தங்கையின் கணவர் கொலை வழக்கில் சகோதரர் மற்றும் உறவினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கதிரவன் தீர்ப்பு வழங்கினார்.
கடந்த 2015-ம் ஆண்டுதிருநெல்வேலி மாவட்டம், இட்டமொழி கிராமத்தில் குடுப்ப தகராறினால், மனைவியின் சகோதரர் மற்றும் உறவினர் ஒருவர் சேர்ந்து 27 வயதான துரைசிங் என்பவரை கொலை செய்த வழக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான இட்டமொழியைச் சேர்ந்த முத்துக்குமரன் மற்றும் மணப்பாடு பகுதியைச் சேர்ந்த குமார்முத்துக்குமார் ஆகிய 2 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது .இதையடுத்து முதலாவது குற்றவாளியான முத்துக்குமரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.4,000 அபராதம் மற்றும் 2வது குற்றவாளியான குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து திருநெல்வேலி நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கதிரவன் தீர்ப்பு வழங்கினார்.
மேலும் இவ்வழக்கில் திறம்பட சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் அதிகாரிகள், காவலர்கள், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்குரைஞர் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
இந்தநிலையில் 2025-ம் ஆண்டில் இதுவரை 15 கொலை வழக்குகளில் குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 54 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.