பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் பேருந்தில் பயணித்த 9 பேர் கிளர்ச்சியாளர்களால் அடையாளம் கேட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
மாகாணத்தில் சோப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவெட்டாவிலிருந்து லாகூருக்குச் சென்ற பேருந்தை தடுத்து நிறுத்திய ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள், பயணிகளின் அடையாள அட்டைகளை சரிபார்த்து, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த 9 பேரை மட்டும் கீழே இறக்கி, அவர்களை அங்கதேயே சுட்டுக் கொன்றனர்.
இந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என சோப் மாவட்ட உதவி ஆணையர் நவீத் ஆலம் தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்கான பொறுப்பை இதுவரை எந்த அமைப்பும் ஏற்கவில்லை. இருந்தாலும், கடந்த காலங்களில் பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்த இனவாத கிளர்ச்சிக் குழுக்கள், பஞ்சாப் மக்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தி வந்துள்ள வரலாறு உள்ளது.
அதேபோன்று, கடந்த மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களிலும் பஞ்சாப் மக்களை பஸ்ஸில் இருந்து இறக்கி வெறித்தனமாக சுட்டுக்கொன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
தற்போது குவெட்டா, லோரலை, மஸ்துங்க் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளது பாதுகாப்புப் படையினர் அதனை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் செயல்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் உள்ளதால், இந்த மாகாணம் தொடர்ச்சியாக கிளர்ச்சியாளர்களின் தீவிரத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது.