கீழடி அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த இரண்டு ஆண்களின் மண்டை ஓடுகளை வைத்து, அவர்களின் முக அமைப்புகளை அறிவியல் ரீதியாக ஆய்வாளர்கள் மறுஉருவாக்கம் செய்துள்ளனர்.
கணினி உதவியுடன் கூடிய 3டி முறையில், பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் இந்தப் பணிகளைச் செய்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் அளித்த தரவுகளை வைத்து இந்த முகங்கள் மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவர்களின் மண்டை ஓடுகள் பெரும்பாலும் சேதமின்றி இருந்துள்ளன.
தென்னிந்தியாவில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் முகங்கள் மறுஉருவாக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்கிறார் மதுரை காமராஜர் பல்கலைக் கழக மரபியல் துறைத் தலைவர் ஜி குமரேசன்.
இந்தச் செயல்முறை அறிவியல் ரீதியாக 67% நம்பகத்தன்மையைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, மண்டை ஓடுகளை வைத்து, அறிவியல் ரீதியாகவும், தேவைப்படும் இடங்களில் கலை நிபுணத்துவம் சார்ந்த பொருள் விளக்கங்களின் அடிப்படையிலும் செய்யப்படுகிறது.
"கீழடி அகழாய்வில் கிடைத்த சுமார் 50 மண்டை ஓடுகளில் இருந்து, அதிகம் சேதமடையாமல் இருந்த இரண்டு மண்டை ஓடுகள் தேர்வு செய்யப்பட்டன. அவர்களுக்கு சுமார் 50 வயது இருந்திருக்கலாம்" என்று மதுரை காமராஜர் பல்கலைகழக மரபணுவியல் துறையின் தலைவர் பேராசிரியர் ஜி.குமரேசன் கூறுகிறார்.
அதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், "இவர்களுக்கு தென்னிந்திய முக அம்சங்கள் மட்டுமின்றி, மேற்கு யுரேசியா மற்றும் ஆஸ்ட்ரோ ஆசியாடிக் மனிதர்களின் முக அம்சங்களும் சிறிய அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மண்டை ஓடுகளின் சிடி ஸ்கேன் மற்றும் 3டி ஸ்கேன் படங்கள் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட்டன" என்றார்.
மண்டை ஓடுகளின் சிடி ஸ்கேன் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு எப்படி எடுக்கப்படுமோ, அதே முறையில் எடுக்கப்படும். 3டி ஸ்கேன் செய்ய தனியாகக் கருவி உள்ளது. இந்தத் தரவுகளைப் பெற்ற லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக் கழகத்தின் ஃபேஸ் லேப் (Face lab- முக மறுஉருவாக்கம் செய்யும் ஆய்வகம்), அதிலுள்ள இடைவெளிகளை அறிவியல் பூர்வமாக நிரப்பி முகங்களை மறுஉருவாக்கம் செய்துள்ளது.
இவர்களின் மண்டை ஓடுகள் சேதமடையாமல் அப்படியே இருந்ததாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக் கழகத்தின் ஃபேஸ் லேப் மற்றும் தடயவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் கரோலின் வில்கின்சன்.
"சில எலும்பு முறிவுகள் இருந்தன, பற்கள் இல்லை. இல்லாத பாகங்கள், ஏற்கெனவே உள்ள பாகங்களைப் பிரதிபலிக்கும் வகையில் பொதுவாக மறுஉருவாக்கம் செய்யப்படும் (உதாரணமாக வாயின் மேல் பகுதி எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து கீழ் பகுதி மறு உருவாக்கம் செய்யப்படும்). எனவே தசைகளின் ஆழம் மற்றும் பிற அமைப்புகளை (மண்டை ஓட்டில் உள்ள) எலும்பியல் தரவுகளைக் கொண்டு மதிப்பீடு செய்ய முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
"அந்த முகங்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களுக்குச் சொந்தமானது என்றாலும், நமது தாத்தா ஒருவரின் முகத்தை நினைவுபடுத்துவதாகவே உள்ளது" என்றார் பேராசிரியர் குமரேசன்.
மண்டை ஓட்டில் இருந்து முகத்தை மறுஉருவாக்கம் செய்வது ஒரு அறிவியல் நடைமுறை. மண்டை ஓடுகளின் வடிவம் கிடைத்த பிறகு, அதன் மீது தசைகள் பொருத்திப் பார்க்கப்படும்.
"Musculature எனப்படுவது தசைகளின் ஆழம் என்னவாக இருந்திருக்கும் எனக் கணக்கிட்டுப் பொருத்துவதாகும். அது ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் மாறுபடும். மண்டை ஓட்டின் தடிமனும் மாறுபடும். இவற்றுடன், ஒரு மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட நவீன கால மனிதர்களின் தரவுகளையும் கொண்டு, பழங்கால மனிதர்களின் முகங்கள் மறு உருவாக்கம் செய்யப்படும்" என்கிறார் பேராசிரியர் குமரேசன்.
