லார்ட்ஸ் டெஸ்டில் 'நங்கூரமிட்ட' ரூட் – இங்கிலாந்தின் பாஸ்பால் பாணிக்கு சவால் விடுத்த இந்தியா
BBC Tamil July 11, 2025 01:48 PM
Getty Images ஜோ ரூட் மாஸ்டர்கிளாஸ் நடத்திக்காட்டினார்

பாஸ்பால் (Bazball) அணுகுமுறை காலாவதியாகிவிட்டது, இங்கிலாந்து அணி இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சுக்கு அடிபணிந்துவிட்டது என சமூக ஊடகங்கள் முழுக்க எக்கச்சக்க பதிவுகளை பார்க்க முடிகிறது.

ஆனால், உண்மையில் நேற்று லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து அணி பாஸ்பால் பாணியில்தான் பேட்டிங் செய்தது.

"பாஸ்பால் என்பது வெறுமனே அதிரடியாக விளையாடுவது மட்டுமல்ல; தேவைப்படும் சமயத்தில் அணியின் நலனுக்காக அடக்கி வாசிப்பதும் பாஸ்பால் தான்" என்று ஒருமுறை இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் மொயின் அலி கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது.

இந்தியா இங்கிலாந்துக்கு இடையே நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய 3வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், வழக்கத்துக்கு மாறாக பேட்டிங்கை தேர்வு செய்தது ஆச்சர்யம்தான்.

  • ஆண்டு முழுக்க ஒரு நாள் விடாமல் 366 மாரத்தான்கள் ஓடிய மனிதர் - இதயத்தில் ஏற்பட்ட மாற்றம்
  • லார்ட்ஸில் வெற்றி பெற இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?
Getty Images

வழக்கமாக லார்ட்ஸ் ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்தமுறை புற்களை அதிகம் விடாமல், ஆடுகளத்தை தயார் செய்திருக்கிறார்கள்.

முதல் 10–15 ஓவர்களை தாக்குப்பிடித்து விளையாடிவிட்டால், அதன்பிறகு பேட்டிங்கிற்கு சாதகமாக களம் மாறும் என்பது இங்கிலாந்தின் நம்பிக்கையாக இருந்திருக்கலாம். ஆனால், ஆடுகளம் மெதுவாகவும் (Slow), இரட்டை வேகம் (Two paced) கொண்டதாகவும் இருந்தது. அதாவது ஒரு பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆகும். அடுத்த பந்து எதிர்பார்த்த அளவுக்கு பவுன்ஸ் ஆகாமல் தாழ்வாக செல்லும்.

இதுபோன்ற ஒரு ஆடுகளத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என ஜோ ரூட் மாஸ்டர்கிளாஸ் நடத்திக்காட்டினார். ஹைலைட்ஸ் மட்டும் பார்ப்பவர்களுக்கு ரூட்டின் நேற்றைய இன்னிங்ஸ் சுவாரஸ்யமாக இருக்காது. ஆடம்பரமான கவர் டிரைவ்களோ கண்ணைப் பறிக்கும் ஸ்கொயர் கட்டுகளோ இந்த இன்னிங்சில் எதிர்பார்க்க முடியாது.

ஆடுகளத்தின் மெதுவான தன்மையை புரிந்துகொண்டு பந்தை நன்றாக உள்வாங்கி தன் பலத்துக்கு ஏற்ப விளையாடி உழைத்து ரன் சேர்த்தார் ரூட்.

பவுண்டரிகள் கூட நேர்க்கோட்டில் விளையாடியும் தேர்ட் மேன், பைன் லெக் திசையில் தட்டிவிட்டு ரன்களை எடுத்தார். பும்ராவை எதிர்கொள்ள தயங்கிய ரூட், ஆரம்பத்தில் அவர் ஓவரை புத்திசாலித்தனமாக தவிர்த்தார். போப் உடனான அவருடைய பார்ட்னர்ஷிப், இந்த இன்னிங்சில் இங்கிலாந்துக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தது.

  • 'புற்றுநோயுடன் போராடும் அக்காவுக்காக...' - 10 விக்கெட் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட ஆகாஷ் தீப் உருக்கம்
  • தோனி ஓய்வு பெற்று 5 ஆண்டுகளானாலும் இன்றும் மவுசு குறையாத ரகசியம் என்ன?
Getty Images இங்கிலாந்து வீரர்கள் ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் கட்டுக்கோப்பான பந்துவீச்சு... ஆனாலும்!

போப் வழக்கம் போல பதற்றத்துடன் இன்னிங்ஸை தொடங்கினாலும், போகப் போக ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப தன் ஆட்டத்தை தகவமைத்துக்கொண்டார்.

பும்ராவின் ஓவர்களை ரூட் எதிர்கொள்ள தயங்கிய போது, பொறுப்பை ஏற்றுக்கொண்டு விளையாடி தனது சக வீரரின் நெருக்கடியை போக்கினார். இந்தியாவின் பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்தாலும், அது கடந்த டெஸ்டை போல அபாயகரமானதாக தோற்றமளிக்கவில்லை.

அதற்கு ஆடுகளத்தின் மெதுவான வேகம் மட்டுமில்லாமல் லார்ட்ஸ் ஆடுகளத்தின் ஸ்லோப்பை (Slope) பயன்படுத்தி பந்துவீசுவதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தடுமாறியதும் முக்கிய காரணம்.

லார்ட்ஸ் மைதானத்தில் pavilion end இல் இருந்து Nursery end நோக்கி பந்துவீசும் போது, அங்கு ஒரு சிறியதாக ஒரு சரிவு இருக்கும். அதை சரியாகப் பயன்படுத்தி வீசினால், பந்தை உள் நோக்கி கொண்டு சென்று பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி கொடுக்கலாம். ஆனால், கடந்த டெஸ்டில் சாதித்த ஆகாஷ் தீப், அனுபவமின்மை காரணமாக ஸ்லோப்பை நேற்று சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

Getty Images ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்பிய பும்ரா, தொடக்கத்தில் சரியான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசி, இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் எளிதாக ரன் குவிக்க முடியாமல் செய்தார். நிதிஷ் குமார் தந்த திருப்புமுனை

ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்பிய பும்ரா, தொடக்கத்தில் சரியான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசி, இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் எளிதாக ரன் குவிக்க முடியாமல் செய்தார்.

பாஸ்பால் யுகத்தில் மிகவும் மெதுவான முதல் செஷன் இதுவாகத்தான் இருக்க முடியும்.

பும்ராவின் துல்லியமான பந்துவீச்சில் கைகள் கட்டப்பட்டிருந்த தொடக்க வீரர்களான டக்கெட்டும் கிராலியும் நிதிஷ் குமார் வந்தவுடன் ரன் குவிக்கும் ஆசையில் ஆட்டமிழந்தனர்.

முதன்மை வேக வீச்சாளர்கள் சரியான லெங்த் பிடிக்க முடியாமல் சிரமப்பட்ட நிலையில், பேட்டிங் ஆல்ரவுண்டரனான நிதிஷ் குமார், தனது High arm பந்துவீச்சு ஆக்சனில் ஆட்டத்தின் முதல் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

இந்த டெஸ்ட் தொடரில் பும்ராவை ஓரளவுக்கு இங்கிலாந்து நன்றாக விளையாடியதாகவே சொல்லலாம். 200 பந்துகளுக்கு மேல் விக்கெட் எடுக்காமல் பும்ரா பந்துவீசி வருகிறார் என ஒரு புள்ளிவிவரம் திரையில் காட்டப்பட்ட சமயத்தில், உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தினார்.

என்ன மாதிரியான ஒரு பந்து அது! ஆடுகளம் சுத்தமாக ஒத்துழைக்கவில்லை, இங்கிலாந்து அணி நங்கூரம் போல விளையாடியது. விக்கெட் எடுத்தால் மட்டும்தான் இந்தியாவுக்கு வாழ்வு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு அபாரமான nip backer மூலம் கொஞ்சமே கொஞ்சம் பந்தை நகர்த்தி புரூக்கின் ஸ்டம்புகளை தகர்த்தார்.

இங்கிலாந்து அணி, வலுவான நிலைமைக்கு நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில் போப்பின் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார்.

ரிஷப் பந்த் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பெவிலியன் திரும்பிய நிலையில் மாற்று வீரராக விக்கெட் கீப்பிங் செய்த ஜூரெல் அபாரமான கேட்ச் பிடித்தார்.

இந்த இன்னிங்சில் இந்தியாவுக்கு நிறை கேட்ச் வாய்ப்புகள் கைக்கு எட்டவில்லை. பீல்டர்கள் மீது தவறில்லை என்றாலும் இன்னும் கவனமாக இருந்திருந்தால் இன்னும் சில விக்கெட்களை எடுத்திருக்கலாம்.

  • கேப்டன்சி, பேட்டிங் அபாரம்: கேப்டனானதும் புதுப்புது நுட்பங்களை வெளிக்காட்டும் சுப்மன் கில்
  • புதிய வரலாறு படைத்த இந்தியா: ஆகாஷ் தீப் அற்புத பந்துவீச்சில் தடம் புரண்ட இங்கிலாந்து
எப்போது இந்தியாவின் கைக்கு ஆட்டம் மாறும்?

ரூட்டிடம் சென்று, "பாஸ்பால் விளையாடு இப்போது" என சிராஜ் சைகை செய்ததும், 'போரிங் கிரிக்கெட்' என இங்கிலாந்தின் தற்காப்பு ஆட்டத்தை கில் கிண்டல் அடித்ததும் ஆட்டத்துக்கு சுவாரஸ்யம் கூட்டின.

மூன்றாவது, நான்காவது நாள்களில் சுழற் வீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக மாறும் என கணிக்கப்படும் சூழலில், குல்தீப் யாதவ் இல்லாமல் களமிறங்கியது சரியான முடிவா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

99 ரன்களுடன் களத்தில் உள்ள ரூட்டை இன்று விரைவில் ஆட்டமிழக்க செய்து, எஞ்சியுள்ள விக்கெட்களை விரைவில் வீழ்த்தினால் மட்டும்தான் ஆட்டம் இந்தியாவின் கைக்கு வரும். முழு உடற்தகுதியுடன் இல்லாத ஸ்டோக்ஸ் இன்று எப்படி இன்னிங்ஸை தொடங்கப் போகிறார் என்பதும் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் என கூறலாம்.

பாஸ்பால் பேச்சுகளை எல்லாம் உதறிவிட்டு பார்த்தால், லார்ட்ஸ் டெஸ்டில் முதல் நாளில் 251–4 என்பது நல்ல ஸ்கோர் என்றே சொல்ல வேண்டும்.

நான்காவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, நாளை பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தால், இந்தியா மிகப்பெரிய ஸ்கோரை குவித்தாக வேண்டும்.

ஒட்டுமொத்தமாக கட்டுக்கோப்பான பந்துவீச்சு, நேர்த்தியான பேட்டிங் என பக்கா டெஸ்ட் மேட்ச்சாக லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாள் மாறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.