நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ‘பிரதமர் விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா’ எனப்படும் இந்த திட்டம், வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. மொத்தமாக ரூ.99,446 கோடி செலவில் தொடங்கப்படும் இந்த திட்டத்தின் மூலம், இரண்டு ஆண்டுகளில் 3.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இலக்குடன் செயல்பட இருக்கிறது.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, 1.92 கோடி பேர் முதல் முறையாக வேலைவாய்ப்பில் நுழைய வாய்ப்பு பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டை 2047க்குள் வளர்ந்த நாடாக மாற்றும் மோடியின் ‘விக்சித் பாரத்’ கனவின் ஒரு பகுதியாகவே இந்த வேலைவாய்ப்பு திட்டம் அமைகிறது. இதற்கான அமைச்சரவை ஒப்புதலும் பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஊழியர்களை ஊக்குவிக்க, மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்களுக்கு பி.எப். (PF) கணக்கில் சம்பளத்தை இரு தவணைகளாக செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், நீடித்த வேலைவாய்ப்பு வழங்கும் முதலாளிகளுக்கு, ஒவ்வொரு ஊழியருக்கும் மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகையாக 2 ஆண்டுகள் வரையில் வழங்கப்படும். வேலைவாய்ப்பை பெருக்கும் இந்த திட்டம் தொழில்துறைக்கும், தொழிலாளர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.