அரசு பள்ளி வகுப்பறையில் குடிபோதையில் படுத்திருந்த ஆசிரியர்… வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்… அமைச்சர் அன்பில் மகேஷ் மீது பாய்ச்சல்…!!!
SeithiSolai Tamil July 09, 2025 01:48 AM

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வகுப்பறையில் மயங்கிக் கிடந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் இந்த “டாஸ்மாக் மாடல்” அரசின் லட்சணம் என்ன என்பதை மக்களுக்கு உரக்கக்கூறுகிறது.

பானையில் உள்ளது தானே குவளையில் வரும்? டாஸ்மாக்கை நம்பி மட்டுமே மொத்த அரசும் இயங்கும் திமுக ஆட்சியில், வகுப்பறைகள் வரை சாராய வெள்ளம் பாயத்தானே செய்யும்? கையில் மது புட்டியுடன் வகுப்பறைக்கு வரும் ஆசிரியர்களைக் கொண்ட இச்சமூகத்தில், மாணவர் கைகளில் பயங்கர ஆயுதங்கள் புழங்குவதை எப்படித் தடுக்க முடியும்?

பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர் போதையில் மூழ்கிக் கிடப்பது, ஒழுக்கம் கற்பிக்க வேண்டிய ஆசிரியரே பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, சாதிகள் இல்லையடி என போதித்த வாயால் மாணவரின் சாதிப்பெயரை சொல்லித் திட்டுவது ஆகியவையெல்லாம் திமுக-வின் நான்காண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை நாசமாகிவிட்டதற்கான சான்றுகள்.

இப்படி அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித் துறையையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் பற்றி எந்தக் கவலையுமில்லாமல் “பள்ளிக்கல்வித்துறை எனது கோட்டை” என சினிமா வசனம் பேசி விளம்பரம் தேடுவதில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள். நாடக முதல்வருக்கு வாய்த்த மிகச் சரியான விளம்பர அமைச்சர்!

இவ்வாறு, தங்களது நிர்வாகக் குளறுபடிகளால் தமிழகத்தின் கல்வித்தரத்தை ஒட்டுமொத்தமாக சீரழித்துவிட்டு, ஏழை எளிய மாணவர்களின் வளமான எதிர்காலத்தை இருட்டடிக்க முயலும் திமுக அரசின் அத்தனை திட்டங்களையும் முறியடிப்போம்! வரும் சட்டமன்றத் தேர்தலில் திறனற்ற மக்கள் விரோத திமுகவைத் தக்க பதிலடி கொடுத்து வீட்டுக்கு அனுப்புவோம் என்று பதிவிட்டுள்ளார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.