தசைகள் பொருத்துவது குறித்து பிபிசி தமிழுக்கு விளக்கம் அளித்த பேராசிரியர் வில்கின்சன், "ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள தசைகளின் தரவுகளைப் பயன்படுத்திக் கொள்வோம். மண்டை ஓட்டின் அளவையும் வடிவத்தையும் பொறுத்து, ஒவ்வொரு தசையும் மாற்றி அமைக்கப்படும்" என்றார்.
இதை மேலும் விரிவாகப் புரிந்துகொள்ள, பேராசிரியர் வில்கின்சன் கடந்த 2010ஆம் ஆண்டு Journal of Anatomy என்ற ஆய்விதழில் எழுதிய கட்டுரை உதவுகிறது. அதில், "தசைகளைப் பொருத்துவதில் எந்தவித கலை நிபுணத்துவமும் இருக்கக்கூடாது. அவை உடற்கூறியல் விதிகளைப் பின்பற்றி மறுஉருவாக்கம் செய்யப்பட வேண்டும். ஏனெனில் முகங்களில் சில வேறுபாடுகளை தவிர, (அனைவருக்கும்) ஒரே எண்ணிக்கையிலான தசைகள், (முகத்தின்) ஒரே இடத்தில் இருந்து தொடங்குவதும், ஒட்டியிருப்பதும் வழக்கம். இவற்றின் வடிவம், அளவு, இடம் ஆகியவற்றில் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாம்" என்று அவர் எழுதியுள்ளார்.
மேலே உள்ள புகைப்படத்தில் (பேராசிரியர் கரோலின் வில்கின்சன், பிரிட்டனில் உள்ள டண்டீ பல்கலைக் கழகத்தில் உடற்கூறியல் மற்றும் மனித அடையாளத்துக்கான மையத்தில் பணியாற்றியபோது, ஜர்னல் ஆஃப் அனாடமி இதழில் "Facial Reconstruction-Anatomical Art or Artistic Anatomy?" என்ற கட்டுரையில் வெளிவந்த புகைப்படம்), மூன்று வெவ்வேறு மண்டை ஓடுகளில் ஒரே விதமான தசைகளைப் பொருத்திய பிறகு, முகங்களில் வெளிப்படும் வேறுபாடுகளைக் காணலாம்.
தசைகளைப் பொருத்திய பிறகு, அடுத்து முக்கியமாக தசைகளின் மீது தோல் பொருத்தப்படும்.
"தசைகளின் அமைப்பு, எலும்புகளின் வடிவம், தசைகளின் ஆழம் ஆகியவற்றைக் கொண்டு தோலின் தன்மை தீர்மானிக்கப்படுகிறது. இளம் வயதினரைவிட நடுத்தர வயது அல்லது அதற்கும் மேலான வயதுள்ள மனிதர்களின் தோல் பகுதி எப்படியிருக்கும் என்பதைத் தீர்மானிப்பது கடினம்" என்கிறார் பேராசிரியர் வில்கின்சன்.
அதற்கான காரணத்தை விளக்கிய அவர், "வயது முதிர்வு காரணமாக ஒருவருக்கு தோலில் ஏற்படும் மாற்றங்கள், தனிநபர்களின் ஆரோக்கிய நிலையைப் பொறுத்து வெவ்வேறு காலகட்டத்தில் நிகழும். ஒருவருக்கு முன்கூட்டியே ஏற்படத் தொடங்கும், மற்றொருவருக்கு தாமதமாகத் தொடங்கும்.
ஒரே வயதிலான இரண்டு நபர்களுக்குத் தோல் வேறு மாதிரி இருக்கக்கூடும். எனவே ஒருவரின் சருமம் இந்தத் தன்மையில்தான் இருந்தது என உறுதியாகக் கூற இயலாது" என்று விளக்கினார்.
முகங்களை மறு உருவாக்கம் செய்யும்போது, சில பாகங்கள் சவாலானவையாக இருக்கின்றன.
"வாய்ப் பகுதியை வடிவமைப்பதில் கலை நிபுணத்துவம் அதிகம் தேவைப்படும். உடற்கூறியல் விதிகளின்படி, மேல் தாடையில் உள்ள பற்கள், கீழே உள்ளவற்றைவிட எடுப்பாக இருந்தால், மேல் உதடும் அவ்வாறே இருக்கும்.
இவை வாய் மூடியிருக்கும் நேரத்தில் பற்கள் எவ்வாறு உள்ளன (occlusion pattern) என்பதைப் பொருத்து மாறுபடுகின்றன. காதுகளின் வடிவத்தைத் தீர்மானிப்பதும் மிகவும் கடினம்" என்கிறார் பேராசிரியர் வில்கின்சன்.
