பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை: காரணம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு..!
WEBDUNIA TAMIL July 27, 2025 07:48 PM

பிரதமர் நரேந்திர மோடி இன்று அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தரும் நிலையில், அவரது நிகழ்ச்சிகளில் தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை. உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பிரதமர் பங்கேற்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நண்பகல் 12 மணியளவில் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலை வந்தடைவார். கோயில் நுழைவு வாயிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, பெருவுடையார், பெரியநாயகி அம்மன், சண்டிகேசுவரர், விநாயகர், முருகன் ஆகிய சந்நிதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.

மத்திய கலாசாரத் துறை சார்பில் நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பிரதமர் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த விழாவில் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா ஆகியவை கொண்டாடப்படுகின்றன. மேலும், பிரதமர் ஒரு நினைவு நாணயத்தையும் வெளியிடுகிறார்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.