கேரள மாநிலத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் அதிக அளவிலான மக்கள் நாய் கடியினால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்காக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் நாய்கடியினால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் கடந்த 5 மாதங்களில் 1,65,136 நாய்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 17 பேர் நாய் கடியினால் ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சமூக ஆர்வலர் ராஜு என்பவர் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து பெற்றுள்ளார். தற்போது இந்த தகவல் வெளியாகி கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து மார்ச் வரை எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டுமே 9,169 பேர் நாய் கடியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு போன்ற பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான நாய்க்கடி வழக்குகள் பதிவாகியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் அஷ்ரப், “தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்தான் பாதிப்புகள் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக பொதுமக்கள் நாய்களுக்கு உணவளிக்கின்றனர். அதனால் சில தெரு நாய்களின் மூலம் மற்ற பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
அதோடு சில உணவகங்களில் வீணாகும் உணவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை நாய்களுக்கு உணவாக அளிப்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்” என்று கூறினார். மேலும் தெருநாய்கள் மூலமாக பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதை தடுப்பதற்காக தெரு நாய்கள் பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பில் நிபுணத்துவம் பெற்ற கோவாவை தலையிடமாக கொண்டு செயல்படும் தன்னார்வ அமைப்பு விரைவில் கேரளாவில் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.