கடந்த 2006ஆம் ஆண்டு பேராசிரியர் வில்கின்சன் பங்கேற்ற ஓர் ஆய்வின் முடிவுகள், குறைந்தபட்சம் 67% முக அமைப்புகள் அறிவியல் ரீதியான நடைமுறைகளைப் பின்பற்றி மறு உருவாக்கம் செய்யப்படுவதாகக் கூறியது.
முக மறுஉருவாக்க தொழில்நுட்பம் தடயவியல் துறை சார்ந்த விசாரணைகளின்போது ஒருவரின் அடையாளத்தைக் கண்டறிய பயன்படுத்தப்படலாம்.
அதே போன்று வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் கடந்த காலங்களில் வாழ்ந்தவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள, மக்களுக்குத் தங்கள் கடந்த காலத்துடனான தொடர்பை மேம்படுத்த இந்த மறு உருவாக்கங்கள் பயன்படுகின்றன.
சுமார் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர்தால் பெண்ணின் மண்டை ஓடு ஒன்று இராக்கிய குர்திஸ்தானில் உள்ள ஷனிதார் குகையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் தனது 40களில் இருந்திருக்கலாம், பற்களில் நோய் இருந்திருக்கலாம் என்பதும் அவரது மண்டை ஓட்டை வைத்து தெரியவந்தது. நூற்றுக்கணக்கான துண்டுகள் சேகரிக்கப்பட்டு, இந்த மண்டை ஓடு ஒருங்கிணைக்கப்பட்டது. அதிலிருந்து அந்தப் பெண்ணின் முகம் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று, ஸ்காட்லாந்தில் உள்ள பெர்த் அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெண்கல காலத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணின் முகம் உட்பட சிலரது முகங்களை மறு உருவாக்கம் செய்துள்ளனர். மண்டை ஓடுகளிலிருந்து முகங்கள் எப்படி மறு உருவாக்கம் செய்யப்படுகின்றன என்பதை பார்வையாளர்களே செய்து பார்க்கும் வகையில் விளக்க வீடியோக்களும் அங்கு உள்ளன.
வழக்கமான முக மறு உருவாக்க முறைகளில் மண்டை ஓடுகளின் படங்கள் அல்லது வார்ப்பு (cast) பயன்படுத்தப்படும். மண்டை ஓடுகளின் படங்கள் மீது தசைகளை வரைவது 2D முறையாகும்.
வார்ப்புகளை பயன்படுத்தி அதன் மீது மெல்லிய தசைகளை களிமண் அல்லது மெழுகு கொண்டு உருவாக்குவது 3D முறையாகும். கணினி உதவியுடன் கூடிய 3D முக மறு உருவாக்க முறையில், மண்டை ஓடுகளின் சிடி ஸ்கேன் மற்றும் 3D ஸ்கேன் தரவுகள் கொண்டு அதன் டிஜிட்டல் வடிவம் உருவாக்கப்படும். அப்படி உருவாக்கப்படும் டிஜிட்டல் முகங்கள், வார்ப்புகளை கொண்டு உருவாக்கிய 3D முகங்களை போலவே காணப்படும். அதன் மீது பல்வேறு நவீன மென்பொருள்கள் கொண்டு தசைகள், தோல் ஆகியவற்றை பொருத்தலாம்.
"முக மறு உருவாக்க படத்துக்கு உண்மைக்கு நிகரான தன்மையை கொண்டு வர புகைப்படம் எடிட் செய்யும் மென்பொருளை பயன்படுத்துவோம். (கீழடி முகங்களை மறு உருவாக்கம் செய்யும் போது) இந்தியாவில் உள்ள ஆய்வாளர்கள் (உண்மைக்கு) மிக நெருக்கமான தோல், முடி மற்றும் கண்களின் நிறங்களை அளித்திருந்தனர்" என்று பேராசிரியர் வில்கின்சன் கூறுகிறார்.
டிஜிட்டல் முக மறு உருவாக்கங்கள் இந்த துறையில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாகும் என்று பேராசிரியர் வில்கின்சன் கூறுகிறார்.
"பாரம்பரியமான களிமண் மாதிரிகளை விட இதன் அணுகுமுறை மேலும் துல்லியமாகவும் வேகமாகவும் இருக்கிறது. கணினி முறையில் மறு உருவாக்கம் செய்யும் போது, அந்த வடிவத்தை தொடர்ந்து சரி பார்க்கவும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் முடிகிறது. இதை தவிர CGI - கணினி கிராஃபிக்ஸ் மற்றும் AI - செயற்கை நுண்ணறிவு உண்மைக்கு மிக நெருக்கமான படங்களை உருவாக்குவதில் எங்கள் திறனை அபாரமாக அதிகரித்துள்ளது" என்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு