ரூ.45 கோடி கையாடல்.... பால் நிறுவன மேலாளர் தற்கொலை!
Dinamaalai July 11, 2025 03:48 PM


ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் வசித்து வருபவர் 37 வயது நவீன் பஞ்சலால். இவர்  புழல் அடுத்த கதிர்வேடு, பிரிட்டானியா நகர் முதல் தெருவில் வசித்து வந்தார். இவர், சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் மேலாளராக கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், வருடாந்திர கணக்கு சமர்ப்பிக்கும்போது, இவர் ரூ.45 கோடி பணத்தை கையாடல் செய்ததாக  தெரியவந்தது. திருமலா பால் நிறுவன சட்ட ஆலோசகர்கள் இதுகுறித்து  காவல்துறையில்  புகார் கொடுத்துள்ளனர்.
இந்தப் புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக  நவீன் பஞ்சலாலை செல்போனில் தொடர்புகொண்டு பேசியபோது, அவர், விசாரணைக்கு நாளை வருகிறேன்.   பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் எனக் கூறி தொடர்பை துண்டித்துள்ளார். பின்னர், போலீசுக்கு பயந்துபோய், அங்கு புதிதாக கட்டப்படவுள்ள வளாகத்தில் உள்ள குடிசை வீட்டில் இருந்த மின்விசிறியில் நைலான் கயிறால் நவீன் பஞ்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தற்கொலை செய்வதற்கு முன்பாக மேலாளர் நவீன் பஞ்சலால் பால் நிறுவன அதிகாரிகள் மற்றும் தனது சகோதரி ஆகியோருக்கு மின் அஞ்சலில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘என்னை சந்தித்த நரேஷ் மற்றும் முகுந்த் ஆகிய இருவரும் மோசடி செய்த பணத்தை திருப்பி கொடுத்தாலும் ஜெயிலில் இருப்பாய் என மிரட்டினர். இதனால் அச்சமடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன். புகார் அளிக்க முடிவு செய்ததால் என்னுடைய எதிர்காலத்தை எண்ணி பயந்து தற்கொலை முடிவுக்கு வந்தேன். என்னுடைய தற்கொலைக்கு திருமலா பால் கம்பெனி நிர்வாகமே காரணம். மோசடி குறித்து வெளியே தெரிந்த பிறகு நான் அதை சரி செய்து விடுவதாகக் கூறி முதல் கட்டமாக ஜூன் 26ம் தேதி 5 கோடி ரூபாய் திருப்பி செலுத்தினேன். பின்னர் 3 மாதத்தில் மீதி தொகையை செலுத்தி விடுவதாக உறுதி அளித்தேன். இந்த மோசடியில் எனக்கு மட்டுமே தொடர்பு, வேறு யாருக்கும் தொடர்பில்லை.

பணம் கைமாறப்பட்ட நான்கு கணக்குகளில் இருந்து மொத்த பணமும் என்னிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த மோசடியில் வேறு யாரும் பயனடையவில்லை. இந்த மோசடி தொடர்பாக பால் நிறுவன அதிகாரிகள் புகார் ஏதும் அளிக்க வேண்டாம். பால் நிறுவனம் என்னுடைய சொத்து ஆவணங்களையும், பாஸ்போர்ட்டையும் காசோலைகளையும் வாங்கி வைத்துள்ளது. பாஸ்போர்ட்டை வாங்கி வைத்ததற்கான அத்தாட்சி கூட கொடுக்கவில்லை. இது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் எனக் கூறியபோதும் பால் நிறுவனம் ஏற்றுக்கொள்ளாமல் என்னை சித்ரவதை செய்தது.


எனவே, என்னுடைய சடலத்திலிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இப்போது உங்களால் எதையும் மீட்க முடியாது. (பால் நிறுவன அதிகாரிகள் பெயரை குறிப்பிட்டு) எனது சடலத்தை அலுவலக வாசலில் வைத்து பணத்தை வசூலித்துக் கொள்ளுங்கள். பால் நிறுவனத்தில் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. என்னுடைய மரணம் உங்களது சாம்ராஜ்யத்தை விரைவில் அசைத்துப் பார்க்கும்’ என நவீன் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தில், பால் நிறுவன அதிகாரிகள் மற்றும் தனது குடும்பத்தினர் என அனைவரையும் குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டு வருத்தத்தையும் நவீன் பதிவு செய்துள்ளார். 
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.