மதுபோதையில் தகராறு...செல்போனுக்காக தனியார் விடுதி ஊழியர் அடித்து கொலை
Top Tamil News July 26, 2025 08:48 PM

தனியார் விடுதி ஊழியரை தாக்கி கொலை செய்த சிறுவன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் காந்தி (55). இவர் ஈரோட்டில் தங்கி அங்குள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காந்திக்கு விடுமுறை என்பதால் நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு இரவு 11.30 மணி அளவில் ஈரோடு சி.என்.சி கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 4 வாலிபர்கள் மதுபோதையில் காந்தியிடம் தகராறில் ஈடுபட்டு அவரின் செல்போனை பறித்து கொண்டு காந்தியை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காந்தி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அந்த வழியாக வந்த சிலர் ஒருவர் படுகாயத்துடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு காந்தியின் நிலைமை மேலும் மோசம் அடைந்ததால் உயர் சிகிச்சைக்காக சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஈரோடு கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (21), சந்தோஷ் (20), நந்தேஸ்வரன் (24) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. இதையடுத்து அந்த 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் காந்தியை தாக்கியதை ஒப்புக்கொண்டனர். அதுமட்டுமின்றி அந்த வழியாக வந்த வட மாநில வாலிபர் ராஜேஷ் என்பவரையும் அந்த கும்பல் தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காந்தி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதனை அடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர். கைதான 4 பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவர்கள் இதே போன்று சிலரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டிருக்கலாம் என கோணத்தில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.