மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, 30 ஆண்டுகளாக வழக்கில் சிக்கியிருந்த ஒருவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் தற்போது விடுதலை அளித்துள்ளது. கீழ் நீதிமன்றம் அவரை கடந்த 1998 ஆம் ஆண்டு குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தது. ஆனால், மனைவியின் தோற்றம் மற்றும் சமையல் குறித்த கேலியை ‘துண்புறுத்தல்’ எனக் கருத முடியாது, இது ஒரு சாதாரண திருமண வாழ்க்கை தகராறு என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த வழக்கில், கணவர் 498A (துண்புறுத்தல்) மற்றும் 306 (தற்கொலைக்குத் தூண்டல்) பிரிவுகளின் கீழ் குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ஒரு வருடமும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், நீதிபதி எஸ்.எம். மோடக் தலைமையிலான மும்பை உயர்நீதிமன்றம், “தோற்றம், சமையல் குறித்த விமர்சனங்கள் திருமணத் தகராறாக மட்டுமே கருதப்படும். இது ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக நியாயப்படுத்த முடியாது. திருமணத்திலுள்ள ஒவ்வொரு சண்டையையும் குற்றமாகக் கருத முடியாது” என விளக்கம் அளித்தார்.
மனைவி தற்கொலை செய்ததற்குப் பிறகு, கணவரும் அவரது தந்தையும் மீது வழக்கு பதியப்பட்டது. மனைவியின் உணவு குறித்தும் தோற்றம் குறித்தும் அவதூறு பரப்பியதாக கூறப்பட்டதிலும், அது குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்க வேண்டியதாக இல்லையென நீதிபதி கூறினார். “இந்த தற்கொலைக்குத் தூண்டியதற்கான நேரடி ஆதாரம் இல்லை” என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இந்த ஜோடி 1993ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது. 1998ம் ஆண்டு மனைவி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து வழக்கு தொடங்கப்பட்டது. கணவர் ஒரு ஆடு மேய்ப்பவராக இருப்பதால், வீட்டை விட்டு நீண்ட நேரம் வெளியே இருப்பதாகவும், மனைவி தாய் வீட்டில் துன்பத்தைப் புகார் அளித்திருந்ததையும் உயர்நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. இருந்தாலும், அரசு தரப்பால் தாக்கப்படும் வழக்கில் உரிய ஆதாரங்கள் இல்லாததால், குற்றவாளி என நிரூபிக்க முடியவில்லை என்றும் நீதிபதி மோடக் தன் தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.