புயல்கள், அலைகள், காற்றில் பறவைகள் கீச்சிடும் சத்தம், திமிங்கலங்கள் எழுப்பும் விசில் போன்ற சத்தம் மற்றும் பிற கடல் உயிரினங்களின் சத்தம் ஆகிய அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து கடலின் இயற்கையான ஒலி சூழலை உருவாக்குகின்றன.
ஆனால், பாறைகளை வெடிக்கச் செய்வது, சோனார் கருவியை இயக்குவது, கப்பல் இயந்திர இரைச்சல்கள் போன்ற மனித நடவடிக்கையால் ஏற்படும் சத்தங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது கடல் உயிரினங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இனப்பெருக்கம், உணவு தேடல், கூட்டமாக வாழும் தன்மை மற்றும் வேட்டையாடுபவர்களிடம் இருந்து தப்பித்தல் போன்ற கடல் உயிரினங்களுக்கான முக்கியமான நடவடிக்கைகளில் ஒலி முக்கியப் பங்காற்றுகிறது.
"எல்லா கடல் உயிரினங்களும் ஒலியை மிக முக்கியமாக நம்புகின்றன. கேட்கும் திறன் தான் அவர்களின் முதன்மையான உணர்வு," என்கிறார் லிண்டி வெயில்கார்ட். 1994 ஆம் ஆண்டு முதல் நீருக்கடியில் இரைச்சல் மாசுபாடு மற்றும் செட்டேசியன்கள் (திமிங்கலங்கள், டால்பின்கள் மற்றும் போர்போயிஸ்களை உள்ளடக்கிய கடல் விலங்குகள்) மீதான அதன் விளைவுகளை ஆய்வு செய்து வரும் அவர், சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட ஓஷன் கேர் எனும் பாதுகாப்பு அமைப்பின் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.
தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கப்பல் போக்குவரத்து மற்றும் கடலின் அடித்தட்டில் எண்ணெய் குவியல்களைக் கண்டறிய பயன்படுத்தப்படும் ஏர்கன்கள் (airguns) ஆகிய இரண்டு முக்கியமான ஆபத்துக்களை வெயில்கார்ட் குறிப்பிடுகிறார். அதேசமயம், கடற்படை சோனார்கள், கடலோர கட்டுமானங்கள், ஆழ்கடல் சுரங்க வேலைகள், இழுவை மீன்பிடி படகுகள், பொழுதுபோக்கு படகுகள் மற்றும் பல்வேறு மனிதச் செயல்பாடுகளும் கடல் இரைச்சல் அளவை அதிகரிக்கச் செய்கின்றன.
ஸ்காட்லாந்தின் செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக பேராசிரியர் பெட்ரிக் மில்லர், பிபிசியிடம் இதுகுறித்து பேசினார்.
"நம்முடைய பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. நாம் செய்கிற பல்வேறு செயல்களும் உலகில் உள்ள கடல்களில் சத்தத்தை உருவாக்குகின்றன. எனவே, அது இன்னும் அதிகரிக்கும்" என்கிறார் பேரா. பேட்ரிக்.
அதிகரித்து வரும் ஒலியின் அளவுகடலில் ஒலியை அளவிடும் ஆய்வு என்பது ஒரு புதிய துறையாக கருதப்படுகின்றது.
2006 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் சான் டியாகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், கலிபோர்னியாவின் மேற்கு பகுதியில் 257 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான் நிக்கோலஸ் தீவின் அருகே, 1964-66 மற்றும் 2003-04 வரையிலான காலத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்தனர்.
2003-2004 காலகட்டத்தில் கடலில் உள்ள சத்தம், 1964-1966 காலத்தை விட 10 முதல் 12 டெசிபல்கள் (dB) அதிகமாக இருந்தது என அந்த ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அதாவது, ஒவ்வொரு தசாப்தத்திற்கும் சத்தம் சுமார் 3 dB உயர்ந்துள்ளது.
