"இறந்து போன என் கணவரை, உயிர்ப்பித்து மீண்டும் கொன்று விட்டனர்" - உ.பி.யில் நடந்த காப்பீட்டு மோசடி
BBC Tamil July 10, 2025 12:48 AM
Prabhat Kumar/BBC புலந்த்ஷாஹரில் வசிக்கும் சுனிதாவின் கணவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். அந்த நேரத்தில், காப்பீட்டு மோசடி கும்பல் அவரைத் தொடர்பு கொண்டது.

மேற்கு உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில், காப்பீட்டுப் பணத்தை அபகரிக்க பல்வேறு வகையான மோசடிகளில் ஈடுபட்ட கும்பல்களை போலீசார் கைது செய்துள்ளதாகக் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய விசாரணையில் இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஆஷா ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், காப்பீட்டு உரிமைகோரல் புலனாய்வாளர்கள் மற்றும் பலரும் உள்ளனர் என்று விசாரணையை வழிநடத்தும் சம்பல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) அனுக்ரிதி சர்மாவின் கூறுகிறார்.

காப்பீட்டுப் பணத்தைப் பறிப்பதற்காக, கடுமையான நோய்வாய்ப்பட்டவர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டதாகவும், இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக ஆவணங்களில் காட்டப்பட்டதாகவும், கொலைகள் கூட செய்யப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த மோசடிகளுக்காக, மக்களுக்குத் தெரியாமல் ஆதார் தரவு மாற்றப்பட்டு வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அனைத்து அமைப்புகளின் கூற்றையும் பிபிசி அவர்களிடம் பேசி அறிய முயன்றது, ஆனால் யாரிடமிருந்தும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

  • குஜராத்: பாலம் திடீரென இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் - என்ன நடக்கிறது?
  • மராத்தி பேசாத வணிகர்கள் மீது தாக்குதல் - மகாராஷ்டிராவை உலுக்கும் மொழிப் பிரச்னை
  • "இரு குழந்தைகளையும் இழந்து விட்டேன்" - கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த தந்தை வேதனை
மோசடி கண்டறியப்பட்டது எப்படி? Prabhat Kumar/BBC கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சம்பல் அனுக்ரிதி சர்மாவின் கூற்றுப்படி, இந்த காப்பீட்டு மோசடியின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என அறியப்படுகிறது.

ஜனவரி 2025ல், இரண்டு பேரை சாலையில் போலீசார் துரத்திப் பிடித்த சம்பவத்தில் இந்த விசாரணை தொடங்கியது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் மொபைல் போன்கள் மற்றும் காரில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டபோது, இந்த காப்பீட்டு மோசடியின் பல அடுக்குகள் அம்பலமாகத் தொடங்கி, ஒன்றன் பின் ஒன்றாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

"பல மாநிலங்களில் இருந்து எங்களுக்குப் புகார்கள் வந்துள்ளன, ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம். மேலும் இந்த காப்பீட்டு மோசடி, ரூ.100 கோடிக்கு மேல் மதிப்புடையதாக இருக்கலாம்" என்று அனுக்ரிதி சர்மா கூறுகிறார்.

கடுமையான நோய்வாய்ப்பட்டவர்களுக்கு காப்பீடு Prabhat Kumar/BBC ஜூன் 2024 இல் சுனிதாவின் கணவர் சுபாஷ் இறந்த பிறகு, மோசடி கும்பலுடன் தொடர்புடைய நபர்களால் காப்பீட்டுத் தொகை திரும்பப் பெறப்பட்டது. சுனிதாவுக்கு இது பற்றித் தெரியாது.

புலந்த்ஷாஹரில் உள்ள பீம்பூர் கிராமத்தில் வசிக்கும் சுனிதா தேவியின் கணவர் சுபாஷ், உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, காப்பீட்டுக் குழுவினர் ஆஷா அமைப்பின் பணியாளர் ஒருவர் மூலம் அவர்களைத் தொடர்பு கொண்டனர்.

