததால், விமானத்தால் என்ஜின் இல்லாமல்கூட பறக்க முடிந்திருக்கலாம் என்று பிரேசிலின் வானியல் அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநரான ஹென்ரிக் லின்ஸ் டி பாரோஸ் போன்ற சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
அதாவது, இயந்திரம் இல்லாமல் கூட தானாகவே விமானம் பறக்கக்கூடிய அளவுக்கு காற்று பலமாக வீசியது.
இருப்பினும், ரைட் சகோதரர்களின் ஆதரவாளர்கள் இதை ஏற்கவில்லை.
14-பிஸ் பாரிஸில் பறப்பதற்கு முன்பே, ரைட் சகோதரர்கள் 1904-05 ஆம் ஆண்டில் விமானத்தின் சிறந்த மாதிரிகளை உருவாக்கிவிட்டதாக அவர்கள் வாதிடுகிறார்கள்.
"அன்று காலை (டிசம்பர் 17, 1903) ரைட் சகோதரர்கள், முதல் முறையாக மிகவும் சிறப்பாக பறந்தனர். அதன் மூலம், பிரச்னையைத் தீர்த்துவிட்டதாக அவர்களே உறுதியாக நம்பினர்" என்று கூறுகிறார் ஸ்மித்சோனியனின் தேசிய வான் மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தில் பணியாற்றியவரும், ரைட் சகோதரர்களைப் பற்றி பல புத்தகங்களை எழுதியவருமான வரலாற்றாசிரியர் டாம் க்ரூச்.
"அவர்கள் இன்னும் சில மேம்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது, ஆனாலும் அவர்களது விமானம் கட்டமைக்கப்பட்டு ஏற்கெனவே பறந்து விட்டது," என்றும் அவர் கூறுகிறார்.
1908ஆம் ஆண்டு, ரைட் சகோதரர்கள் தாங்கள் தான் முதலில் விமானத்தில் பறந்தவர்கள் என்பதை நிரூபிக்க ஒரு பிரசாரத்தைத் தொடங்கும் வரை, இவை அனைத்தும் ரகசியமாகச் செய்யப்பட்டதாகத் தோன்றியது.
ரைட் சகோதரர்கள் ஐரோப்பாவுக்குச் சென்று, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் 200க்கும் மேற்பட்ட மாதிரி பயணங்களை நிகழ்த்தினர். அதில் ஒரு முறை அவர்கள் 124 கிலோமீட்டர் வரை பயணம் செய்தனர்.
"அந்த நேரத்தில், ஐரோப்பாவின் அரச குடும்பங்கள் வில்பருடன் விமானத்தில் அமர விரும்பினர். இது ஒரு பெரிய கௌரவமாகக் கருதப்பட்டது," என்று பேராசிரியர் பிளே விளக்குகிறார்.
அதே நேரத்தில், விமானங்கள் குறித்த பிரெஞ்சு ஆரம்பகால நிபுணரான ஃபெர்டினாண்ட் ஃபர்பர் போன்றவர்களும் ரைட் சகோதரர்கள் தான் முதன்மையானவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டனர்.
இவ்வளவு நல்ல கட்டுப்பாட்டைக் கொண்ட ஒரு விமானத்தை ஒரே நாளில் உருவாக்கிவிட முடியாது என்று அவர்கள் கூறினர்.
ஐரோப்பாவில் காட்டப்பட்ட ரைட் சகோதரர்களின் ஃப்ளையர் விமானம் சக்கரங்கள் இல்லாமல் இருந்தது.
அதனால், அது பறக்க ஒரு கவணின் (catapult) உதவி தேவைப்பட்டது (இது விமானம் பறக்க உதவுகிறது). இது ஒரு பெரிய விவாதத்துக்குரிய விஷயமாக மாறியது.
விமானத்தின் இயந்திரம் போதுமான சக்தி வாய்ந்ததாக இல்லை என்றும், கவண் இருந்ததால் மட்டுமே அது பறக்க முடிந்தது என்றும் விமர்சகர்கள் கூறினர். சிலர், எந்த வகையான தரையிலிருந்தும் விமானம் புறப்படக்கூடிய வகையில் ரைட் சகோதரர்கள் கவணைப் பொருத்தியதாகக் கூறுகின்றனர்.
சாண்டோஸ் டுமாண்ட், ரைட் சகோதரர்கள் மட்டுமின்றி வேறு சிலரும் தாங்களே முதன் முதலில் விமானப் பயணம் மேற்கொண்டதாக கூறியுள்ளனர் என்பது தான் இந்தக் கதையின் முக்கியத் திருப்பம்.
