தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது ஸ்டைல், வசீகரமான நடிப்பு ஆகியவற்றால் மட்டுமின்றி, தனது அபாரமான நேரம் தவறாமை மற்றும் வேலையில் காட்டும் அர்ப்பணிப்பிற்காகவும் பெயர் பெற்றவர். அவரது சினிமா வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளில் ஒன்று, ‘படிக்காதவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சம்பவம். ரஜினியின் இந்த தனித்துவமான குணம், சக நடிகர் ஜெய்சங்கரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ஜெய்சங்கர் வியந்த ரஜினி:
‘படிக்காதவன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயம் அது. பொதுவாக படப்பிடிப்பு காலை 7 மணிக்குத்தொடங்கும். வழக்கம்போல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சரியாக காலை 7 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டார். ஆனால் ஜெய்சங்கர் மதியம் 2 மணிக்கு தான் வந்தார். அப்போது இயக்குனர் ராஜசேகரை பார்த்து ஜெய்சங்கர், ‘இந்த ரஜினி எத்தனை மணிக்கு ஷூட்டிங்கிற்கு வந்தார்’ என்று கேட்டார். அதற்கு ராஜசேகர், அவர் சரியாக 7 மணிக்கு வந்துவிட்டார் சார்’ என்று சொல்ல, அப்போது நடிகர் ஜெய்சங்கர் வியப்புடன், “நானும் ரஜினியும் காலையில் 5 மணி வரைக்கும் ஒன்றாக குடித்து கொண்டிருந்தோம். ஆனால், ரஜினி எப்படி 7 மணிக்கெல்லாம் படப்பிடிப்புக்கு வந்துவிட்டார்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார். இந்த தகவலை படிக்காதவன் படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்த விஜய்பாபு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் தத்துவம்: “வேலைக்குத் துரோகம் செய்யக் கூடாது!”
ஜெய்சங்கரின் இந்த வியப்பு, ரஜினியின் உழைப்பு மீதான பக்தியையும், தயாரிப்பாளர்கள் மீதான பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துகிறது. ரஜினிகாந்த் எப்போதும் ஒரு விஷயத்தில் உறுதியாக இருப்பார்: “தயாரிப்பாளருக்கு எந்த விதத்திலும் நம்மால் நஷ்டம் வந்துவிடக் கூடாது.”
இது ரஜினியின் தனிப்பட்ட வாழ்வு மற்றும் தொழில் வாழ்வுக்கான ஒரு தத்துவமாகவே இருந்தது. அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அவர் செய்யும் வேலைக்கு எந்தவித துரோகமும் செய்யக் கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார். படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வருவது, காட்சிகள் எப்படி இருந்தாலும் தன்னால் முடிந்த சிறந்த நடிப்பை கொடுப்பது, படக்குழுவினருடன் ஒத்துழைப்பது என அனைத்திலும் ரஜினி ஒரு முன்மாதிரியாக இருந்தார்.
ரஜினியின் அர்ப்பணிப்பின் அடையாளம்:
இந்த சம்பவம் ரஜினிகாந்தின் தொழில் பக்திக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவரது இந்த அர்ப்பணிப்பான குணம், பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் அவரை ஒரு முன்னணி நட்சத்திரமாக நிலைநிறுத்தியுள்ளது. தயாரிப்பாளர்களின் முதலீட்டிற்கு மதிப்பு அளிக்கும் அவரது மனப்பாங்கு, இன்றும் பல இளம் நடிகர்களுக்கும் ஒரு பாடமாகவே உள்ளது. ‘படிக்காதவன்’ படப்பிடிப்பில் நடந்த இந்த சம்பவம், ரஜினியின் தொழில் நேர்மையையும், அவரது சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு பின்னால் இருக்கும் கடின உழைப்பையும் ஒருசேர வெளிப்படுத்துகிறது.