தூக்கத்தில் விந்து வெளியேறுவது ஆண் மலட்டுத்தன்மையின் அறிகுறியா?
BBC Tamil July 07, 2025 05:48 AM
Getty Images தூக்கத்தில் விந்து வெளியேறுவது முற்றிலும் இயல்பானதும், ஆரோக்கியமானதுமான ஒரு நிகழ்வு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறுவதை ஆங்கிலத்தில் wet dreams என கூறுகின்றனர். தூக்கத்தின் போது விந்து வெளியேறுவது விந்து எண்ணிக்கை குறைவதன் அறிகுறி, மலட்டுத்தன்மையின் ஆரம்பக்கட்டம் என்றெல்லாம் பலவிதமான சந்தேகங்கள் ஆண்களிடையே நிலவுகின்றன.

தூக்கத்தில் விந்து வெளியேறுவது இயல்பான ஒரு நிகழ்வு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆண் குழந்தைகள் பதின் பருவத்தை அடையும் போது டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் அளவு அதிகமாகிறது எனவும் இதனால் தூக்கத்தில் விந்து வெளியேறுகிறது எனவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இதுகுறித்து அறிவியலும் ஆய்வுகளும் கூறுவது என்ன?

Getty Images தூக்கத்தின்போது விந்து வெளியேறுவது விந்து எண்ணிக்கை குறைவதன் அறிகுறி என்று கூறப்படுகிறது. பாலியல் கனவுகள்

'Sex Dreams, Wet Dreams, and Nocturnal Emissions' என்ற ஆய்வுக் கட்டுரையில் தூக்கத்தில் விந்து வெளியேற்றத்தைத் தூண்டுவது எது என்பது குறித்து ஹாங் காங்கின் ஷூ யென் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.

இதில் கலந்துகொண்ட 80% பேர் பாலியல் கனவுகள் தூக்கத்தில் விந்து வெளியேற்றத்துக்குக் காரணமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இளம் வயது ஆண்களுக்கு அடிக்கடி பாலியல் கனவு வரும் என்ற கருத்து நிலவினாலும் அவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு 9 முறை பாலியல் கனவு வருவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

கனவுகள் நமது தினசரி எண்ணங்கள் மற்றும் ஆசைகளுடன் தொடர்புடையவை என்ற பொதுவான நம்பிக்கையை இந்த ஆய்வு கேள்விக்குள்ளாக்குகிறது.

வாழ்க்கையில் பாலியல் உறவு முக்கியமான ஒரு பகுதி என்றாலும், அது கனவுகளில் பெரும்பாலும் தோன்றுவதில்லை என்கிறது இந்த ஆய்வு.

''ஆண் உடல் இயற்கையாகவே தொடர்ச்சியாக விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது. பாலுறவு அல்லது சுய இன்பம் மூலம் விந்து வெளியேறாத நிலையில், அந்தச் சேமிக்கப்பட்ட விந்து, தானாகவே தூக்கத்தில் வெளியேறுகிறது. இது ஒரு இயற்கையான முறையாகும்'' என்கிறார் பாலியல் நிபுணர் மருத்துவர் காமராஜ்.

'''பெண்களுக்கு மாதவிடாய் எப்படியோ, அப்படிதான் ஆண்களுக்கு விந்து வெளியேறுவது. ஆனால், விந்தை ஆணின் பலத்துடன் இணைத்து காலம் காலமாகப் பேசப்பட்ட கட்டுக்கதைகள்தான் இவ்வளவு புரளிகளுக்குக் காரணம்'' என்கிறார் மருத்துவர் பூபதி ஜான்.

  • விந்தணு ஒவ்வாமை: விந்து பட்டவுடன் சில பெண்களின் உடலில் கடும் பாதிப்பு ஏற்படுவது ஏன்?
  • விந்தணு கருமுட்டையை இனங்கண்டு நீந்திச் செல்வது எப்படி? ஆண் மலட்டுத் தன்மைக்கு தீர்வு தேடும் விஞ்ஞானிகள்
Getty Images கனவுகள் நமது தினசரி எண்ணங்கள் மற்றும் ஆசைகளுடன் தொடர்புடையவை என்ற பொதுவான நம்பிக்கையை இந்த ஆய்வு கேள்விக்குள்ளாக்குகிறது. ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுமா?

அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலக இணையத்தில் வெளியான சீனாவின் டோங்ஜி மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்களின் அறிக்கையில், உடலுறவின் போது விந்துவை வெளியேற்ற முடியாதவர்களின் (Idiopathic Anejaculation) விந்துகள் நலமுள்ள ஆண்களின் விந்து மாதிரிகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டன.

Idiopathic Anejaculation எனப்படும் இந்த பிரச்னையில் விரைப்புத் தன்மை ஏற்பட்டாலும், விந்து வெளியேறுவதில் சிரமம் ஏற்படும்.

ஆண்களின் 72% மலட்டுத்தன்மைக்கு இந்த பாதிப்பே காரணமாக உள்ளது என்றும், Idiopathic Anejaculation என்ற பிரச்னை உடைய ஆண்களுக்கு பாலியல் உறவின் போதும் தூண்டலின்போதும் விந்து வெளியேற்றுவது சிரமம், ஆனால் தூக்கத்தில் விந்து வெளியேறும் என்று ஆய்வு கூறுகிறது.

இதில் பங்கேற்ற Idiopathic Anejaculation பாதிப்புள்ள 91 பேரிடம் தூக்கத்தில் வெளியேறும் விந்துகளும் பிற வழிகளில் (PVS EEJ அதிர்வு உபகரணங்கள்) வெளியேறும் விந்துகளும் சேகரிக்கப்பட்டன

முடிவில் தூக்கத்தில் இயற்கையாக வெளியேறும் விந்துவின் நகர் திறனும் (30.6%), வடிவமும் (61.4%) பிற வழிகளில் பெறப்பட்ட விந்துவை விட அதிகமாக இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

Idiopathic Anejaculation பாதிப்புள்ள ஆண்களிடம் தூக்கத்தில் இயற்கையாக வெளியேறும் விந்துகள் ஆரோக்கியமாக இருப்பதை இந்தஆய்வு காட்டுகிறது.

தூக்கத்தில் விந்து வெளியேறும் நிலை நிச்சயமற்ற ஒன்று என்பதால் முந்தைய 3 மாதங்களில் தூக்கத்தில் விந்து வெளியேற்றத்தை அனுபவித்தவர்கள், தினமும் இரவு ஆணுறை அணிந்து விந்து மாதிரியைச் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டது என்கிறது இந்த ஆய்வு.

மகப்பேறு மருத்துவத்திற்கான அமெரிக்கச் சங்கத்தின் இணையத்தில் வெளியான ஒரு ஆய்வில், மனநிலை காரணமாக (சைகோஜெனிக்) உடலுறவின் போது விந்து வெளியேறாத பிரச்னையுள்ள ஆண்களின் தூக்கத்தில் வெளியேறும் விந்துக்கு கருத்தரித்தல் திறன் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

தூக்கத்தில் வெளியேறும் விந்துவின் தரம் மாறுபட்டதாக இருக்கலாம், ஆனால் இது செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படலாம் எனவும் இதன் மூலம் மின்சார தூண்டல் (electroejaculation) அல்லது விதைப்பையில் இருந்து நேரடியாக விந்துவை எடுப்பது போன்ற வலிமிகுந்த செயல்முறைகளை தவிர்க்கலாம் எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.

''12 வயது சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமென்றாலும் தூக்கத்தில் விந்து வெளியேறலாம். இப்படி வெளியேறுவதால் ஆணுக்கு மலட்டுத்தன்மை உள்ளது, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றெல்லாம் கூறுவது அறிவியல்பூர்வமற்றது. விந்து வெளியேறிய பிறகு உடல் புதிய விந்தணுக்களை உருவாக்குகிறது. தூக்கத்தில் விந்து வெளியேறுவதோ அல்லது சுய இன்பமோ கருத்தரிப்பை பாதிக்காது '' என்கிறார் காமராஜ்.

  • ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் என்ன நன்மை? அதை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
  • காதலிக்கும் போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது ஏன்? - மூளைக்கும் வயிற்றுக்கும் உள்ள தொடர்பு
Getty Images ''உடலுறவு மூலமோ, சுய இன்பம் மூலமோ, தூக்கத்திலோ எப்படியாவது விந்துகள் வெளியே வந்தே தீரும்.'' தூக்கத்தில் விந்து வெளியேறுவது ஏன்?

'' ஒருவருக்கு உற்பத்தியாகும் விந்துகள் seminal vesicle எனும் பகுதியில் சேமிக்கப்படும். விந்துகள் உற்பத்தி விகிதம் நபருக்கு நபர் மாறுபடும். எப்படி தண்ணீர் தொட்டியில் நீர் நிறைந்துவிட்டால் வெளியேறுகிறதோ அதுபோலத்தான் விந்து வெளியேற்றமும்'' என்கிறார் பூபதி ஜான்.

wet dreams ஆல் அதாவது தூக்கத்தில் வெளியாகும் விந்துகள் ஒரு நபருக்குத் தனிப்பட்ட பிரச்னை இருப்பதைக் குறிக்கவில்லை என்கிறார் காமராஜ்.

''பல ஆய்வுகள் வந்திருந்தாலும் தூக்கத்தின் போது விந்து வெளியேறுவதற்கான காரணங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. ஒரு நபர் பாலியல் பற்றி கனவு காணும்போது அல்லது படுக்கை/ விரிப்புகளிலிருந்து தற்செயலான உடல் தூண்டுதலை அனுபவிக்கும்போது அவை ஏற்படலாம். இப்படி நடப்பது உடல் பலத்தைக் குறைக்கும், உடலுறவில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.''

'' உடலுறவு மூலமோ, சுய இன்பம் மூலமோ, தூக்கத்திலோ எப்படியாவது விந்துகள் வெளியே வந்தே தீரும். சொல்லப்போனால் இது உடல் இயல்பான நிலையில் உள்ளது என்பதைக் காட்டுகிறது'' என்கிறார் காமராஜ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.