அதிலிருந்து, மனிதர்களின் நடவடிக்கைகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
"கப்பல்களின் சத்தம் உலகக் கடல்களில் உள்ள முக்கியமான பின்னணி ஒலிகளில் ஒன்றாகும்," என்று 1997 முதல் இந்த சிக்கலை ஆய்வு செய்து வரும் மில்லர் கூறுகிறார். "இது தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான பல உறுதியான ஆதாரங்களும் இருக்கின்றன," என்றும் அவர் கூறுகிறார்.
எந்த நேரத்திலும் கடலில் சுமார் 2,50,000 கப்பல்கள் உள்ளன, சில சரக்கு கப்பல்கள் "190 டெசிபல் கொண்ட ஒலியை வெளியிடுகின்றன, இது ஒரு விமானம் புறப்படுவதை விட மிக அதிகமாகவும், ராக் கச்சேரியில் கேட்கும் சத்தத்தின் அளவுக்குச் சமமாகவும் இருக்கும்" என்று சர்வதேச விலங்கு நல நிதியம் (IFAW) கூறுகிறது.
இதனை ஒப்பிட்டுக் கூற வேண்டுமென்றால், 120 டெசிபல் (dB) க்கும் அதிகமான உரத்த சத்தத்தை மனிதர்கள் கேட்கும்போது, அவர்களின் காதுகளுக்கு உடனடியாக சேதம் ஏற்படலாம். அதேசமயம், 140 டெசிபல் அளவிலான ஒலியை மனிதர்கள் கேட்கும் போது வலி உண்டாகி, செவிப்புலனுக்கு நிரந்தர சேதம் ஏற்படலாம்.
ஒளி காற்றை விட தண்ணீரில் வேகமாக உறிஞ்சப்படுவதால், கடல் வாழ் உயிரினங்களால் அதனைச் சுற்றியுள்ள இடங்களைத் தெளிவாக காணமுடியாது. அதேபோல், மணம் வேகமாக பரவும் என்பதால், கடல் வாழ் உயிரினங்கள் உயிர்வாழ ஒலியையே பெரிதும் சார்ந்துள்ளன.
செட்டேசியன்கள் (திமிங்கலங்கள், டால்பின்கள் போன்றவை) தங்களுக்குள் சமிக்ஙைகள் அனுப்பிக்கொள்ளவும், நீரில் பயணிக்கவும், உணவைக் கண்டுபிடிக்கவும் ஒலிகளைப் பயன்படுத்துகின்றன.
மீன்களும், முதுகெலும்பில்லாத பிற உயிரினங்களும் இதேபோல் ஒலியைப் பயன்படுத்தி தான் அவற்றின் அடிப்படை வாழ்வை நடத்துகின்றன.
தொடர்ந்து கேட்கும் குறைந்த அதிர்வெண் கொண்ட சத்தத்தால், தங்கள் வீட்டை (தங்கும் இடத்தை) கண்டுபிடிக்கும் இளம் மீன்களின் திறன் பாதிக்கப்படக்கூடும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
ஒலி தண்ணீரில் வேகமாகவும், அதிக தொலைவும் பயணிக்கிறது (வினாடிக்கு சுமார் 1,480 மீட்டர்), ஆனால் காற்றில் அது மிகவும் மெதுவாகவும், குறைந்த தொலைவுக்கும் (வினாடிக்கு 343 மீட்டர்) பயணிக்கும். இது கடல்வாழ் விலங்குகளுக்கு அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் நன்மை பயத்தாலும், மனித நடவடிக்கைகளின் தாக்கத்தையும் அதிகரிக்கிறது.
2023-இல் பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், டால்பின்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புகொள்ளக் குரல் எழுப்பிக்கொண்டிருந்தாலும், இணைந்து வேலை செய்வதில் இன்னும் சிரமப்படுகின்றன எனக் கண்டறியப்பட்டது.
மனிதர்கள் ஏற்படுத்தும் சத்தம் அதிகரிக்கும் போது, அந்த சத்தத்தால் ஏற்படும் குழப்பத்தை சரிசெய்ய, டால்பின்கள் தங்கள் விசில் சத்தத்தையும் அவற்றின் நேரத்தையும் இரண்டு மடங்காக அதிகரிக்கின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள நார்வேயின் ஜான் மேயன் எரிமலை தீவுக்கு அருகே திமிங்கலங்களில் நீருக்கடல் ஒலி மாசுபாட்டின் தாக்கத்தை ஆய்வு செய்த குழுவில் மில்லர் உறுப்பினராக இருந்தார்.
அவர்கள் திமிங்கலங்களில் ஒட்டும் தட்டுகள் (suction pads) மூலம் அவற்றின் செயல்பாடுகளை அறிய உதவும் கருவிகளைப் பொருத்தினர். அந்த கருவிகள் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தானாகவே விழுந்துவிடும், பிறகு அதை திரும்பச் சேகரித்து, திமிங்கலங்களின் நகர்வுகள் மற்றும் ஒலியின் அளவுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய முடிந்தது.
இயற்கையாக வேட்டையாடுபவர்களை உணர்வதுபோலவே, மனிதர்களால் நீருக்கடியில் ஏற்படும் ஒலி மாசுபாட்டையும் திமிங்கல்கள் உணர்கின்றன என அந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் வெளியான அறிக்கை, செட்டேசியன்கள் "இரவு உணவுக்குப் பதிலாக வாழ்வை தேர்வு செய்யும்" நிலைக்கு வந்துவிட்டன.
சத்தம் அதிகரிப்பதால் திமிங்கலங்கள் உணவு தேடுவதை நிறுத்துகிறது, அதனால் அவற்றின் ஆற்றல் குறைகிறது என்று தெரிவிக்கிறது.
"சோனாரின் சத்தங்களைக் கேட்டவுடன், திமிங்கல்கள் உணவு தேடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, பல நாட்கள் நகர்ந்து சென்றன. இதனால், அவர்கள் வாழ்விடத்தை நல்ல முறையில் பயன்படுத்தும் திறன் பாதிக்கப்படுகிறது," என்று மில்லர் விளக்குகிறார்.
"இது உலகம் முழுவதும் பெரிய கவலையாக உள்ளது, ஏனெனில் ஒவ்வொரு இடத்திலும் சத்தம் அதிகரித்து வருகிறது. அதனால் விலங்குகளுக்கு தரமில்லாத மற்றும் குறைவான வாழ்விடங்கள் மட்டுமே கிடைக்கின்றன."
விலங்குகளை திசைதிருப்புவதற்கும், கடற்கரைகளில் அவை சிக்கி தவிப்பதற்கும், வேறு வழிகளில் உயிரிழப்பு ஏற்படுவதற்கும் சத்தம் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகின் பல பகுதிகளில் திமிங்கலங்கள் பெருமளவில் கரைமீறி வரும் சம்பவங்களுக்கு கடற்படை சோனார்கள் காரணமாக இருக்கலாம் எனக் குற்றம் சாட்டப்படுகிறது. இவ்வமைப்புகள் பிற கடல்வாழ் உயிரினங்களையும் பாதிக்கக்கூடும்.
2015 ஆம் ஆண்டில், ஹவாய் மற்றும் கலிபோர்னியாவிற்கு அருகிலுள்ள நீர்நிலைகளில் திமிங்கலங்கள் மற்றும் டால்பின்களை பாதிக்கக்கூடிய சில வகையான சோனார்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அமெரிக்க கடற்படை ஒப்புக்கொண்டது.
"கடற்படைக்கு மிட்-ஃப்ரீக்வென்சி ஆக்டிவ் சோனார் இருந்தது, இது கொக்கு திமிங்கலங்கள் கடற்கரையில் பெரும் அளவில் சிக்கி மரணமடைவதுடன் வலுவாக தொடர்புடையது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறைந்த அதிர்வெண் கொண்ட சோனார் இதுபோன்ற சிக்கல்களுடன் தெளிவாக சம்பந்தப்படவில்லை. இருந்தாலும், அது மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்துகிறது," என்கிறார் வெயில்கார்ட்.
அவரது கணக்கீடுகள் 120 டெசிபல் (இடிமுழக்கத்தின் அளவு) கொண்ட ஒலிகள் சுற்றுச்சூழல் மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன.
"குறைந்த அதிர்வெண் செயலில் உள்ள சோனார் 3.9 மில்லியன் சதுர கிலோமீட்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்," என்று அவர் கூறுகிறார்.
இது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியின் அளவிற்கு சமமானது. "120 டெசிபல் அளவுக்கு சத்தம் வெளியிடும்போது, அது திமிங்கலங்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும்"
கடலுக்கு அடியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் ஏர்கன்கள், நீருக்கடியில் 260 டெசிபல் வரை ஒலிகளை உண்டாக்குவதாக மதிப்பிடப்படுகிறது. இந்த ஒலியால் கடலில் 4,000 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
ஓஷன் கேர் அமைப்பின் ஒரு சிறு புத்தகம், இதன் விளைவுகளை பட்டியலிடும் அறிவியல் ஆய்வுகளை மேற்கோள் காட்டுகிறது.
"ஒரு நில அதிர்வு கணக்கெடுப்பு தொடங்கியபோது, துடுப்பு திமிங்கலங்கள் அவற்றின் வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்தன, மற்றும் இந்த இடப்பெயர்வு நில அதிர்வு கணக்கெடுப்பு நடந்து முடிந்த 10 நாட்களுக்குப் பின்பும் நீடித்தது" என்று அது விவரிக்கிறது.
2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நில அதிர்வு ஆய்வுகள் "கனடா மற்றும் கிரீன்லாந்தில் பனிக்கட்டிகளில் நார்வால்கள் பெருமளவில் இறப்பதற்கு காரணமானதாக இருக்கலாம்" என்று கூறுகிறது.
அவரது 5 வயது மகன் மற்றும் 10 மாத மகளுடன், வெயில்கார்ட் ஒரு வருடம் பசிபிக் பெருங்கடல் முழுவதும் 13 மீட்டர் பாய்மர படகில் 50,000 கிமீ பயணம் செய்து, தனது முனைவர் பட்ட மேலாய்வுக்காக ஸ்பெர்ம் திமிங்கலங்களின் குழுக்களைப் பின்தொடர்ந்தார்.
"ஸ்பெர்ம் திமிங்கலங்கள் ஒலிக்கு எவ்வளவு உணர்திறன் கொண்டவை என்பது எனக்கு நினைவிருக்கிறது. அவை மிகப் பெரியவை. பெண் திமிங்கலங்களின் நீளம் 11 முதல் 13 மீட்டர் வரை இருக்கும், ஆண் திமிங்கிலங்கள் அதை விட இரண்டு மடங்கு பெரியவர்கள்," என்று அவர் கூறுகிறார்.
வெயில்கார்ட், அவற்றை நெருக்கமாக கவனிக்க மிகவும் அமைதியாக இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டார். ஒரு சிறிய ஒலி கூட அவற்றைத் திடுக்கிடச் செய்யும்.
"சில நேரங்களில் நாங்கள் நீருக்கடியில் அவற்றைக் கண்காணிக்க தண்ணீரில் இறங்க முயற்சித்தோம். நங்கள் இறங்கும்போது நீர் அவற்றின் மீது பட்டுவிடாமல் இருக்க மிகுந்த கவனம் தேவைப்பட்டது. படகில் இருந்து குதிக்க முடியாது, மெதுவாக நீருக்குள் நுழையவேண்டும். எந்த ஃபிளிப்பர்களையும் பயன்படுத்த முடியாது," என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தொடர்ச்சியான சத்தம் திமிங்கலங்களில் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தியையும் இனப்பெருக்கத் திறனையும் பாதிக்கிறது என்று வெயில்கார்ட் குறிப்பிடுகிறார்.
கடல் இரைச்சலின் அளவைக் கட்டுப்படுத்த தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் விதிமுறைகள் இருந்தாலும், சத்தத்தை குறைக்கும் வகையில் அமல்படுத்தக்கூடிய சர்வதேச ஒழுங்குமுறைகள் எதுவும் இல்லை.
உலக வனவிலங்கு நிதியம் (WWF) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், கப்பல்களின் வேகத்தை 10% குறைத்தால் கூட, அவற்றின் இரைச்சல் அளவு 40 சதவீதம் குறையும் என்று கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு