பூமி மீது மோதுமா? 4 சிறுகோள்களை தீவிரமாக கண்காணிக்கும் நாசா
BBC Tamil July 07, 2025 05:48 AM
Getty Images

நீங்கள் சிறுகோள்கள் (Asteroids) பற்றி எப்போது யோசிப்பீர்கள்? அறிவியல் புனைவு (Science fiction) திரைப்படங்களைப் பார்க்கும் போதும் அல்லது ஒரு சிறுகோள் பூமியைத் தாக்கப்போகிறது என்கிற செய்தி வருகிற போதும் தான்.

சிறுகோள்கள் என்பது நமது சூரிய குடும்பத்தின் உருவாக்கத்தில் இருந்து விடுபட்ட பாறை அமைப்புகள் ஆகும். பத்து லட்சத்துக்குமான சிறுகோள்கள் கண்டறியப்பட்டுள்ளன, இவை பெரும்பாலும் சிறுகோள் மண்டலத்தில் அமைந்து செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையே சுற்றி வருகின்றன.

ஆனால் இவற்றில் சில பூமிக்கு அருகிலும் வந்து உயிரின் தோற்றத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன என்கிறார் பிரிட்டனில் உள்ள திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் கோள்கள் மற்றும் விண்வெளி அறிவியல் துறை பேராசிரியராக இருக்கும் மோனிகா கிரேடி.

"இதில் சில சிறுகோள்கள் அதிக அளவிலான கரிம சேர்மங்களை கொண்டுள்ளன, இவை உயிர் உருவாக்கத்தின் அடிப்படை அம்சங்களாக இருக்கலாம்" என்று அவர் தெரிவிக்கிறார்.

மேலும் அவர், "ஒரு அனுமானம் என்னவென்றால் உயிருக்குத் தேவையான பொருட்கள் சிறுகோள்களால் பூமிக்குக் கொண்டு வரப்பட்டதால் தான் பூமியில் உயிர் தொடர்ந்து இயங்கியது" என்றார்.

NASA/Ben Smegelsky சைகே சிறுகோளை ஆராய நாசா பல மில்லியன் டாலர்களைச் செலவழித்து வருகிறது.

பல சிறுகோள்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்து சொல்கின்றன என்றாலும் அவற்றில் சில கவனிக்கத்தக்கவை.

"பூமியை நோக்கி வரும் பொருட்கள் மீது அதீத ஆர்வம் உள்ளது. அதன் தாக்கத்தை கணிப்பதற்கு அல்லது அதனால் எந்த தாக்கமும் இல்லை என்பதை உறுதி செய்வதற்கான அதன் சுற்றுப்பாதை அறியப்படும் வரை அவை நெருக்கமாக கண்காணிக்கப்படுகின்றன. பூமிக்கு மிக தொலைவில் அசாதாரணமான உள்ளடக்கங்களைக் கொண்ட பொருட்களை நாம் தேடி வருகிறோம்" என்கிறார் பிரிட்டனில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் இயற்பியல் பள்ளியிம் ஆய்வாளர் அகாடா ரோசெக்.

அளவு என்று வருகையில் பெரிய சிறுகோள்கள் பற்றிய கவலைகள் குறைவு தான்.

"அவை எங்கு உள்ளன, எங்கு செல்கின்றன என்பது நமக்கு துல்லியமாகத் தெரியும்" என்று விவரித்தார் ரோசெக். மேலும் அவர் "அதன் இயக்கத்தை தீர்மானிக்கும் விதிகளைப் பற்றிய நல்ல புரிதல் நமக்கு உள்ளது மற்றும் அசாதாரணமானவைகளைப் நன்றாக புரிந்து கொள்ள அவற்றை ஆராய்கிறோம்" என்றார்.

"சிறிய, கணிக்க முடியாதவை தான் அதன் சுற்றுப்பாதை தெரிகின்ற வரை கவலையளிக்கக் கூடியதாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.

தற்போது கண்காணிக்கப்படும் மூன்று முக்கியமான சிறுகோள்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன, அதனுடன் நாசா ஒரு திட்டத்தையே தொடங்கி ஆராயும் இன்னொரு சிறுகோளும் இங்கே கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

  • முதல்முறையாக பூமிக்கு 32,000கி.மீ. நெருக்கமாக வரப்போகும் அபோஃபிஸ் சிறுகோள்
  • நாசா விண்கலம் மோதிய சிறுகோளை நோக்கி விரையும் மற்றொரு விண்கலம் - எதற்காக தெரியுமா?
  • டைனோசரை சிறுகோள் அழித்த காலத்தில் பூமியில் பேரழிவை ஏற்படுத்திய மற்றொரு பொருள் - என்ன நடந்தது?
  • ஆக்ஸியம் 4: அல்வா, அன்னப் பறவை பொம்மையை விண்வெளிக்கு எடுத்துச் செல்வது ஏன்?
1. அபோபிஸ் NASA அடுத்த நூற்றாண்டில் அபோபிஸ் செயற்கைக்கோளால் பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என நாசா தெரிவித்துள்ளது.