சுனிதாவின் கணவர் காப்பீடு செய்திருந்ததாகவும், கணவர் இறந்த பிறகு, காப்பீட்டுக் கும்பல் அவரது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகையை திரும்பப் பெற்றதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பல் போலீசார் அவருக்குத் தகவல் தெரிவிப்பதற்கு முன்பு சுனிதாவுக்கு இது குறித்து தெரியாது.

புலந்த்ஷாஹரில் உள்ள பீம்பூர் கிராமத்தில் வசிக்கும் சுனிதா, ஜூன் 2024 இல் உடல்நலக்குறைவு காரணமாக தனது கணவரை இழந்தார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் தொலைபேசிகளிலிருந்து சுனிதாவின் ஆவணங்களை சம்பல் போலீசார் மீட்டனர்.

"குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொலைபேசிகளிலிருந்து நூற்றுக்கணக்கானவர்களின் காப்பீட்டு ஆவணங்களை நாங்கள் கண்டறிந்தோம். விசாரணைக்காக, எங்களைச் சுற்றியுள்ள வழக்குகளைத் தேர்ந்தெடுத்தோம்.

காவல் குழு சுனிதாவைச் சென்றடைந்தபோது, தனது கணவர் காப்பீடு செய்திருந்தார் என்பதும், அவருக்கு ஒரு வங்கிக் கணக்கு இருந்ததும், அதில் இருந்து பணம் எடுக்கப்பட்டதும் அவருக்குத் தெரியாது" என்று கூறுகிறார் ஏஎஸ்பி அனுக்ரிதி சர்மா.

படிப்பறிவில்லாத சுனிதாவின் குடும்பம் மிகவும் ஏழ்மையான சூழலில் உள்ளது.

பீம்பூர் கிராமத்தில் வசிக்கும் சுனிதா, "ஆஷா பணியாளர் முதலில் என்னிடம் வந்தார். அவர் ஒரு படிவத்தை நிரப்பச் சொல்லி, ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களை இணைத்து, என்னை கையெழுத்திடச் சொன்னார். அரசாங்கத்திடமிருந்து காப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்றும், என் கணவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அவர் என்னிடம் கூறினார்" என்று கூறுகிறார்.

புலந்த்ஷாஹரின் அனுப் நகரில் உள்ள யெஸ் வங்கிக் கிளையிலும் சுனிதாவின் வங்கிக் கணக்கு திறக்கப்பட்டது. காப்பீட்டுத் தொகை இந்தக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது, அந்தத் தொகையை மற்றொரு பெண் சுய காசோலை மூலம் எடுத்துள்ளார்.

"ஆஷா பணியாளர்கள் முதல் வங்கி ஊழியர்கள் வரை அனைவரும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். சுனிதா ஒருபோதும் வங்கிக்குச் செல்லவில்லை, மேலும் அவரது KYC-ஐ முடித்த பிறகு அவரது கணக்கு திறக்கப்பட்டது.

வங்கிக்குச் செல்லாமலேயே சுய சரிபார்ப்பு முறை மூலம் பணம் எடுக்கப்பட்டது. இது தொடர்பாக யெஸ் வங்கியின் இரண்டு துணை மேலாளர்களையும் நாங்கள் கைது செய்துள்ளோம்" என்று ஏஎஸ்பி அனுக்ரிதி சர்மா கூறுகிறார்.

இதுபோன்ற நடவடிக்கைகளைத் தடுக்க யெஸ் வங்கி என்ன செய்கிறது என்பதை பிபிசி அறிய விரும்பியது.

