கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
5 போட்டிகள் கொண்ட சச்சின்-ஆன்டர்ஸன் கோப்பை தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்று சமநிலையில் உள்ளனர். இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெறும் அணி டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக முயற்சிப்பார்கள்.
லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கில் இந்திய அணி சோபிக்கவில்லை. கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமைந்து வீரர்கள் நல்ல முறையில் ரன்களைக் குவித்தனர்.
அதிலும் குறிப்பாக ஜெய்ஸ்வால், ராகுல், கேப்டன் சுப்மன் கில், ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் சதம், அரைசதம் அடித்து நல்ல ஃபார்மில் உள்ளனர்.
பந்துவீச்சில் கடந்த 2வது டெஸ்டில் ஆகாஷ் தீப், சிராஜ் இருவரும் இங்கிலாந்து பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தனர். முதல் டெஸ்டில் பீல்டிங்கில் செய்திருந்த தவறுகளை 2வது போட்டியில் திருத்தி, கேட்ச் வாய்ப்புகளை தவறவிடாமல் இந்திய வீரர்கள் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். முதல் டெஸ்டை விட 2வது போட்டியில் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.
குறிப்பாக 2வது டெஸ்டில் அதிகமான ரன்கள் வித்தியாசத்திலும், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதல் வெற்றி பெற்று புதிய வரலாற்றையும் இளம் இந்திய அணியினர் படைத்தனர். கடந்த இரு டெஸ்ட் போட்டிகளும் நடந்த ஆடுகளம் தட்டையானது, பேட்டர்களுக்கு வெகுவாக ஒத்துழைக்கக்கூடியதாக இருந்தது.
ஆனால், நாளை லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் 3வது டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆடுகளமாகும். மற்ற மைதானங்களை விட இந்த மைதானத்தில் ஆடுகளம் சற்று தாழ்வாக இருக்கும் என்பதால், பந்து பேட்டரை நோக்கி சீறிக்கொண்டு வரும். ஆதலால், பேட்டர்கள் இங்கு பொறுமை காத்து, நிதானமாக பேட் செய்வது அவசியமாகும்.
இந்திய அணியில் கடந்த போட்டியில் களமிறங்காத வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்குவார். அதேபோல இங்கிலாந்து அணியில் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு ப்ளேயிங் லெவனில் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடைசியாக ஆர்ச்சர் 2021ம் ஆண்டு ஆமதாபாத்தில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் பங்கேற்றார். அதன்பின் முழுங்கால் காயம், முதுகுதண்டுவட சிகிச்சை ஆகியவற்றால் 4 ஆண்டுகளுக்கும் மேலாக அணியில் இடம் பெறாமல் இருந்த ஆர்ச்சர் நாளைதான் களமிறங்க இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்குள் ஆர்ச்சர் வருவது மிகப்பெரிய பலமாகும், பந்துவீச்சாளர் ஜோஸ் டங்கிற்குப் பதிலாக ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார், இதைத்தவிர பெரிதாக எந்த மாற்றத்தையும் இங்கிலாந்து அணி செய்யவில்லை.
இந்திய அணியிலும் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக பும்ரா களமிறங்குவார். மற்றவகையில் ப்ளேயிங் லெவனில் பெரிதாக மாற்றத்தையும் இந்திய அணி தரப்பில் செய்யமாட்டார்கள் என்று தெரிகிறது.
இங்கிலாந்து அணியில் 2வது டெஸ்டிலேயே ஆர்ச்சர் சேர்க்கப்பட்டாலும் அவருக்கு ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கவில்லை. 2வது போட்டியிலிருந்தே வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆர்ச்சரை தீவிரமாகக் கண்காணித்த பின், பயிற்சியாளர் மெக்கலம் 3வது டெஸ்ட் போட்டியில் ப்ளேயிங் லெவனில் சேர்த்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் தற்போதைய பந்துவீச்சாளர்கள் பெரிதாக அனுபவம் இல்லாதவர்கள். வோக்ஸ், ஸ்டோக்ஸ் தவிர ஜோஸ் டங், கார்ஸ், இருவருமே அனுபவம் குறைந்தவர்கள். ஜோஸ் டங் இரு போட்டிகளில் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியில் முன்னணி விக்கெட் வீழ்த்தியவராக இருந்தாலும், ஓவருக்கு 4.5 ரன்ரேட் வழங்குவது பெரிய கவலையாக இருந்தது. கார்ஸ், வோர்ஸ் இருவரும் இரு போட்டிகளில் சேர்த்து சராசரியாக 70 ஓவர்களுக்கு மேல் பந்துவீசியுள்ளனர். ஆனால், பெரிதாக ரன்களை விட்டுக்கொடுக்கவில்லை.
வேகப்பந்துவீச்சாளர் அட்கின்சன் சேர்க்கப்பட்டிருந்தாலும், அவர் 3வது மற்றும் 4வது டெஸ்டில் விளையாடமாட்டார். சர்ரே கவுண்டி அணிக்காக ஆட இருப்பதால் கடைசி டெஸ்டில் அட்கின்சன் வருவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆதலால், இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் மட்டுமே மாற்றமாக இருக்கும்.
ஆர்ச்சரைப் பொருத்தவரை 2019 ஆஷஸ் தொடரிலிருந்து கடைசியாக 2021ம் ஆண்டுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்ட ஆர்ச்சரை மீண்டும் அணிக்குள் கொண்டுவர இங்கிலாந்து நிர்வாகம் மிகவும் மெனக்கெட்டது. அதனால்தான் அவருக்கு 2வது போட்டியில் போதுமான ஓய்வும், பயிற்சியும், கண்காணிப்பும் செய்து அணிக்குள் கொண்டு வருகிறார்கள்.
இவர் தவிர கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு மார்க்வுட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், கடைசி டெஸ்டில் மார்க்வுட், அட்கின்சன் அணிக்குள் வரலாம் என்று நம்பப்படுகிறது.
லார்ட்ஸ் மைதானம் பாரம்பரியமாகவே வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக் கூடியது. இந்த மைதானத்தில் ஆர்ச்சர் போன்ற அதிவேக பந்துவீச்சாளர்கள் காற்றைக் கழித்துக்கொண்டு பந்துவீசுவது இந்திய பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும்.
கார்ஸ், வோக்ஸ், ஸ்டோக்ஸ் ஆகிய 3 பந்துவீச்சாளர்களும் கடந்த 2 போட்டிகளாக இந்திய பேட்டர்களுக்கு பந்துவீசி அவர்களின் பலம், பலவீனத்தை தெரிந்து கொண்டுள்ளனர். ஆதலால், லார்ட்ஸ் மைதானத்தில் இன்னும் எளிதாக இந்திய பேட்டர்களை அணுக முடியும். சுழற்பந்துவீச்சுக்கு பஷீர், அவருக்கு துணையாக 5வது பந்துவீச்சாளராக ஜோ ரூட் பந்துவீசுவார். மற்றவகையில் இங்கிலாந்து அணி வேகப்பந்துவீச்சை முழுமையாக நம்பி இருக்கிறது.
பேட்டிங்கில் இங்கிலாந்து வீரர்களில் பென் டக்கெட், ஸ்மித், ப்ரூக் ஆகியோர் கடந்த இரு போட்டிகளிலும் சிறப்பாக ஆடியுள்ளனர். கிராளி, ஆலி போப், ஜோ ரூட், கேப்டன் ஸ்டோக்ஸ் இதுவரை ஃபார்முக்கு வராமல் இருப்பது அந்த அணிக்கு பெரிய கவலையாகும். முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றதற்கு டக்கெட்டின் பேட்டிங்கும், ப்ரூக், ஸ்மித்தின் சதமும் முக்கியக் காரணமாக அமைந்தது.
ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் இரு போட்டிகளிலும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை, ஆனால், பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுகிறார்கள், நல்ல வியூகங்களை வகுக்கிறார். ஜோ ரூட் அனுபவமான பேட்டராக நடுவரிசையில் இருப்பது அந்த அணிக்கு பெரிய பலமாக இருந்தாலும், நிலைத்தன்மை அவரின் பேட்டிங்கில் இல்லை.
லாட்ஸ் மைதானத்தில் பென் ஸ்டோக்ஸ், டக்கெட், போப் ஆகிய 3 பேருமே கடந்த காலங்களில் சதம் அடித்திருப்பது பெரிய நம்பிக்கையை அளிக்கும். வோக்ஸ், ஸ்டோக்ஸ் இருவருமே லார்ட்ஸ் மைதானத்தில் 25 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி அனுபவம் வாய்ந்தவர்களாக இருப்பது பெரிய பலமாகும்.
அதிலும் 145 கி.மீ வேகத்துக்கு அதிகமாக பந்துவீசும் வோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோரின் பந்துவீச்சு இந்திய பேட்டர்களை கலங்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பும்ராவின் வருகை2வது டெஸ்ட் போட்டியில் வென்ற அதே இந்திய அணிதான் சிறிய மாற்றத்துடன் 3வது போட்டியில் களமிறங்கும் எனத் தெரிகிறது. பிரசித் கிருஷ்ணாவுக்குப்பதிலாக பும்ரா களமிறங்குவார். மற்றவகையில் மாற்றம் இருக்காது என கிரிக்இன்போ தளம் தெரிவித்துள்ளது. இந்திய அணியில் கருண் நாயரின் ஃபேட்டிங் ஃபார்ம்தான் கவலைக்குரியதாக இருக்கிறது. 8 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்டில் வாய்ப்புக் கிடைத்தும் இரு போட்டிகளிலும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இருப்பினும் அவரை மாற்றாமல்தான் இந்திய அணி களமிறங்கும் எனத் தெரிகிறது.
பந்துவீச்சில் பும்ராவுக்குத் துணையாக சிராஜ், ஆகாஷ் தீப் ஆகிய மூவரும் 4வது பந்துவீச்சாளராக நிதிஷ் ரெட்டியும் இருப்பார். சுழற்பந்துவீச்சுக்கு ஜடேஜா, வாஷிங்டன் இருவர் இருக்கிறார்கள். 2வது டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப் 10 விக்கெட்டுகளை எடுத்து பும்ரா இல்லாத இடத்தை நிறைவு செய்துவிட்டார். சிராஜும் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் 3 பந்துவீச்சாளர்களுமே விக்கெட் வீழ்த்தும் ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பெரிய பலமாகும்.
லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பந்துவீச்சாளர்கள் மோதுவதற்கான களமாக இருப்பதால், இரு அணிகளின் வேகப்பந்துவீச்சாளர்களும் தங்களின் திறனை உரசிப்பார்க்கும் போட்டியாக இருக்கும்.
இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேரன் காஃப் பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "இந்திய அணியில் பும்ரா வருகைக்குப்பின், 3 வேகப்பந்துவீச்சாளர்களுமே விக்கெட் வீழ்த்தும் திறமையுடன் இருப்பது அணிக்கு பெரிய பலமாக இருக்கும். லார்ட்ஸ் மைதானத்தில் இரு அணிகளின் பந்துவீச்சாளர்களும் தங்கள் திறனை வெளிப்படுத்தும் களமாக இருப்பது பார்க்க உற்சாகமாக இருக்கும். அதேசமயம், இந்திய பந்துவீச்சாளர்களோடு ஒப்பிடும்போது இங்கிலாந்து பந்துவீச்சு சற்று பின்னடைந்துள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.
இந்திய அணி செய்ய வேண்டியது என்ன?பேட்டிங்கைப் பொருத்தவரை ஜெய்ஸ்வால், ராகுல், சுப்மன் கில், ஜடேஜா, ரிஷப் பந்த் என டாப்ஆர்டர் பேட்டர்கள், நடுவரிசை பேட்டர்கள் அரைசதம், சதம், தொடர் சதம் அடித்து வலுவான ஃபார்மில் இருக்கிறார்கள். இதில் கருண் நாயர் பேட்டிங் மட்டுமே கவலையளிப்பதாக உள்ளது. வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டிவரை பேட்டர்கள் இருப்பது இந்திய அணிக்கு பெரிய பலம்.
ஆனால், கடந்த 2 போட்டிகளில் ரன் குவித்ததைப் போன்று லார்ட்ஸ் மைதானத்தில் எளிதாக ரன்கள் குவிக்க முடியாது. பேட்டர்கள் பொறுமையாக, நிதானமாக செயல்பட்டால்தான் ரன்களை நோக்கி நகர முடியும் என்பதால், பேட்டர்களின் திறனை உரசிப்பார்க்கும் உறைகல்லாக இருக்கும்.
பேட்டர்களை தவறு செய்ய வைக்கும் வகையில் பந்தில் பவுன்ஸர், ஸ்விங், சீமிங் இருக்கும் என்பதால், பேட்டர்கள் ஏமாந்து வி்க்கெட்டை விடாமல் பேட் செய்வது அவசியமாகும்.
லார்ட்ஸ் மைதானத்தைப் பொருத்தவரை முதலில் சோதனைக்குள்ளாவது டாப்ஆர்டர் பேட்டர்கள்தான். ஆதலால், ராகுல், ஜெய்ஸ்வால் மிகுந்த பொறுமையுடன் முறைப்படியான டெஸ்ட் போட்டியில் பேட் செய்வதைப் போல் பேட் செய்து முதல் செஷனைக் கடந்தால்தான் அடுத்துவரும் பேட்டர்களுக்கு நெருக்கடியில்லாமல் விளையாட முடியும்.
