குஜராத் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு..!!
Top Tamil News July 11, 2025 04:48 PM

குஜராத்தில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில்  உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் மஹிசாகர் நதியின் குறுக்கே வடோதரா - ஆனந்த் பகுதிகளை இணைக்கும் வகையில் பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 43 ஆண்டுகள் பழமையான இந்த பாலத்தை அப்பகுதி மக்கள்  போக்குவரத்திற்கான பிரதான பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலத்தின் வழியாகவே கனரக வாகனங்கல் உள்பட அனைத்து வாகனங்களும் சென்று வந்துள்ளன.  இந்நிலையில் கடந்த 9ம் தேதி  வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோதே பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் , ஆட்டோ உள்ளிட்டவை மஹிசாகர் ஆற்றுக்குள் விழுந்தன. மேலும், டேங்கர் லாரி ஒன்று இடிந்து விழுந்த பாலத்தின் மேலிருந்து விழும் நிலையில் தொங்கிக்கொண்டிருந்தது.  


 
ஏராளமான வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததால் பலர் காணாமல் போயினர்.  இந்த பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு லாரிகள், 2 வேன்கள் மற்றும் ஆட்டோ ,  இருசக்கர வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததாக கூறப்பட்டது.  முதல் நாளில் 10 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.  இந்நிலையில் குஜராத்தில் பாலம் உடைந்து ஆற்றுக்குள் வாகனங்கள் விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.  இன்னும் சிலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.  

இந்த துயர நிகழ்வையடுத்து சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக பாலம் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், பாலத்தை சீரமைக்க வேண்டும் என்றும் வலுயுறுத்தி வந்த நிலையில் அரசு அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வரும் ஆட்சியர் அணில் தமேலியா உள்ளிட்ட அதிகாரிகள், விரைவில்  பாலம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.