லக்னோ நகரில் உள்ள பூல்பாக் சங்கர்புரி காலனியில் இன்று காலை நிகழ்ந்த துயர சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீதியில் சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில், பந்து அருகிலுள்ள மின் டிரான்ஸ்பார்மர் பகுதியில் சென்றது. பந்தை எடுக்க முயன்ற 7 வயது ஃபஹத் என்ற சிறுவன், டிரான்ஸ்பார்மரைத் தொட்டுவிட்டார். அதே நேரத்தில் மின்சாரம் தாக்கியதில் அவர் கீழே விழுந்தார்.
இதைக் கண்ட நண்பர்கள் அலறியடித்து அக்கம் பக்கத்தவரை அழைத்தனர். உடனடியாக குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், சில நிமிடங்களிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு காரணமாக, டிரான்ஸ்பார்மரின் பாதுகாப்பு வலை திறந்த நிலையில் இருந்தது என்பதே கூறப்படுகிறது. “இதற்கு முன்பே பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தோம். ஆனால் யாரும் பார்த்துக்கொள்ளவில்லை. அந்த அலட்சியத்தால்தான் ஒரு குழந்தை உயிரிழந்திருக்கிறது” என புலம்புகின்றனர் அப்பகுதி மக்கள்.
“>
தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரியத்தினரிடமிருந்து பதில்கள் கோரப்பட்டுள்ளன. இந்த சம்பவம் மின்வாரியத்தின் பாதுகாப்பு முறைகள் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது. குழந்தை உயிரிழந்ததால் அந்த பகுதியில் துயரமும் கோபமும் நிறைந்த சூழல் நிலவுகிறது.