ஆனால் வங்கி எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

  • ஏமனில் கேரள செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை தேதி அறிவிப்பு - குடும்பத்தின் தரப்பில் தகவல்
  • சூனியம் வைத்ததாகக் கூறி 5 பேர் உயிரோடு எரித்துக் கொலை - பிகாரில் நடந்த பதற வைக்கும் சம்பவம்
  • இந்தி எதிர்ப்பில் தமிழ்நாடு - மகாராஷ்டிரா இடையே என்ன வேறுபாடு?
'நிலத்தை அடமானம் வைத்து, தாலியை விற்றேன்' Prabhat Kumar/BBC பிரியங்காவின் கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, ஒரு காப்பீட்டு மோசடி கும்பல் அவரை அணுகி அரசாங்க உதவி பெற்று ஏமாற்றியது.

இந்த காப்பீட்டுக் கும்பல்கள் கடுமையான நோய்வாய்ப்பட்டவர்களைத் தேடி வந்துள்ளன என்கிறது காவல்துறை.

இந்தக் கும்பல்கள் அரசாங்கத்திடம் இருந்து உதவி கிடைக்கும் என்று உறுதியளித்து, அவர்களது குடும்பத்தினரிடமிருந்து ஆவணங்களைப் பெற்று, அவர்கள் இறந்த பிறகு காப்பீட்டுத் தொகையைத் திரும்பப் பெறுவார்கள்.

சம்பலில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் பிரியங்கா சர்மாவின் வழக்கும் அப்படியானது தான்.

காப்பீட்டுக் குழுவினர் அவர்களைத் தொடர்பு கொண்டபோது பிரியங்கா சர்மாவின் கணவர் தினேஷ் சர்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

"நான் என் கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர்கள் என்னைச் சந்தித்தனர்.

அரசாங்கத்தின் சார்பாக அவர்கள் தீவிரமாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவுவதாகச் சொன்னார்கள். சிகிச்சைக்காக உங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைக்கும், உங்கள் கணவருக்கு ஏதாவது நடந்தால், உங்களுக்கு 20 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றார்கள்" என்று பிரியங்கா கூறுகிறார்.

தனக்கு உதவுவதாக உறுதியளித்தவர்கள் தன்னிடமிருந்து ரூ.1.4 லட்சத்தை எடுத்துக்கொண்டு, தனது அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் சென்றதாக பிரியங்கா கூறுகிறார்.

பிரியங்காவின் கணவர் தினேஷ் சர்மா மார்ச் 2024 இல் புற்றுநோயால் இறந்தார்.

சம்பலில் காப்பீட்டு மோசடி விசாரணை தொடங்கிய பிறகு, பிரியங்காவும் போலீசில் புகார் அளித்தார்.

இருப்பினும், அவரிடம் மோசடி செய்த மூன்று குற்றவாளிகளில் இருவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

கணவரின் மரணமும், அதைத் தொடர்ந்து காப்பீடு என்ற பெயரில் நடந்த மோசடியும் பிரியங்காவை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவருடைய நிலம் அடமானம் வைக்கப்பட்டுள்ளது, எப்படியோ பால் விற்று தனது மூன்று குழந்தைகளுக்கும் அவர் உணவளித்து வருகிறார்.

  • 'புற்றுநோயுடன் போராடும் அக்காவுக்காக...' - 10 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட ஆகாஷ் தீப் உருக்கம்
  • மாலியில் 3 இந்தியர்கள் கடத்தல்: இந்த ஆப்பிரிக்க நாட்டில் இந்தியர்கள் என்ன செய்கிறார்கள்?
  • வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்
இறந்தவர்களுக்கு காப்பீடு Prabhat Kumar/BBC புற்றுநோய் காரணமாக திரிலோக் இறந்த பிறகு, காப்பீட்டு மோசடி கும்பல் காப்பீட்டு பணத்திற்காக அவர் உயிருடன் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது.

காப்பீட்டு மோசடிகள் தொடர்பான விசாரணையின் போது, இறந்தவர்களை ஆவணங்களில் உயிருடன் இருப்பதாகக் காட்டி காப்பீடு எடுக்கப்பட்ட வழக்குகளும் வெளிச்சத்திற்கு வந்தன.

டெல்லியைச் சேர்ந்த திரிலோக் என்பவரின் வழக்கு அவ்வாறானது தான். திரிலோக் ஜூன் 2024 இல் புற்றுநோயால் இறந்தார்.

டெல்லியில் உள்ள நிகம் போத் தகனக் கூடத்தில் திரிலோக் தகனம் செய்யப்பட்டார், அதன் சீட்டும் கிடைக்கிறது.

திரிலோக்கின் மரணத்திற்குப் பிறகு, மோசடி கும்பல் டெல்லியில் உள்ள ஒரு வங்கியில் அவரது கணக்கைத் திறந்து, காப்பீட்டுக் கொள்கையைப் பெற்று, பின்னர் டெல்லியில் உள்ள ஜிபி பந்த் மருத்துவமனையில் இருந்து அவரது இறப்புச் சான்றிதழைப் பெற்றது.

இந்தக் கும்பல் காப்பீட்டுத் தொகையை எடுப்பதற்கு முன்பே, சம்பல் போலீசாரால் அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் வசிக்கும் திரிலோக்கின் மனைவி சப்னா, இந்த மோசடியால் மிகவும் மனமுடைந்து போயுள்ளார்.

சப்னா ஒரு கடை நடத்தி தனது குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்.

பிபிசியிடம் பேசிய சப்னா, "என் கணவர் இறந்துவிட்டார். ஆவணங்களில் அவர் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு பின்னர் மீண்டும் கொல்லப்பட்டார்" என்று கூறுகிறார்.

சப்னா தனது கணவரை நினைத்து உணர்ச்சிவசப்படுகிறார்.

"எங்களுக்கு எல்லா இடங்களிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் புற்றுநோய் தீவிரமடைந்து கொண்டே இருந்தது. அவரது மரணத்திற்குப் பிறகு நான் மிகவும் உடைந்து போனேன்" என்று கூறுகிறார் சப்னா.

திரிலோக் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, காப்பீட்டுக் குழு சப்னாவைத் தொடர்பு கொண்டு, அரசாங்க உதவியைப் பெறுவதாக உறுதியளித்தது.

சப்னா அரசாங்கத்தின் உதவிக்காகக் காத்திருந்தார்.

பின்னர், ஆவணங்களை எடுத்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் அவரது அழைப்புகளை எடுப்பதை நிறுத்தினர்.

காப்பீட்டு மோசடி விசாரணையின் போது சம்பல் போலீசார் சப்னாவை அடைந்தபோது, அவரது கணவரின் காப்பீடு அவரது மரணத்திற்குப் பிறகு செய்யப்பட்டது என்பது அவருக்குத் தெரியாது.

"போலீஸ் வந்தபோது, நான் மிகவும் பயந்தேன். நான் கணவரை இழந்த பெண். போலீஸ் வந்தபோது, நான் ஏதோ தவறு செய்துவிட்டதாக எல்லோரும் நினைத்தார்கள்.

பின்னர் அனுக்ரிதி சர்மா எனக்கு போன் செய்து, உங்களுக்கு எதிராக ஒரு குற்றம் நடந்துள்ளதாகவும், உங்கள் கணவர் உயிருடன் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு மீண்டும் கொல்லப்பட்டதால் உங்கள் வழக்கு சிக்கியுள்ளது என்றும் கூறினார்" என்கிறார் சப்னா.

மேலும், "இந்த கும்பல்கள் ஏற்கனவே சிக்கலில் இருக்கும் என்னைப் போன்றவர்களை குறிவைக்கின்றன. காவல்துறையினர் எனது நிலைமையைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், எனது ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதால், இந்த மோசடியில் நான் குற்றவாளியாகியிருப்பேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

"காப்பீட்டுப் பணத்தை எடுக்க இறப்புச் சான்றிதழ் அவசியம். திரிலோக்கின் வழக்கில், டெல்லியில் உள்ள ஜிபி பந்த் மருத்துவமனையில் இருந்து இறப்புச் சான்றிதழ் பெறப்பட்டது" என்று அனுக்ரிதி சர்மா கூறுகிறார்.

சம்பல் காவல்துறையினருக்கு அளித்த பதிலில், ஜிபி பந்த் மருத்துவமனை இந்த இறப்புச் சான்றிதழ் போலியானது என்று கூறியிருந்தது.

இருப்பினும், விசாரணையின் போது, சம்பல் காவல்துறையினர் ஜிபி பந்த் மருத்துவமனையின் ஒரு பாதுகாவலர் மற்றும் ஒரு வார்டு பாயையும் கைது செய்துள்ளனர். மருத்துவமனையின் ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தக் கடிதத்தை உருவாக்கியதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இது தொடர்பாக ஜிபி பந்த் மருத்துவமனையின் தரப்பை பிபிசி தொடர்பு கொள்ள முயன்றது, ஆனால் மருத்துவமனை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

திரிலோக்கின் காப்பீட்டுத் தொகையான ரூ.20 லட்சம் அவரது வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்தது. ஆனால், அந்த கும்பலைச் சாந்தவர்கள் இந்தப் பணத்தை எடுப்பதற்கு முன்பே, சம்பல் போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

  • '44 காயங்கள், மூளையில் ரத்தக் கசிவு, காதுகளில் உலர்ந்த ரத்தம்' - மரணத்திற்கு காரணம் என்ன?
  • '5 ஆண்டாகியும் நீதி கிடைக்கவில்லை' - சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு என்ன ஆனது?
  • 'சடலமாக வருவான் என நினைக்கவில்லை' என்று கதறும் தாயார் - நகை திருட்டு புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு
காப்பீட்டுப் பணத்திற்காக 'கொலைகள்' BBC 20 வயது அமானின் மரணத்தை விபத்தாகக் காட்டி காப்பீட்டுத் தொகையில் ஒரு பகுதி பெறப்பட்டது. இப்போது காவல்துறையினர் அதை ஒரு கொலையாக விசாரித்து வருகின்றனர்.

காப்பீட்டுப் பணத்திற்கான இந்த மோசடி, தீவிரமாக நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது இறந்தவர்களுக்கு மட்டுமல்ல, காப்பீட்டுப் பணத்தைப் பறிப்பதற்காகக் கொலைகள் கூட செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறுகிறது.

விசாரணையின் போது, சம்பல் காவல்துறை குறைந்தது நான்கு கொலை வழக்குகளைக் கண்டறிந்ததாகவும், அவை விபத்து மரணங்களாகப் பதிவாகியுள்ளதாகவும் ஏஎஸ்பி அனுக்ரிதி சர்மா கூறுகிறார்.

இந்த நான்கு பேரில் ஒருவர் 20 வயது அமன்.

மேற்கு உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மற்றும் சம்பல் மாவட்டங்களின் எல்லை வழியாகச் செல்லும் சாலையில் ரஹாலா காவல் நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஒரு வெறிச்சோடிய இடத்தில் 2023 நவம்பரில் நடந்த விபத்தில் 20 வயது அமனின் மரணத்தைக் காட்டி காப்பீட்டுத் தொகை மீட்கப்பட்டது.

பின்னர், போலீஸ் விசாரணையில், அமன் ஒரு காப்பீட்டு மோசடி கும்பலால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

"குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து அமனின் பல பாலிசி ஆவணங்களை நாங்கள் மீட்டெடுத்தோம். அவரது பிரேத பரிசோதனை அறிக்கையைப் பார்த்தபோது, தலையில் நான்கு காயங்களைத் தவிர, அவரது முழு உடலிலும் வேறு எந்த கீறல்களும் இல்லை" என்று அனுக்ரிதி சர்மா கூறுகிறார்.