முதல் செஷனிலேயே விக்கெட்டை இழந்தால், அதன்பின் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆதலால், இந்த மைதானத்தில் முதல் செஷன் ஆட்டம் என்பது மிக மிக முக்கியமானதாகும்.
டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுப்பதுதான் இங்கு சரியான முடிவாக இருக்கும். இங்கு டாஸ் வென்ற அணிதான் 55 சதவீத போட்டிகளில் வென்றுள்ளது.
முதல் செஷன் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இந்த முதல் செஷன் வரை இந்திய பேட்டர்கள் விக்கெட்டை விடாமல் பொறுமையாக பேட் செய்விட்டால் நிலைத்துவிடலாம்.
ஆனால், முதல் செஷனில் புதிய பந்து, காற்றின் வேகம், ஆடுகளம் ஆகியவற்றால் மின்னல் வேகத்தில் பந்து பேட்டரை நோக்கி வரும் என்பதால் விக்கெட்டை காப்பாற்றி பேட்டர்கள் ஆடுவது அவசியமாகும்.
ஆடுகளம் எப்படி இருக்கும்?கிரிக்கெட்டின் மெக்கா என வர்ணிக்கப்படும் லார்ட்ஸ் மைதானம் பாரம்பரியமாக வேகப்பந்துவீச்சாளர்களின் சொர்க்கபுரி. இந்த மைதானத்தில் முதல் செஷன் என்பது 5 நாட்களுமே முக்கியமானதாக இருக்கும். ஆடுகளத்தில் புற்கள் இருக்குமாறு பராமரித்துவருவதால், இயல்பாக வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கமே இங்கு அதிகமிருக்கும் பேட்டர்கள் சற்று சிரமப்பட்டுதான் பேட் செய்ய வேண்டியதிருக்கும். சிறிய தவறு, தவறான ஷாட் ஆட முயன்றாலும் விக்கெட்ட இழக்க நேரிடும்.
இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 344 ரன்கள்தான் சேஸ் செய்யப்பட்டுள்ளது என்பதால் கடைசி நாளில் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறியிருக்கும். முதலில் பேட் செய்யும் அணி சராசரியாக 300 ரன்கள் சேர்ப்பதே கடினம்தான். ஓவருக்கு 2 முதல் 3 ரன்கள் தான் சேர்க்க முடியும் என்பதால் பேட்டர்களுக்கு சவாலாக இருக்கும்.
லார்ட்ஸில் இந்தியாவின் பெர்ஃபார்மன்ஸ் எப்படி உள்ளது?இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று அதில் 3 போட்டிகளில்தான் வென்றுள்ளது, 12 போட்டிகளில் தோல்வி அடைந்து, 4 போட்டிகளை டிரா செய்துள்ளது. 1932ம் ஆண்டிலிருந்து லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய இந்திய அணி 1986ம் ஆண்டுதான் முதல் வெற்றியை கபில் தேவ் தலைமையில் பெற்றது. அதன்பின் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 2வது வெற்றிக்காக காத்திருந்து தோனி தலைமையில் ஒரு வெற்றியும் 2021ல் விராட் கோலி தலைமையில் ஒரு வெற்றியையும் இந்திய அணி பெற்றது.
இந்திய அணியில் இப்போது இருக்கும் வீரர்களில் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக சதம் அடித்துள்ளார், ஜடேஜா அரைசதம் அடித்துள்ளார். பந்துவீச்சாளர்களில் பும்ரா ஒரு போட்டியில் ஆடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியில் இப்போது இருக்கும் பெரும்பாலான வீரர்களுக்கு லார்ட்ஸ் மைதானம் என்பது புதுவிதமான அனுபவமாக இருக்கும்.
இங்கிலாந்து அணி இந்த மைதானத்தில் 145 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 59 போட்டிகளில் வென்றுள்ளது, 35 போட்டிகளில் தோல்வி அடைந்து 51 போட்டிகளை டிரா செய்திருக்கிறது.
லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் கனவாக இருக்கும். இந்த மைதானத்தில் ஒரு பந்துவீச்சாளர் விக்கெட் எடுத்தாலும், பேட்டர் அரைசதம், சதம் அடித்தாலும் அது அவருக்கு வாழ்நாளில் மிகப்பெரிய நினைவலையாக இருக்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு