மகளிர் உதவித்தொகை பெரும் 14 ஆயிரம் ஆண்கள்! மிகப்பெரிய மோசடி அம்பலம்!
Seithipunal Tamil July 28, 2025 06:48 AM

மகாராஷ்டிராவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு உதவிக் கொடுக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட "லட்கி பஹின் யோஜனா" திட்டத்தில் பெரிய அளவிலான மோசடி வெளியாகியுள்ளது.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை நடத்திய ஆய்வில், 14,298 ஆண்கள் போலியான பெயர்களில் பதிவு செய்து, சுமார் ரூ.21.44 கோடி நிதி பெற்றிருந்தது தெரியவந்தது.

ரூ.2.5 லட்சத்துக்கு குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 21 முதல் 65 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் இந்தத் திட்டம் 2023ல் தொடங்கப்பட்டது.

மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படும் என துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்தார். இதன் முதல் ஆண்டிலேயே தகுதியற்ற பயனாளிகள் காரணமாக ரூ.1,640 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண்களுக்கு மட்டும் உதவி வழங்கப்படும் என்ற விதி இருந்தும், மூன்றாவதாக 7.97 லட்சம் பெண்கள் பதிவு செய்து ரூ.1,196 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் 65 வயதை கடந்த 2.87 லட்சம் பெண்கள் இந்தத் திட்டத்தில் பலன் பெற்றதால், ரூ.431.7 கோடி இழப்பும், நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ள 1.62 லட்சம் குடும்பங்களும் திட்டத்தில் சேர்ந்து நிதியை பெற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஜூன் 2025 முதல் 26.34 லட்சம் தகுதியற்ற பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தகுதியுள்ள 2.25 கோடி பயனாளிகளுக்கு மட்டும் ஜூன் மாதத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அதிதி தட்கரே அறிவித்துள்ளார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.