பீகார் மாநிலம் பெட்டியாவில் ஒரு வயது குழந்தை பாம்பைக் கடித்ததில் பாம்பு இறந்துவிட்டது. இதுதான் தற்போது மிகப்பெரிய செய்தியாக உருவெடுத்து பரபரப்பாகப் பேசப்படுகிறது.
கடிபட்ட பாம்பு, அதிக நச்சுள்ள நாகப்பாம்பு என்று குழந்தையின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை (2025, ஜூலை 24) நடைபெற்ற இந்த 'பாம்பு கடி' சம்பவத்திற்குப் பிறகு, அனைவரின் கவனத்தையும் அந்தக் குழந்தை ஈர்த்துள்ளது. பாம்பைக் கடித்த குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது.
இந்த வித்தியாசமான சம்பவம், பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் தலைநகர் பெட்டியாவில் நடைபெற்றது.
பெட்டியாவின் மஜ்ஹௌலியா தொகுதியில் மோச்சி பங்கட்வா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், சுனில் ஷா என்பவர் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
சுனில் ஷாவின் ஒரு வயது மகன் கோவிந்த் குமார், இந்த குழந்தை தான் பாம்பைக் கடித்ததாகக் கூறப்படுகிறது.
கோவிந்த் குமாரின் பாட்டி மதிசரி தேவி கூறுகையில், "கோவிந்தின் அம்மா வீட்டின் பின்புறம் வேலை செய்து கொண்டிருந்தார். விறகுகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தபோது விறகுகளுக்குள் இருந்து பாம்பு வெளியே வந்தது. அங்கே உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்த கோவிந்த் பாம்பைப் பார்த்ததும், அதைப் பிடித்து கடித்துவிட்டான். அப்போதுதான் நாங்கள் அதைக் கவனித்தோம். அது ஒரு நாகப்பாம்பு."
"பாம்பை பிடித்து கடித்த சிறிது நேரத்தில் குழந்தை கோவிந்துக்கு மயக்கம் வந்துவிட்டது. நாங்கள் குழந்தையை உடனடியாக மஜௌலியா ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றோம். அங்கிருந்து பெட்டியா மருத்துவமனைக்கு (அரசு மருத்துவக் கல்லூரி, GMCH) அனுப்பி வைத்தார்கள். குழந்தை இப்போது ஆரோக்கியமாக உள்ளது."
மஞ்சோலியாவின் உள்ளூர் பத்திரிகையாளர் நயாஸ் கூறுகையில், "மருத்துவமனையில் இருந்து அந்தக் குழந்தை சனிக்கிழமை (2025, ஜூலை 26) மாலை வீடு திரும்பியது. இந்த அதிசய சம்பவத்தைப் பற்றி தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. ஆடி மாதத்தில் பாம்புகள் வெளியே வருவது வழக்கம், அப்போது பாம்புக் கடி தொடர்பான சம்பவங்களும் நடைபெறும். ஆனால் இதுபோன்ற சம்பவம் எங்கள் பகுதியில் முதல் முறையாக நிகழ்ந்துள்ளது" என்றார்.
குழந்தை கோவிந்த் குமார் சம்பவத்தன்று (2025, ஜூலை 24) மாலை பெட்டியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் குமார் சௌரப், குழந்தை மருத்துவத் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.
"குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு வந்தபோது, குழந்தையின் முகம் வீங்கியிருந்தது. அதிலும் வாயைச் சுற்றி நன்றாகவே வீக்கம் இருந்தது. பாம்பை, அதன் வாய்க்கு அருகில் கடித்த குழந்தை, பாம்பின் ஒரு சிறு பகுதியை சாப்பிட்டுவிட்டதாகவும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்," என்று அவர் கூறுகிறார்.
"அந்த சமயத்தில் என்முன் இரண்டு குழந்தை நோயாளிகள் இருந்தனர். அதில் ஒரு குழந்தை நாகப்பாம்பை கடித்துவிட்டது, அடுத்து மற்றொரு குழந்தையை நச்சுள்ள பாம்பு கடித்துவிட்டது. இருவேறு விதமான சிகிச்சை அளித்த மறக்கமுடியாத சந்தர்ப்பம் அது. சிகிச்சையளிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளும் முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளனர்."
"ஒரு நாகப்பாம்பு மனிதனைக் கடிக்கும்போது, அதன் நச்சு நம் ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் நுழையும் விஷம் நியூரோடாக்சிசிட்டியை ஏற்படுத்துகிறது, இது நமது நரம்பு மண்டலத்தைப் பாதிப்பதால் மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது" என்று டாக்டர் குமார் சௌரப் பிபிசியிடம் கூறினார்.
"மனிதன் விஷமுள்ள பாம்பைக் கடிக்கும்போது, அதன் நச்சு வாய் வழியாக நமது செரிமான அமைப்பை நேரடியாக சென்றடைகிறது. மனித உடல் அந்த விஷத்தை நடுநிலையாக்கி நச்சை வெளியேறுகிறது. அதாவது, மனிதர்களை பாம்பு கடித்தாலும், மனிதன் பாம்பைக் கடித்தாலும், இரு சந்தர்பங்களிலும் விஷம் வேலை செய்யும். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் விஷம் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது, மற்றொன்றில் மனித உடல் விஷத்தை நடுநிலையாக்குகிறது" என்று மருத்துவர் சௌரப் விளக்கமளித்தார்.
இருப்பினும், ஒரு மனிதன் பாம்பைக் கடித்தால், அது மோசமான விளைவையும் ஏற்படுத்தலாம் என்று டாக்டர் குமார் சௌரப் கூறுகிறார்.
"ஒரு மனிதன் பாம்பைக் கடிக்கும்போது, அவரின் உணவுக் குழாயில் அல்சர் போன்ற பிரச்னை இருந்தால் அல்லது ரத்தப்போக்கு ஏற்பட்டால் நிலைமை மோசமடையக்கூடும்" என்று டாக்டர் குமார் சௌரப் விளக்குகிறார்.
மழைக்காலத்தில் பாம்புக் கடித்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும்
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 80 ஆயிரம் முதல் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாம்புக் கடியால் இறக்கின்றனர்.
இவற்றில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 58 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இதன் காரணமாக, இந்தியா 'உலகின் பாம்பு தலைநகரம்' என்ற குறிச்சொல்லைப் பெற்றுள்ளது.
பீகார் மாநில சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் (HMIS) தரவுகளின்படி, ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை, பாம்பு கடியால் மாநிலத்தில் 934 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்தக் காலகட்டத்தில், பாம்புக் கடி காரணமாக 17,859 நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வந்தனர்.
ஆனால் மத்திய அரசின் அறிக்கையின்படி, நாடு முழுவதும் பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை 'குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளது'.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிக்கையின்படி, பெரும்பாலான பாம்புக் கடி சம்பவங்களில், மிகக் குறைந்த அளவிலான நோயாளிகளே மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். இதனால், பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை குறைவாகவே பதிவாகிறது.
மேலும், பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகளில் 70 சதவீதம் பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் நிகழ்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு