தெலுங்கானாவில் உள்ள பூபால பள்ளி சிங்கரேணி குரகுலாவில் ஓடேலு, லலிதா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களது வீட்டை ஒட்டி கொட்டகை அமைத்து ஏராளமான எருமை மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் சாலை விரிவாக்கம் செய்ய கொட்டகையை இடிக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அந்த நோட்டீஸ்க்கு ஓடேலு எந்த பதிலும் கூறவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் ஓடேலுவின் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் மாட்டுக் கொட்டகையை இடித்து தள்ளினர்.
இதனை கண்ட தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை ஓடேலு தனது மனைவி மற்றும் உறவினரின் எருமை மாடுகளை அங்குள்ள எம்எல்ஏ அலுவலக வளாகத்திற்கு கொண்டு சென்றார். அதை அலுவலக வளாகத்தில் கட்டி வைத்து எம்எல்ஏ தூண்டுதலின் பேரில் சட்டவிரோதமாக தனது மாட்டு கொட்டகையை இடித்து விட்டதாக போராட்டம் நடத்தினார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஓடேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் போராட்டத்தை கைவிட மறுத்ததால் காவல்துறையினர் அவரை கைது செய்ய முயன்றனர்.
அப்போது அவர் தன்னிடம் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட லலிதா மற்றும் அவரது உறவினர் காவல் துறையினர் அழைத்துச் சென்ற விசாரணை நடத்தி வருகின்றனர். ரஜினி நடித்த அண்ணாமலை சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.