குழப்பம் மற்றும் அழிவிற்கான எகிப்திய கடவுளான அபோபிஸின் பெயரிடப்பட்ட இந்த சிறுகோள் 2004ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இது பூமியைத் தாக்க வாய்ப்பு இருப்பதாகத் தோன்றிய நிலையில் "அடுத்த 100 ஆண்டுகளுக்கு அபோபிஸால் பூமிக்கு எந்த பாதிப்பு ஏற்படும் என்கிற ஆபத்து இல்லை என உறுதியாக இருக்கிறோம்" அறிவித்தது.

"இது 13 ஏப்ரல், 2029 அன்று பூமியைக் கடந்து செல்லும் என நமக்கு இப்போது தெரியும்" என்கிறார் ரோசெக்.

மேலும் அவர், "இது கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது பூமிக்கு மிக நெருக்கமாக வரும், நாம் புவிநிலை செயற்கைகோள்களை வைத்திருக்கும் இடத்திற்கு மிக அருகில் வரும். பூமியின் நெருக்கம் இந்த சிறுகோளை விரிவாக்கி அதன் உருவத்தை மாற்றும் என நாங்கள் எண்ணுகிறோம்" என்றார்.

நாசா கூற்றுப்படி, பூமியின் ஈர்ப்புவிசை ஒரு இழுவை விசையை உருவாக்கும், இது சூரியனைச் சுற்றிய அபோபிஸின் சுற்றுப்பாதையை மாற்றும், இதன் மூலம் சிறுகோளில் சில சிறிய நிலச்சரிவுகள் கூட ஏற்படலாம்.

இது 340 மீ சராசரி விட்டத்தைக் கொண்டுள்ளது - இது மூன்று கால்பந்து மைதானத்தின் நீளத்திற்குச் சமமானது. இது பூமி பரப்பிலிருந்து 32,000 கிமீ தூரத்தில் கடந்து செல்லும். நம்முடைய கண்களால் காணக்கூடிய தூரம் தான்.

2. 2024 ஒய்ஆர்4 ATLAS 2024 ஒய்ஆர்4 சிறுகோளின் கண்டுபிடிப்பை இந்தப் புகைப்படம் காட்டுகிறது.

இதன் அளவு 53-67 மீட்டர் இருக்கும் என நாசா கணித்துள்ளது - தோராயமான ஒரு 15 மாடி கட்டடத்தின் அளவு. இது 2024ம் ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது, 2032-ல் பூமியைத் தாக்க சிறிய வாய்ப்பு எனத் தெரிந்ததால் உலகெங்கும் தலைப்புச் செய்தியானது.

இது பூமியைத் தாக்க 32-ல் 1 சதவிகித வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கணித்த நிலையில் நாசா அதனை பின்னர் நிராகரித்துவிட்டது.

"பூமியுடன் மோதக்கூடிய பாதையில் செல்லும் சிறுகோள்களை கண்காணிப்பதில் உள்ள சவால்களில் ஒன்று அது பூமியைத் தாக்குவதற்கு எவ்வளவு சாத்தியங்கள் உள்ளது என தீர்மானிப்பது தான்," என்கிறார் கிரேடி.

"அதன் சுற்றுப்பாதையை, திசையை தீர்க்கமாக அறிய தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்." என்றார்.

ஒய்ஆர்4 நிலவைத் தாக்க 3.8% வாய்ப்பு உள்ளது, ஆனால் அவ்வாறு சிறுகோள் - நிலவு மோதல் நிகழ்ந்தால் கூட அதனால் நிலவின் சுற்றுப்பாதையில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை என நாசா தெரிவித்துள்ளது.

  • அமெரிக்காவில் காரே இல்லாத தீவு: மக்கள் வசதி இருந்தும் கார் வாங்காமல் குதிரையில் செல்வது ஏன்?
  • சென்னை: நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலம்பரை கோட்டை யாருடையது?
  • செயற்கை மனிதன் சாத்தியமா? டி.என்.ஏ.வை உருவாக்கும் ஆராய்ச்சி தொடக்கம்
3. டிடிமோஸ் மற்றும் டைமோர்போஸ் NASA/Johns Hopkins APL/Steve Gribben டைமோர்போஸை நாசா விண்கலம் அடைவதைக் காட்டும் சித்தரிப்புப்படம்

கிரேக்க மொழியில் இரட்டையர்கள் என்கிற அர்த்தம் டிடிமோஸ் ஒரு சிறுகோள் ஆகும், டைமோர்போஸ் என்பது அதனைச் சுற்றும் ஒரு சிறிய நிலவு ஆகும்.

இவை இரண்டுமே பூமிக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுவதில்லை, ஆனால் அவை பூமிக்கு மிக நெருக்கமாக செல்லவிருக்கின்றன.

2022-ல் இவை நாசாவின் டபுள் ஆஸ்டெராய்ட் ரிடிரக்ஷன் டெஸ்ட் (டார்ட்) இலக்காக இருந்தது. டைமோர்போஸை தாக்க அனுப்பிய திட்டம், அந்த சோதனையில் தன்னைத் தானே அழித்துக் கொண்டது.

