நம்ம சாமி! நம்ம கோவில்! நாமே பாதுகாப்போம்! Dhinasari Tamil %name%
நம்ம சாமி! நம்ம கோவில்! நாமே பாதுகாப்போம்!! – என்று இந்து முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:
சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவில் நிதியில் கட்டிடங்கள் கட்டுவது சம்பந்தமான பொதுநல வழக்கில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 35 ஆயிரம் கோவில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறவில்லை என்றும் 19 ஆயிரம் கோவில்களில் மட்டுமே ஒருகால பூஜை திட்டம் நடைபெறுகிறது என்றும், ஆனால் கோவில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலமும், 23 ஆயிரம் கடைகளும், 75,500 கட்டிடங்கள் இருந்தும் வருஷ வருமானம் 345 கோடி என்றும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
அப்படி என்றால் கோவில் நிலத்தில் ஏக்கருக்கு ஒரு ரூபாய் என்ற அளவிலும் கூட இல்லை என்பதும், கட்டிட வாடகை சதுர அடி வாடகை எவ்வளவு எவ்வாறு நிர்ணயிக்கபட்டுள்ளது என்றும் கேள்வி எழுகிறது. இதில் கல்யாண மண்டபம் வாடகை, கோவில் இடங்களில் அரசு அலுவலகங்கள் வாடகை எந்த கணக்கில் வருகிறது?
கோவில் நகைகளை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக டெபாசிட் செய்த வருமானம் எதில் சேர்க்கப்படுகிறது?
மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் போன்ற பல கோவில்களில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை பல கோடி வருவது எங்கே போகிறது?
இந்து சமய அறநிலையத்துறையின் அனாவசியமான நிர்வாக செலவுகள், பெருகிவிட்ட ஊழல், முறைகேடுகளால் கோவில் நிதி சுரண்டப்படுகிறது என்பதால் கோவில் வருவாய் காணாமல் போகிறது.
ஒருகால பூஜை நிதி என்ற பெயரில் நிதியை ஒதுக்கி வழிபாடு இல்லாத கோவிலுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படுவதாக தெரிகிறது. மாதம் ஆயிரம் என்றால் ஒரு நாளைக்கு ரூ.30/-. இந்த முப்பது ரூபாய் வைத்து கோவிலில் பூஜை செய்ய முடியுமா? இது பூசாரியின் சம்பளமா? அல்லது கோவில் வழிபாடு நடத்த எண்ணெய் தேங்காய் வாழைப்பழம் வாங்க முடியுமா? ஒருகால பூஜை திட்டம் என்ற பெயரில் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது என்றே பக்தர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
எவ்வளவு வருமானம் வந்தாலும் அதில் பத்து முதல் பதினைந்து சதவீகிதத்தை அரசு இந்து சமய அறநிலையத்துறை செலவினங்களுக்கு எடுத்துக்கொள்கிறது. ஆனாலும் அதன் அலுவலகம் நடப்பது கோவிலில். அதற்கான மின்கட்டணம் முதல் டீ செலவு வரை கோவில் வருமானத்தில். இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சொகுசு வாகனம் கூட கோவில் வருமானத்தில் வாங்கப்படுகிறது. அந்த காருக்கான பெட்ரோல் பராமரிப்பு செலவும் கோவில் உண்டியல் காசில் செய்யப்படுகிறது.
அப்படியிருக்க நிர்வாக செலவிற்காக எடுக்கும் நிதி எவ்வளவு? வருவாய் இல்லை என்று கூறும் இந்து சமய அறநிலையத்துறை, அந்த துறை அதிகாரிகளுக்கு ஆடம்பர வாகனம், அதற்கு எரிபொருள் பராமரிப்பு என ஏன் செலவு செய்கிறது??? அதற்கு மட்டும் வருவாய் வருகிறதா? ஒரு கால பூஜை செய்ய மட்டும் வருவாய் இல்லையா?
இத்தகைய அவல நிலையை போக்க வேண்டும் என்பது பக்தர்களின் ஆர்த்தெழும் கோரிக்கை ஆகும்.
இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் “நம்ம சாமி, நம்ம கோவில், நாமே பாதுகாப்போம்” என்ற அறைகூவலை பக்தர்களிடம் கொண்டு சென்று சேர்க்க இருக்கிறது இந்து முன்னணி.
நம்முடைய சாமி, கோவில் என்ற உணர்வு வரும்போது, கோவிலை சீரழித்து அழிக்கும் தமிழக அரசின் சதியை மக்கள் புரிந்து கொள்ள முடியும்.
கோவிலை திட்டமிட்டு சிதைத்து, கோவில் சொத்துக்களை சுரண்டும் போக்கை தட்டிக்கேட்கும் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். ஒவ்வொரு ஊரிலும் கிராமத்திலும் உள்ள பக்தர்கள் தங்கள் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை பாதுக்காக்க துடிப்புடன் களத்தில் இறங்குவார்கள்.
கோவில் நிர்வாகம் என்ற பெயரில் கோவிலில் அரசியல் செய்யும் அராஜகம் முடிவுக்கு வரும்.
கோவில் நிர்வாகம் நடத்த தெரியாத இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக கோவிலை விட்டு வெளியேற வேண்டும். கோவிலில் அரசியல் நடத்தி கோவில் நிதியை சுரண்டும் அவலம் முடிவுக்கு வர வேண்டும்.
இதுவே இந்த அதிகாரிகளின் சொத்தாக இருந்தால் சுரண்ட அனுமதிப்பார்களா? கோவில் காசில் சம்பளம் வாங்கி வாழும் அதிகாரிகள், இந்து தெய்வங்களுக்கு விசுவாசமாக இல்லாமல், அரசியல்வாதிகளுக்கு விசுவாசமாக ஊழலுக்கு துணைபோவது நன்றி கெட்ட செயல் தானே..
எனவே இந்துக்கள் நமது சாமி, நமது கோவில் என்ற உணர்வுடன் கோவிலை பாதுகாக்க முன்வர வேண்டும். வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்த செய்தியை உரக்க குரல் கொடுப்போம். தமிழகத்தின் அனைத்து கோவில்களையும் பாதுகாக்கும் அறப்பணிக்கு தோள் கொடுப்போம்.
நம்ம சாமி! நம்ம கோவில்! நாமே பாதுகாப்போம்! News First Appeared in Dhinasari Tamil