இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் மான்செஸ்டரில் உள்ள மைதானத்தில் கடந்த 23ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து அணி 669 ரன்களும் எடுத்தது.
311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு, ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகியோர் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதன்பிறகு, ஜோடி சேர்ந்த கேப்டன் கில் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்தனர். நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. கில் (78), ராகுல் (87) அவுட்டாகாமல் இருந்தனர்.
தொடர்ந்து, 5ம் நாள் ஆட்டம் தொடங்கியதும் கே.எல்.ராகுல் 90 ரன்கள் எடுத்த போது, ஸ்டோக்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ., முறையில் அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கில் 103 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா இணை, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இருவரும் சதத்தை நோக்கி நெருங்கினர். அப்போது, 15 ஒவர்கள் எஞ்சியிருந்த நிலையில், போட்டியை முன்கூட்டியே முடித்துக் கொள்ள இந்திய வீரர்களிடம் இங்கி., கேப்டன் ஸ்டோக்ஸ் கேட்டுள்ளார். ஆனால், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா இருவரும் சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்ததால், அதனை இந்தியா நிராகரித்தது. அதன்பிறகு, ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சதம் அடித்தனர். இது வாஷிங்டன் சுந்தருக்கு முதல் சதமாகும். அதன்பிறகு, போட்டி முன்கூட்டியே முடித்துக் கொள்ள இரு அணிகளும் சம்மதித்தன. இதனால், 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது.
2வது இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 425 ரன்கள் குவித்திருந்தது. ஜடேஜா (107), வாஷிங்டன் சுந்தர் (101) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் சேர்ந்து 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த ஆட்டம் சமனில் முடிந்தாலும், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி பின்னிலையில் உள்ளது.