உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள டெஹ்ரா மில்க் கிராமத்தைச் சேர்ந்த ருச்சி (வயது 25) என்ற டிஜிடி படித்து வந்த மாணவி, கடந்த சில நாட்களாக ஒருவர் வழியாக மிரட்டல் மற்றும் பணம் பறிப்பு துன்புறுத்தலால் அதிக மன அழுத்தத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழலில், கடந்த 31ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் வீட்டின் அறையில் கயிற்றில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
தற்கொலைக்குச் சில மணிநேரங்களுக்கு முன்பாகவே ருச்சி தனது வலது கையில் தற்கொலைக் குறிப்பு எழுதி இருந்தது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த குறிப்பில், அதே கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவர்தான் தன்னை தற்கொலைக்கு தூண்டியுள்ளார் என்று அவர் எழுதியுள்ளார்.
அதாவது தற்செயலாக பைக்கில் ஒருவரோடு செல்லும் போது ருச்சியை அவரோடு சேர்த்து புகைப்படங்களை எடுத்து வைத்துவிட்டு, அவை வெளியாகிவிடும் என மிரட்டியுள்ளார் அருண். ஆரம்பத்தில் ₹5,000 பெற்ற பின்னும், தொடர்ந்து ₹50,000 வரை கேட்டு, பிளாக்மெயில் செய்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளான ருச்சி, மீண்டும் மீண்டும் மிரட்டப்படுவதை தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்டார். தற்கொலை செய்த பின்னர், அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.
ருச்சியின் தந்தை துஷ்யந்த் அளித்த புகாரின் பேரில், அருண் மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக் குறிப்பு, பெற்றோர் வாக்குமூலம் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிகழ்வு தொடர்பான விசாரணை இன்னும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. மாணவியின் தற்கொலை சம்பவம் அந்தக் கிராமத்தில் பெரும் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது.