மகாராஷ்டிராவின் நாலாசோபாரா மாவட்டத்தில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி நடந்த கொலை சம்பவம், தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் காணாமல் போனதாக கூறப்பட்ட 34 வயதான விஜய் சௌகான், சில தினங்களுக்குப் பிறகு வீட்டிலேயே புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலைக்கு பின்னால் இருந்த அதிர்ச்சி காரணங்கள் தற்போது போலீசாரின் விசாரணையில் வெளியாகியுள்ளன.
விசாரணையின் மூலம் தெரியவந்த முக்கிய தகவல்படி, விஜயின் மனைவி குடியா தேவி(28), கடந்த சில ஆண்டுகளாகவே மோனு விஷ்வகர்மா (23) என்ற இளைஞருடன் கள்ள உறவில் இருந்துள்ளார். ஜூலை 5-ஆம் தேதி இரவு, விஜய் திடீரென வீடு திரும்பியபோது, அவரது மனைவி மோனுவுடன் உல்லாசமாக இருப்பதை கண்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், தேவியை விஜய் தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த உறவை பாதுகாக்கும் நோக்கத்தில், தேவி தனது கணவரை கழுத்தை நெரித்து கொன்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலைக்கு பிறகு, மோனுவும் திட்டமிடுதலில் ஈடுபட்டு, சடலத்தை மறைக்கும் செயல்களில் முழுமையாக உதவியுள்ளார். இருவரும் வீட்டு உள்ளே வாட்டர் டாங்க் வைப்பது போல வேலைக்காரர்களை அழைத்து, 6 அடி நீளமும் 4 அடி ஆழமும் கொண்ட குழியை தோண்டி, அதில் விஜயின் உடலை புதைத்துள்ளனர். மேல் பகுதியில் சிமென்ட் அடித்து மூடி, அந்த இடத்தை மாற்றி வைத்தனர்.
விஜய் காணாமல் போனதை சந்தேகித்த அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதில் முக்கிய திருப்பமாக இருந்தது என்னவென்றால் தேவி தப்பிச் செல்லும் முயற்சியில் தனது மொபைல் போனை அணைத்திருந்தார். ஆனால் கடந்த வாரம் தவறுதலாக மொபைலை இயக்கியதன் மூலம், போலீசார் அவரை புனேயில் கண்டுபிடித்தனர். பின்னர் மோனுவும் கைது செய்யப்பட்டார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூலை 30 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.