அமெரிக்காவில் வாழ்ந்த ஜெர்மனியைச் சேர்ந்த குஸ்டாவ் வெய்ஸ்கோப் என்பவர் 1901ம் ஆண்டிலேயே விமானப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
நியூசிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பியர்ஸும் மார்ச் 1903 இல் விமானம் ஒன்றை ஓட்டியதாக நம்பப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவின் ஹோவிக் நகருக்கு அருகில், ஜான் குட்மேன் மற்றும் அவரது குடும்பத்தினர் 1871ஆம் ஆண்டு ஒரு கிளைடர் மூலம் மனிதர்களை ஏற்றிச் சென்று, உலகின் முதல் விமானப் பயணத்தை முயற்சி செய்ததாகக் கூறப்படும் சில சான்றுகளும் உள்ளன. அதுவும் எந்த இயந்திர சக்தியும் இல்லாமல், வெறும் கிளைடரிலேயே சென்றதாகக் கூறப்படுகிறது. இன்றும் கூட, அந்த கிளைடரின் நினைவாக ஒரு நினைவுச்சின்னம் உள்ளது.
அதனால்தான் விமானத்தைக் கண்டுபிடித்தவர் யார் என்பதைப் பற்றிய விவாதம் பயனற்றது என்று பல விமான வல்லுநர்கள் நம்புகிறார்கள்.
"யாரோ ஒருவர் ஒரு நாள் எழுந்து, ஒரு அமைப்பை வரைந்து, 'இது பறக்கும் விமானம்!' என்று சொன்னதால் அது நடக்கவில்லை" என்று ஜேன்'ஸ் ஆல் தி வேர்ல்ட்ஸ் ஏர்கிராஃப்ட்டின் ஆசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றிய பால் ஜாக்சன் கூறுகிறார்.
"டஜன்கணக்கானவர்களின் கூட்டு உழைப்பால் மட்டுமல்ல, மாறாக நூற்றுக்கணக்கானவர்களின் ஒருங்கிணைந்த உழைப்பால் அது சாத்தியமானது," என்றும் அவர் கூறுகிறார்.
சாண்டோஸ் டுமோண்ட், வெய்ஸ்கோப் மற்றும் பல ஆரம்பகால விமானங்களை இயக்கிய விமானிகளுக்கு தகுதியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று பால் ஜாக்சன் கருதுகிறார்.
"இறுதியில், மதிப்புமிக்க வழக்கறிஞர்களைக் கொண்டவர்கள் தான் பெயர் பெற்றவர்களாக மாறுகிறார்கள்" என்று பால் ஜாக்சன் கூறுகிறார்.
"சோகமான விஷயம் என்னவென்றால், 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்த்தப்பட்ட பெரும்பாலான கண்டுபிடிப்புகளைப் பார்த்தால், அவற்றுக்கான பெருமை பெரும்பாலும் தவறான நபர்களுக்கே வழங்கப்பட்டது," என்கிறார் பால் ஜாக்சன்.
தொலைபேசியைக் கண்டுபிடித்த பெருமைக்குரிய ஸ்காட்டிஷ் விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் உதாரணத்தை அவர் தருகிறார். இருப்பினும், அது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
உண்மையில், பெல் காப்புரிமை பெற்றிருந்தாலும், உண்மையான கண்டுபிடிப்பு இத்தாலியர் அன்டோனியோ மேயுச்சி (Antonio Meucci) என்பவரால் செய்யப்பட்டதாக அமெரிக்க நாடாளுமன்றம் 2002ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டது. இத்தாலியைச் சேர்ந்த அவர், வறுமையில் வாடியதாகவும், கிரஹாம் பெல்லுடன் ஒரே பட்டறையில் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க விமான வரலாற்றில் முக்கியமான முன்னோடியாகக் கருதப்படும் க்ளென் ஹாமண்ட் கர்ட்டிஸின் உறவினர் தான் மார்சியா கம்மிங்ஸ் என்பவர். 1909ஆம் ஆண்டு, தங்கள் காப்புரிமையை மீறியதாகக் கூறி கர்ட்டிஸ் மீது ரைட் சகோதரர்கள் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
இன்று, ரைட் சகோதரர்களின் கதையின் உண்மைத்தன்மையை ஆராயும் ஒரு வலைப்பதிவை நடத்துகிறார் மார்சியா கம்மிங்ஸ். கர்ட்டிஸ் போன்றவர்களை வரலாற்றிலிருந்து அழிக்க ரைட் சகோதரர்கள் வேண்டுமென்றே முயன்றதாக அவர் நம்புகிறார்.
மறுபுறம், ஆர்வில் மற்றும் வில்பரின் கொள்ளுப் பேத்தி அமண்டா ரைட் லேன், அவர்களின் பணியைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
அவர் இந்தக் குற்றச்சாட்டை நம்பவில்லை.
"ஆர்விலை எனக்குத் தெரியும். அவர் யாரையும் வேண்டுமென்றே குறிவைத்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை," என்று அமண்டா கூறுகிறார்.
"ஆம், ஆனால் தானும் வில்பரும் செய்ததைப் பற்றிய உண்மையை பாதுகாப்பதை அவர் உறுதி செய்தார்," என்கிறார் அமண்டா ரைட் லேன்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு