மத்தியப் பிரதேச மாநிலம் டாமோ மாவட்டம் ஹடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி கிராமத்தில், மூடநம்பிக்கையின் பெயரில் நடத்திய கொடூரச் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் தாந்த்ரீகர் என்று கூறப்படும் ஒரு இளைஞர், பெண்கள் மற்றும் சிறுமிகளை மரத்தில் கட்டி வைத்து, முடியை இழுத்து, குச்சி கொண்டு அடித்து, சாம்பல் தூவி “பேய் மற்றும் தீய ஆவி வெளியேறும் சிகிச்சை” என்று கூறி கொடுமை செய்துள்ளார்.
மனிதாபிமானத்தையே கேள்விக்குள்ளாக்கும் இந்த செயல், அந்த பகுதியைச் சேர்ந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பதிவாகிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோவில், “தந்திர நீதிமன்றம்” என அழைக்கப்படும் பகுதியில் பல பெண்கள், குழந்தைகள் கூட்டமாகக் கூடியிருக்கும் காட்சிகள் தென்படுகின்றன. அந்த இளைஞர், ஒரு அரச மரத்தின் கீழ் “நீதிமன்றம்” நடக்கிறது என கூறி, அங்கு பேய்கள் இருப்பதாக மக்களை நம்ப வைக்கிறார். அதன்பின், மரத்தில் பெண்களை கட்டி வைத்து அவர்களை அடிக்கும் செயல் தெளிவாகக் காணப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் படோரியா கூறியதாவது, “வீடியோவில் உள்ள இளைஞரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவரை விரைவில் கைது செய்து விசாரணை நடத்தப்படும்.
பொதுமக்கள் இப்படிப் பட்ட மூடநம்பிக்கைகளை நம்பாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். தற்போது அந்த தாந்த்ரீகரை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இன்றும் அறிவியல் மற்றும் சட்டம் வளர்ந்து வரும் இந்த காலத்திலும், இத்தகைய மூடநம்பிக்கைகளை நம்பி பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது வன்முறை செய்யப்படுவது சமூகத்துக்கே பெரும் அவமானமாகும்.
இவை போன்ற கொடுமைகளை கடுமையாகக் கண்டித்து, இனி இவை நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை அரசு எடுத்துச் செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.