அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மியாமி நகரம் நோக்கி புறப்பட இருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ‘ஃபிளைட் 3023’ என்ற பயணிகள் விமானம் சனிக்கிழமை அன்று புறப்பட முயன்ற தருணத்தில் திடீரென அதன் சக்கரத்தில் தீப்பிடித்தது. இந்த பயணிகள் விமானம் போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்ததாகவும், சுமார் 2.45 மணியளவில் ஓடுபாதையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
விமானம் ஓட முயன்றபோது, அதன் இடது பின்புற சக்கரத்தில் இருந்து திடீரென தீ மற்றும் கரும்புகை வெளியானது. இதனை கண்ட பணியாளர்கள் உடனடியாக பயணிகளை அவசர சறுக்குகளின் மூலம் வெளியேற்றினர். இந்த பரபரப்பான சூழலில் விமானத்திலிருந்த அனைத்து பயணிகளும் — மொத்தம் 173 பேர் மற்றும் 6 பணியாளர்கள் — பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பயணிகள் சிலர் அலறியடித்து வெளியேறும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
“>
இந்தச் சம்பவத்தில் குறைந்தது ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டதாகவும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 6 பயணிகள் சிறுகாயங்களுக்காக மருத்துவ குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்து, விமானத்தின் டயரில் ஏற்பட்ட கோளாறினால் ஏற்பட்டதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.