பீகார் மாநிலத்தில் ஓட்டப்பந்தய போட்டியில் மயங்கி விழுந்த வீராங்கனை ஒருவர், மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டபோது, ஓட்டுநர் மற்றும் டெக்னீசியனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பீகாரில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற ஓர் இளம் பெண், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக தயாராக நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விஜயகுமார் மற்றும் டெக்னீசியன் அஜித்குமார் ஆகிய இருவரும், ஓடும் ஆம்புலன்ஸில் மயக்கத்தில் இருந்த அந்த இளம் பெண்ணை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட வீராங்கனை காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் டெக்னீசியன் கைது செய்யப்பட்டனர்.
இருவர் மீதும் விசாரணை நடத்தப்படும் என்றும், அதன்பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், தகுந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓடும் ஆம்புலன்ஸில், மயக்கமான நிலையில் இருந்த ஒரு வீராங்கனை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.