தேனி கொடுவிலார்பட்டி பாண்டியராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் சட்டவிரோதமாக மணல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் தேனி தாசில்தார் சதீஷ்குமார் தலைமையிலான வருவாய் துறையினர் கடந்த வியாழக்கிழமையன்று அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அந்த தென்னந்தோப்பில் 20-க்கும் மேற்பட்ட மணல் குவியல்கள் இருந்தன. அவற்றில் சுமார் 30 யூனிட் ஆற்று மணல் இருந்தது. தேனியில் ஆற்று மணல் அள்ளுவதற்கு தடை இருக்கும் நிலையில் இவ்வளவு மணலும் யாரால் எங்கிருந்து அள்ளப்பட்டது என விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த மணலைக் கைப்பற்றி தேனி தாலுகா அலுவலகத்திற்குக் கொண்டுசென்றனர். மணல் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டாலும் யார் மீதும் இரண்டு நாட்களாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்பது சர்ச்சையானது. மணல் இருந்தது தெரியாமால் அதனை தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தும் வேலைகளை மட்டுமே மறைமுகமாக செய்து வந்தனர்.
தென்னந்தோப்பில் பதுக்கி வைத்த ஆற்று மணலை நேரடியாக சென்று கைப்பற்றிய தாசில்தார் சதிஷிடம் விளக்கம் கேட்டோம், "மணல் இருப்பது கண்டுபிடிக்கபட்ட தோட்டம் ஞானசேகரன் என்பவருக்குச் சொந்தமானது. ஞானசேகரனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிவபெருமாள் என்பவருக்கு லீசுக்கு விட்டிருந்தார். அவர் தான் இவ்வளவு மணலையும் வாங்கி தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்தார் என ஒப்புக் கொண்டார். ஆனால் யாரிடமிருந்து இந்த மணல் வாங்கினார் என்பதை அவர் சொல்ல மறுக்கிறார். இந்த மணலை பொதுப்பணித்துறையினர் தான் கைப்பற்ற வேண்டும். அவர்கள் இரண்டு நாள்களாக எடுக்காததால் நான் கைப்பற்றினேன். ஆற்று மணல் என்பதால் பொதுபணித்துறையினர் தான் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
மணல் திருட்டு குறித்து பொதுபணித்துறை (PWD) உதவிப் பொறியாளர் ஆரிப் பேசும்போது," மணலை தாசில்தார் கைப்பற்றியுள்ளார். இனிமேல் ஆற்றில் மணல் அள்ளாதவாறு தீவிரமாகக் கண்காணிப்போம் என்றார் ". தற்போது மணல் அள்ளியதற்கு ஏதேனும் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனக் கேட்டதற்கு, "தாசில்தார்தான் மணலைக் கைப்பற்றினார் அவர்தான் புகார்கொடுத்து வழக்குப் பதிய வேண்டும்" எனச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார்.
மணல் திருட்டு உறுதியானாலும் யார் மீதும் புகார் தெரிவிக்காமல் தப்பிக்கும் அதிகாரிகளால் அரசின் மீதும் சட்டத்தின் மீதான நம்பிக்கை கேள்விக்குள்ளாகியிருக்கிறது.