"அந்தக் கும்பலைச் சேர்ந்த ஏழு பேரை நாங்கள் பிடித்தபோது, அவர்களில் ஒருவர் நாங்கள் ரஹ்ராவுக்குச் சென்று கொலைகளைச் செய்வதாகக் கூறினார். நாங்கள் அவரை மேலும் விசாரித்தபோது, சலீம் என்ற சிறுவனைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதுவும் அதே வழியில் செய்யப்பட்டது. இந்த வழக்கில், அவர்கள் காப்பீட்டுப் பணமாக 78 லட்சம் ரூபாயைப் பெற்றனர்" என்று அனுக்ரிதி சர்மா கூறுகிறார்.

அமனின் ஆதார் அட்டை டெல்லியின் சத்தர்பூர் பகுதியில் உள்ள பாட்டி குர்த் கிராமத்திலிருந்து தயாரிக்கப்பட்டது. இருப்பினும், உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, அமன் இங்கு ஒருபோதும் வசிக்கவில்லை.

காப்பீட்டு மோசடி தொடர்பாக சம்பல் காவல்துறை பல தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து இதுவரை சுமார் 60 பேரைக் கைது செய்துள்ளது.

  • இந்தியை மூன்றாவது மொழியாக்கும் முயற்சியில் இருந்து மகாராஷ்டிர அரசு பின்வாங்கியது ஏன்?
  • கட்டாய கருக்கலைப்பு: 2 வயது மகளுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண் - திருவண்ணாமலையில் என்ன நடந்தது?
  • தமிழ்நாட்டில் வாட்டர் 'பெல் திட்டம்' துவக்கம் - மாணவர்கள் எந்தெந்த நேரங்களில் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படுவர்?
ஆதார் தரவுகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் Police குற்றம் சாட்டப்பட்டவர் ஆதார் தரவை மாற்ற ஒரு போலி வலைத்தளத்தைத் தொடங்கினார்.

மோசடியை மேற்கொள்ள ஆதார் தரவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, போலியான வயது மற்றும் முகவரிகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

"UIDAI (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) பல பாதுகாப்புகளை உருவாக்கியுள்ளது, அவற்றை எளிதில் கடந்து செல்ல முடியாது. ஆனால் காப்பீட்டுக் குழுவின் வலையமைப்பு மிகவும் சிக்கலானதாக இருந்ததால், உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பாதுகாப்பையும் அவர்கள் தவிர்த்துவிட்டனர்" என்று ஏஎஸ்பி அனுக்ரிதி சர்மா கூறுகிறார்.

ஆதார் தரவுகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து UIDAI அதாவது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் இருந்து பிபிசி அறிய முயன்றது, ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

காப்பீட்டு உரிமைகோரல் புலனாய்வாளர் ஓம்காரேஷ்வர் மிஸ்ரா கைது செய்யப்பட்டதன் மூலம் விசாரணை தொடங்கியது.

அவர் தற்போது சிறையில் உள்ளார். அவர் நிரபராதி என்றும் விரைவில் ஜாமீன் பெறுவார் என்றும் ஓம்காரேஷ்வரின் வழக்கறிஞர் நீரஜ் திவாரி பிபிசியிடம் கூறினார்.

காப்பீட்டு மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் சம்பல் மாவட்டத்தில் உள்ள பாப்ராலா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சச்சின் சர்மா மற்றும் கௌரவ் சர்மாவும் அடங்குவர். பாப்ராலாவில் உள்ள அவர்களின் வீடுகள் பூட்டப்பட்டுள்ளன.

அவர்களது அண்டை வீட்டார் பலர், தங்கள் பெயர்களை வெளியிடாமல், சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு அவர்களின் தந்தை சைக்கிள் டயர் பஞ்சர் கடை நடத்தி வந்ததாகக் கூறுகிறார்கள்.

சச்சின் சர்மா மற்றும் கௌரவ் சர்மாவின் குடும்பங்களுக்கு கிரேட்டர் நொய்டாவில் பல வீடுகள் உள்ளன.

அவர்களின் தரப்பை அறிய, கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தோம், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

சம்பலில் வெளிச்சத்திற்கு வந்த இந்த காப்பீட்டு மோசடியின் விசாரணை நடந்து வரும் நிலையில், மேலும் பல அடுக்குகள் வெளிப்பட்டு வருகின்றன. இது பல மாநிலங்களில் பரவக்கூடும் என்று போலீசார் கூறுகின்றனர்.

  • 'தெளிவில்லாத கோடுகள், தேய்ந்து போன விமான டயர்கள்' - டிஜிசிஏ அறிக்கையில் என்ன உள்ளது?
  • தெலங்கானா: ரசாயன உலையில் வெடிப்பு - தூக்கி வீசப்பட்ட தொழிலாளர்கள்
  • கோவை - திருப்பூர் மாவட்டங்களுக்கிடையே தண்ணீர் பிரச்னையா? - பிஏபி கால்வாய் பாசன விவகாரத்தின் முழு பின்னணி

"எங்களுக்குக் கிடைத்த புகார்களும் தகவல்களும் பல மாநிலங்களிலிருந்து வந்தவை. இது மிகவும் சிக்கலான மோசடி, இதில் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆஷா பணியாளர்கள், கிராம பிரதான், வங்கி, காப்பீட்டு நிறுவன முகவர்கள், ஆதார் பிஓசி மையத்துடன் தொடர்புடையவர்கள்.

மருத்துவமனைகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பல துறைகளைச் சேர்ந்தவர்களை நாங்கள் கைது செய்துள்ளோம். ஒரு பொருளாதாரத்தில் பல பங்களிப்பாளர்கள் இருப்பதால், அந்த வகையான ஊழல்வாதிகளும் மோசடி பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று நீங்கள் கூறலாம்" என்கிறார் ஏஎஸ்பி அனுக்ரிதி சர்மா.

காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கான மிக முக்கியமான ஆவணம் இறப்புச் சான்றிதழ்.

இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்த பிறகு, இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையைக் கோரி வழக்கறிஞர் பிரவீன் பதக் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார்.

"யார் இறந்தார்கள் என்பதை அறியவும், அதன் அடிப்படையில் சரிபார்ப்பு செய்யவும், குறைந்தபட்சம் ஒரு தானியங்கி டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அமைப்பு இருக்க வேண்டும். இதன் மூலம் மரணம் எப்போது நடந்தது என்பதை உறுதிப்படுத்த முடியும். இந்த அமைப்பு மேம்படுத்தப்பட்டால், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கலாம்" என்று பிரவீன் பதக் கூறுகிறார்.

  • கொல்கத்தா சட்டக் கல்லூரியில் என்ன நடந்தது? மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விடை தெரியாத கேள்விகள்
  • அபுதாபியில் ஊதியம் கிடைக்காமல் உணவுக்கே வழியின்றி தவிக்கும் இந்தியர்கள் - என்ன நடக்கிறது?
  • விசா பெற புதிய நிபந்தனை: அமெரிக்கா செல்ல இந்திய மாணவர் என்ன செய்ய வேண்டும்?
KYC ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்துதல்

இந்த மிகப்பெரிய காப்பீட்டு மோசடி வெளிச்சத்திற்கு வந்த பிறகு காப்பீட்டு நிறுவனங்களும் கவலையடைந்துள்ளன.

எஸ்பிஐ லைஃப் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ரஜ்னீஷ் மதுகர் கூறுகையில், பாலிசிதாரருக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தாமல் நிறுவனம் கோரிக்கையை செயல்படுத்துகிறது, மேலும் மோசடி செய்பவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றார்.

"காப்பீட்டுத் தொகைகளை வழங்கும் போது, உரிமை கோருபவர்கள் எந்தப் பிரச்னையையும் சந்திக்காமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. ஏனெனில், ஒருவரின் மரணத்துக்குப் பிறகு குடும்பம் ஏற்கனவே மிகவும் மனவேதனையில் இருக்கிறது. அந்த நேரத்தில்தான் இந்த மோசடிக்காரர்கள் வந்து ஏமாற்றுகிறார்கள்," என்று ரஜ்னீஷ் மதுகர் கூறுகிறார்.

KYC அதாவது அடையாள ஆவணங்களை தவறாகப் பயன்படுத்துவது தான் இந்த மோசடியின் மூல காரணம்.

"இந்த மோசடியைச் செய்ய மக்களின் ஆவணங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது மிகப்பெரிய சவால். இதுபோன்ற சூழ்நிலையில், உண்மையில் பாதிக்கப்பட்டவர்களும் மோசடி தொடர்பான விசாரணையின் கீழ் வருகிறார்கள். அத்தகைய நபர்களைப் பாதுகாப்பதே மிகப்பெரிய சவால்" என்று ஏஎஸ்பி அனுக்ரிதி சர்மா கூறுகிறார்.

"மோசடிகள் கண்டறியப்படும்போது, ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை பயன்படுத்தப்பட்டவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். KYC தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று காப்பீட்டு இடர் மேலாண்மை சங்கத்துடன் தொடர்புடைய ரமேஷ் கரே கூறுகிறார்.

  • பி.எஃப். முன்பணமாக இனி மூன்றே நாளில் ₹5 லட்சம் பெறலாம் - எப்படி?
  • இஸ்ரேல் - இரான் மோதலால் கிருஷ்ணகிரி மாம்பழ ஏற்றுமதி பாதிப்பா? விவசாயிகள் வேதனை
  • கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேர் கைது - என்ன நடந்தது?
காப்பீட்டு மோசடி அதிகரித்து வருகிறது - ஐஆர்டிஏஐ

காப்பீட்டுத் துறையில் மோசடிகளைத் தடுப்பதற்காக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDA) 2024 ஆம் ஆண்டில் வழிகாட்டுதல்களை வெளியிட்டது, இதன் கீழ் கண்டறியப்பட்ட எந்தவொரு மோசடியையும் விசாரிப்பது கட்டாயமாக உள்ளது.

காப்பீட்டு மோசடியின் அளவு குறித்து அதிகாரப்பூர்வ தரவு எதுவும் இல்லை.

இருப்பினும், இது ஆயிரக்கணக்கான கோடிகளில் நடந்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

சம்பலில் நடந்த காப்பீட்டு மாநாட்டில் பேசிய ஐஆர்டிஏஐ நிர்வாக இயக்குநர் மீனா குமாரி, காப்பீட்டு மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஒப்புக்கொண்டார்.

"மோசடி நடந்தால் அதிகபட்சமாக நடப்பது, காப்பீட்டு கோரிக்கைகள் அதிகரிப்பது தான் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், இப்படியான சூழ்நிலையில், அடுத்த ஆண்டில் புதிய பாலிசி எடுப்பவர்கள் அதிக பிரீமியம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஏனெனில், கோரிக்கைகள் அதிகரித்தால் காப்பீட்டு பிரீமியமும் அதிகரிக்கிறது," என்று மீனா குமாரி கூறினார்.

இதுபோன்ற சூழ்நிலையில், காப்பீட்டு நிறுவனங்களுக்கு பாலிசிகளை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் மீது அதன் தாக்கம் நேரடியாக இருக்கும் என்கிறார் மீனா குமாரி.

இந்த காப்பீட்டு மோசடியின் நோக்கம் எவ்வளவு பெரியது என்ற கேள்விக்கு, அனுக்ரிதி சர்மா பதில் கூறுகையில்,

"நாங்கள் ஐந்து மாதங்களாக விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கான போலி பாலிசிகள் அம்பலமாகியுள்ளன. இதுவரை எங்களால் சுமார் 10 சதவீத வேலையை மட்டுமே செய்ய முடிந்தது என நான் நினைக்கிறேன். இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது" என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.