இந்தச் சோதனையின் நோக்கம் என்பது பூமியை அச்சுறுத்தும் விண்கற்களை அதன் பாதையில் விலகிச் செல்ல வைக்க முடியுமா என்பது தான்.

டைமோர்போச் மற்றும் டிடிமோஸ் மிகவும் கவனமாக தேர்வு செய்யப்பட்டன. இரண்டுமே பூமியுடன் மோதக்கூடிய பாதையில் இல்லை. அதன் சுற்றுப்பாதையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அதனால் எந்த ஆபத்துக்கும் அதிகரிக்கப் போவதில்லை.

"பூகோளப் பாதுகாப்பின் முதல் நடைமுறை சோதனையான இந்த திட்டம் டைமோர்போஸ் நிலவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது, டிடிமோஸ் சிறுகோளைச் சுற்றிய அதன் சுற்றுப்பாதையை மாற்றியது" எனத் தெரிவிக்கிறார் ரோசெக்.

"இந்த மாற்றம் பூமியை மையமாகக் கொண்ட கண்காணிப்புகளால் அளவிடப்பட்டுள்ளது. இந்த மோதலின் பின்விளைவுகளை ஆராய அடுத்த ஆண்டு வரவிருக்கும் ஹெரா திட்டத்திற்கு முன்பாக இதனை நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கிறோம்" என்றார் அவர்.

4. சைகே NASA இந்தச் சித்திரத்தில் காட்டப்பட்டுள்ள சைகே நமக்கு மிக தொலைவில் இருக்கிறது. ஆனால் இதன் உள்ளடக்கம் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

"பிரதான ஆஸ்ட்ராய்ட் பெட்டில் மிகவும் சுவாரஸ்யமான பொருட்களில் ஒன்று" என நாசாவால் விவரிக்கப்படும் சைகே 1852-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ஆன்மாவுக்கான கிரேக்க கடவுளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சைகே நமக்கு மிகத் தொலைவில் வியாழன் மற்றும் செவ்வாய் கோள்களுக்கு இடையே சூரியனைச் சுற்றி வருகிறது. இது பாறை மற்றும் உலோகங்கள் ஆனது என நம்பப்படுகிறது.

பெரும்பகுதியாக உலோகங்கள் ப்ளானெடெசிமல் என்கிற கோள்களின் பில்டிங் பிளாக்கின் மையத்தில் இருந்து வந்துள்ளது. இதனை ஆராய்வது பூமியின் மையமும் மற்ற கிரகங்களின் மையமும் எவ்வாறு உருவானது என்பதை அறிய உதவும்.

2023-ல் இதனை ஆராய நாசா ஒரு திட்டத்தைத் தொடங்கியது.

  • சிக்கன் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரிக்கும் என்பது உண்மையா?
  • "இந்து" எனும் பெயரைக் கொடுத்த இஸ்லாமிய ஆட்சி மொழி : இந்தியா-பாரசீக தொடர்பு குறித்த சுவாரஸ்ய தகவல்
  • போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
புதிய கண்டுபிடிப்புகள் NSF-DOE Vera C. Rubin Observatory ட்ரிஃபிட் மற்றும் லகூன் நெபுலாக்களை அதன் துல்லியமாக தகவல்களுடன் காட்டும் வேரா ரூபின் தொலைநோக்கி வெளியிட்ட முதல் புகைப்படம்.

ஜூன் தொடக்கத்தில் வேரா ரூபின் கண்காணிப்பகம் அதன் தொலைநோக்கி பூமிக்கு அருகே 2,000 புதிய சிறுகோள்கள் மற்றும் ஏழு விண்வெளி பொருட்களை வெறும் 10 மணி நேரத்தில் கண்டறிந்தது எனத் தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் தோராயமாக 20,000 சிறுகோள்கள் அனைத்து கண்காணிப்பகங்களாலும் பூமி மற்றும் விண்வெளியில் இருந்து கண்டுபிடிக்கப்படுகிறது.

"முழுமையான இரவு வானை நீங்கள் வரைபடம் செய்ய வேண்டுமென்றால், உங்களுக்கு மிகவும் அகலமான பார்வை புலம் தேவைப்படும். வேரா ரூபின் கண்காணிப்பகத்தில் உள்ள தொலைநோக்கி அதைத்தான் கொண்டுள்ளது" என்கிறார் பேராசிரியர் கிரேடி

இந்தத் திட்டத்தின் முதல் சில வருடங்களில் லட்சக்கணக்கான புதிய சிறுகோள்களைக் கண்டுபிடிப்போம் என எண்ணுவதாக கண்காணிப்பகம் தெரிவிக்கிறது. இது மேலும் அதிக சிறுகோள்களைப் பார்த்து நமது சூரிய குடும்பம் பற்றிய அதிக தகவல்களை பெறுவதற்கான வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு வழங்குகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.