திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் இனாம்புதூர் ஊராட்சி வையமலைப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆவாரம்பட்டியை சேர்ந்த ஆரோக்கியராஜ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று பிற்பகலில் பள்ளிக்கு மதுபோதையில் தள்ளாடியபடி வந்த ஆரோக்கியராஜ், வகுப்பறையிலேயே மேஜை நாற்காலிகளை தள்ளிவிட்டு சரிந்து விழுந்தார். இதை பார்த்த மாணவர்கள், அக்கம் பக்கத்திலிருந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியருக்கு தண்ணீர் கொடுத்து உதவினர்.
அதே நேரத்தில் சிலர் மொபைலில் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த வட்டார கல்வி அலுவலர் லதா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை மருத்துவ பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவர் மதுபோதையில் இருந்தது உறுதியானது. இதையடுத்து ஆரோக்கியராஜை சஸ்பெண்ட் செய்து வட்டார கல்வி அலுவலர் லதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் டாஸ்மாக்கை நம்பி மட்டுமே மொத்த அரசும் இயங்கும் திமுக ஆட்சியில், வகுப்பறைகள் வரை சாராய வெள்ளம் பாயத்தானே செய்யும்? என விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வகுப்பறையில் மயங்கிக் கிடந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் இந்த "டாஸ்மாக் மாடல்" அரசின் லட்சணம் என்ன என்பதை மக்களுக்கு உரக்கக் கூறுகிறது. பானையில் உள்ளது தானே குவளையில் வரும்?
டாஸ்மாக்கை நம்பி மட்டுமே மொத்த அரசும் இயங்கும் திமுக ஆட்சியில், வகுப்பறைகள் வரை சாராய வெள்ளம் பாயத்தானே செய்யும்? 'கையில் மது புட்டியுடன் வகுப்பறைக்கு வரும் ஆசிரியர்களைக் கொண்ட இச்சமூகத்தில், மாணவர் கைகளில் பயங்கர ஆயுதங்கள் புழங்குவதை எப்படித் தடுக்க முடியும்? பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர் போதையில் மூழ்கிக் கிடப்பது, ஒழுக்கம் கற்பிக்க வேண்டிய ஆசிரியரே பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, சாதிகள் இல்லையடி என போதித்த வாயால் மாணவரின் சாதிப்பெயரை சொல்லித் திட்டுவது ஆகியவையெல்லாம் திமுக-வின் நான்காண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை நாசமாகிவிட்டதற்கான சான்றுகள்.
இப்படி அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித் துறையையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் பற்றி எந்தக் கவலையுமில்லாமல் "பள்ளிக்கல்வித்துறை எனது கோட்டை" என சினிமா வசனம் பேசி விளம்பரம் தேடுவதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள். நாடக முதல்வருக்கு வாய்த்த மிகச் சரியான விளம்பர அமைச்சர்!
இவ்வாறு, தங்களது நிர்வாகக் குளறுபடிகளால் தமிழகத்தின் கல்வித்தரத்தை ஒட்டுமொத்தமாக சீரழித்துவிட்டு, ஏழை எளிய மாணவர்களின் வளமான எதிர்காலத்தை இருட்டடிக்க முயலும். திமுக அரசின் அத்தனை திட்டங்களையும் முறியடிப்போம்! வரும் சட்டமன்றத் தேர்தலில் திறனற்ற மக்கள் விரோத திமுகவைத் தக்க பதிலடி கொடுத்து வீட்டுக்கு அனுப்புவோம்!" எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?