மத்தியப் பிரதேசத்தின் சிங்க்ரௌலி மாவட்டத்தில் அமைந்துள்ள என்.சி.எல். அமலோரி காலனியில், இரண்டு குரங்குகள் அட்டகாசம் செய்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவத்தில், ஊழியர் வினய் சிங் குரங்கு தாக்குதலால் தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து, முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் மேலும் நான்கு பேர் குரங்கு தாக்குதலால் காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் கூறுகையில், இந்த குரங்குகள் மனநிலை பாதிக்கப்பட்டவையாக இருக்கலாம் என்றும், வீடுகள், சாலையில் நடக்கும் மக்கள், குழந்தைகள் என யாரையும் விடாமமல் தாக்குவதாகவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கூட குரங்கு தாக்குதலுக்கு பயந்து உள்ளதாக புகார்கள் வருகின்றன.
வனத்துறையின் நடவடிக்கையின்மையை குற்றம் சாட்டும் பொதுமக்கள், இந்தக் குற்றங்களை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறை அதிகாரி திரிபாதி கூறுகையில், “அமலோரி பகுதி பசுமை சூழ்நிலையில் உள்ளதால் குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைகின்றன. தற்போது அவற்றை பிடிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன” என்றார். இருப்பினும், பொதுமக்கள் பாதுகாப்புக்காக உடனடி நடவடிக்கைகள் தேவை என வலியுறுகின்றனர்.